Election bannerElection banner
Published:Updated:

`அண்ணனுக்குத்தான் சீட்; இல்ல அஞ்சுகத்துக்குத்தான் சீட்!’ - குழம்பி நிற்கும் தஞ்சை தி.மு.க-வினர்

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம்
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம்

``நம்ம அண்ணனுக்கு சீட் கன்ஃபர்ம் ஆகிடுச்சு. தலைமையில சொல்லிட்டாங்க. உற்சாகமாக வேலையைப் பாருங்க’’ என சொல்லியிருக்கிறார்கள். `அப்படியா...’ எனப் பலரும் ஆச்சர்யத்தோடு இந்தத் தகவலை தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கிய அதே நேரத்தில்...

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் யாராக இருக்கும் என்ற விவாதம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. இங்கு போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் கடந்த 5-ம் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்து முடிந்தது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார், அஞ்சும் பூபதி, சன்.ராமநாதன் உள்ளிட்ட பலர் நேர்காணலுக்குச் சென்றுவந்த நிலையில், இவர்களில் யாருக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலும் எகிறத் தொடங்கியிருக்கிறது.

நேர்காணலின்போது இவர்கள் ஒவ்வொருவரிடமும், தி.மு.க தலைவர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்டவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், இவர்களது ரியாக்‌ஷன் என்ன என்பதைவைத்து, சுவாரஸ்யமான விவாதங்களும், யூகங்களும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்தநிலையில்தான் தஞ்சை தி,மு.க தேர்தல் ஆலோசனைக் கூட்டம், உடன்பிறப்புகளை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தி.மு.க நேர்காணல்
தி.மு.க நேர்காணல்

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி நீண்டகாலமாக தி.மு.க-வின் கோட்டையாகவே திகழ்ந்துவந்தது. 1962-ம் ஆண்டு இங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பரிசுத்த நாடாரை, கருணாநிதி தோற்கடித்தார். 1971, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க-வைச் சேர்ந்த எஸ்.நடராஜன் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்றார். 1989, 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில்களில் தி.மு.க-வைச் சேர்ந்த உபயதுல்லா வெற்றிபெற்றார். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி, `தி.மு.க-வின் அசைக்க முடியாத கோட்டை’ எனப் பெயர் எடுத்திருந்த நிலையில்தான், கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக, 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ரங்கசாமி வெற்றிபெற்றார்.

இதை தஞ்சாவூர் தி.மு.க-வினர் தங்களுக்கு நேர்ந்த தன்மானப் பிரச்னையாகவே கருதினார்கள். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, இங்கு தங்களது கட்சி கண்டிப்பாக வெற்றிபெற்று, தஞ்சையை மீண்டும் தி.மு.க-வின் கோட்டையாக்கிவிட வேண்டுமென தி.மு.க தொண்டர்கள் சபதமேற்றார்கள். தஞ்சை தி.மு.க-வில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த, மறைந்த பூபதியின் மகளான அஞ்சுகம் பூபதிக்கு அப்போது சீட் வழங்கப்பட்டது. இவர் தஞ்சை தி.மு.க-வுக்கு மிகவும் ஜூனியர் என்பதால், சீனியர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், கட்சித் தலைமை சொல்லிவிட்டதால், அந்தத் தேர்தலில் தீவிரமாக வேலை பார்ப்பதுபோல் வெளியில் காட்டிக்கொண்டு உள்ளடி வேலைகளைச் சிலர் அரங்கேற்றினார்கள்.

அவற்றை முறியடித்து, தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றல் அப்போது அஞ்சுகம் பூபதிக்கு இல்லை. இதனால் அ.தி.மு.க வேட்பாளர் ரங்கசாமி வெற்றிபெற்றார். தனது கோட்டையை மீண்டும் ஒரு முறை கோட்டைவிட்டது, தஞ்சை தி.மு.க. 2019-ம் ஆண்டு நடைபெற்ற தஞ்சை தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தஞ்சை மாநகர தி,மு.க செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்தநிலையில்தான், இவர் மீண்டும் வாய்ப்பு கேட்டிருக்கிறார். தஞ்சை தி.மு.க-வின் முக்கியப் பிரமுகரும், தஞ்சை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் சகோதரருமான வழக்கறிஞர் ராஜ்குமார் தனக்கு சீட் கேட்டிருக்கிறார். தி.முக முன்னாள் வேட்பாளர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் சன்.ராமநாதன் உள்ளிட்ட இன்னும் பலர் சீட் கேட்டிருக்கிறார்கள். கடந்த 5-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடந்து முடிந்திருக்கிறது. இந்தநிலையில்தான் நேற்று தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகர, பேரூர், கிளைக் கழக செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், தி,மு.க தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர் அணி ஆகியோருக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

இதில்தான் அந்த அட்ராசிட்டி அரங்கேறியது என்கிறார்கள் தஞ்சை கழக உடன்பிறப்புகள். இதில் கலந்துகொண்ட டி.கே.ஜி.நீலமேகம் தரப்பினர் மிகுந்த உற்சாகத்தோடு ``நம்ம அண்ணனுக்கு சீட் கன்ஃபர்ம் ஆகிடுச்சு. தலைமையில சொல்லிட்டாங்க. உற்சாகமாக வேலையைப் பாருங்க’’ என சொல்லியிருக்கிறார்கள். `அப்படியா...’ எனப் பலரும் ஆச்சர்யத்தோடு இந்தத் தகவலை தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கிய அதே நேரத்தில்... அஞ்சுகம் பூபதி தரப்பினரோ ``நமக்குத்தான் சீட். உறுதி ஆகிடுச்சு. வேலையை ஆரம்பிங்க’’ எனச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் தஞ்சை தி.மு.க-வினர் குழம்பிப்போய் நிற்கிறார்கள்.

`வேட்பாளர் யாருனு கட்சித் தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்குறதுக்கு முன்னாடி இப்படிக் கூட்டத்துல சொல்றது, கட்சிக் கட்டுப்பாட்டுக்கு புறம்பானது. இதைக் கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்போறோம்’ என ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு