Published:Updated:

"தேர்தலுக்குப் பணம்; கொள்கை பரப்புச் செயலாளர் பதவி!"- புகழேந்திக்கு பதில் கூறும் தஞ்சை ரெங்கசாமி

புகழேந்தி, ஆளுங்கட்சியிடம் எதையே எதிர்பார்த்து, அ.ம.மு.க-வைத் தரமற்ற வார்த்தைகளால் விமர்சித்துவருவதாக தஞ்சாவூரில் ரெங்கசாமி தெரிவித்தார்.

ரெங்கசாமி
ரெங்கசாமி

அ.தி.மு.க பொதுச்செயலாளராக இப்போதும் சசிகலா தான் உள்ளார். அவர், அ.தி.மு.க-வில் இணைவதற்கு யாரிடமும் மனு போடவேண்டிய அவசியம் இல்லை. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் எல்லாம் ஒரு பொய் என அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி தஞ்சாவூரில் தெரிவித்தார்.

ரெங்கசாமி
ரெங்கசாமி

புகழேந்தி நடத்திய கூட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தஞ்சாவூரில் நேற்று, அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது, ``தஞ்சையில், அ.ம.மு.க-வின் போட்டி கூட்டத்தை புகழேந்தி கூட்டினார். அக்கூட்டத்தில், தஞ்சாவூர் மண்டலத்திலிருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை. மாறாக சேலம், கோவை பகுதியில் உள்ளவர்களை அழைத்துவந்து கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இதுபோன்ற கூட்டங்களை நடத்த புகழேந்திக்கு ஆளுங்கட்சி உதவுகிறது. அவர், ஆளுங்கட்சியிடம் எதையே எதிர்பார்த்து, அ.ம.மு.க-வைத் தரமற்ற வார்த்தைகளால் விமர்சித்துவருகிறார். அ.ம.மு.க-வை யாரும் கலைக்க முடியாது. தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய அதற்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகப் பதிவுசெய்து, பொதுவான ஒரு சின்னத்தைப் பெற்றுவிடுவோம்.

ரெங்கசாமி
ரெங்கசாமி

வரும் 2021-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, அ.தி.மு.க கூடாராம் காலியாகிவிடும். எல்லோரும் எங்களோடு இணைந்துவிடுவார்கள். அப்போது, சசிகலாவும் சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார். அவரது தலைமையில் தான் நாங்கள் இயங்குவோம்.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட புகழேந்தியிடம் பணத்தை கொடுத்தால், செலவு செய்யாமல் எடுத்துச் சென்றுவிடுவார் எனத் தெரியவந்ததால் அவருக்கு தினகரன் பணம் வழங்கவில்லை. அதேபோல், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கேட்டார், இரண்டையும் கொடுக்காத காரணத்தால்தான் அரசியல் நாகரிகமற்ற வார்த்தைகளால் புகழேந்தி பேசிவருகிறார்.

ரெங்கசாமி
ரெங்கசாமி

அ.ம.மு.க-விலிருந்து ஓரிருவர் அ.தி.மு.க-வுக்குச் சென்றால்கூட 100 பேர், 200 பேர் இணைந்ததாக மிகைப்படுத்திக் கூறி வருகின்றனர். அ.தி.மு.க பொதுச்செயலாளராக இப்போதும் சசிகலா தான் உள்ளார். அவர், அ.தி.மு.க-வில் இணைவதற்கு யாரிடமும் மனு போடவேண்டிய அவசியம் இல்லை. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் எல்லாம் ஒரு பொய்" என்று தெரிவித்தார்.