Published:Updated:

`உலகமே கொண்டாடும் விழா; ஆனா, உள்ளூர் அமைச்சர்கள் மிஸ்ஸிங்!' - பெரிய கோயில் சென்டிமென்ட் காரணமா?

பெரிய கோயில்
பெரிய கோயில்

பெரிய கோயிலைப் பொறுத்தவரை ஆட்சியில் இருப்பவர்களும், முக்கிய பதவி வகித்து வருபவர்களும் இங்கு வந்தால் பதவி பறிபோய் விடும், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற சென்டிமென்ட் அரசியல்வாதிகள் மத்தியில் நிலவி வருகிறது.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டால் பதவி பறிபோய்விடும் என்ற சென்டிமென்ட் அரசியல்வாதிகள் மத்தியில் நிலவி வருகிறது. இதனால், உலகமே கொண்டாடும் கோயில் விழாவில், உள்ளூர் அமைச்சர் துரைக்கண்ணு கூட கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரிய கோயில் குடமுழுக்கு
பெரிய கோயில் குடமுழுக்கு

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம், ``உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா இன்று பெரும் விமரிசையாக நடைபெற்றுவருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பியுமான வைத்திலிங்கம், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்வதாக அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

பெரிய கோயிலைப் பொறுத்தவரை ஆட்சியில் இருப்பவர்களும் முக்கியப் பதவி வகித்து வருபவர்களும் இங்கு வந்தால் பதவி பறிபோய் விடும், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற சென்டிமென்ட் அரசியல்வாதிகள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால், உண்மை அது இல்லை. உள்ளே கருவறைக்குள் இருக்கிற இறைவன்தான் மிகப் பெரியவன் என்கிற அடிப்படையில் ராஜ ராஜ சோழன் பிரமாண்டமாக இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார்.

பெரிய கோயில்
பெரிய கோயில்

அதன்படி இங்கு வருபவர்கள் தங்களுடைய பதவியின் அதிகாரத்தையோ, ஆடம்பரத்தையோ பயன்படுத்தாமல் எளிமையாக வர வேண்டும் இதை மீறுபவர்கள் பாதிக்கப்படுவதாகக் கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் அ.தி.மு.கவைச் சேர்ந்த யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் அழைப்பிதழில் பெயர் அச்சடிக்கப்பட்டும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்.எல்.ஏக்கள் நீலமேகம், துரை சந்திரசேகரன் உள்ளிட்டவர்களும் கலந்துகொள்ளவில்லை. இவர்களை பொறுத்தவரை முறையான மரியாதையுடன் அழைக்கவில்லை. அதனால் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் ஆளும் அ.தி.மு.கவிலிருந்து உள்ளூரைச் சேர்ந்தவர்களான வைத்திலிங்கம், அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் கலந்துகொள்ளாததுதான் வேதனையாக உள்ளது. உலகமே போற்றக்கூடிய இந்தக் கோயிலின் விழாவை உள்ளூர் அமைச்சரே புறக்கணிப்பது முறை இல்லை" என்றனர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அ.தி.மு.க தரப்பில் விசாரித்தோம்,``தி.மு.க ஆட்சியின் போது பிரமாண்டமாக ஆயிரம் ஆண்டு விழாவை நடத்தினர். இதில் அப்போதைய முதல்வர் கருணாநிதி பட்டு வேட்டி சட்டை அணிந்து கலந்துகொண்டார். அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததால், ஆட்சிப் பொறுப்பை இழந்தது. அதன் பிறகு இன்னும் ஆட்சிப் பொறுப்பிற்கு வரவில்லை. இதையெல்லாம் நினைத்துக்கொண்டு சென்டிமென்ட் பயத்தால் அமைச்சர் ஓ.எஸ். மணியனைத் தவிர வேறு யாரும் கலந்துகொள்ளவில்லை'' என்றனர்.

பின் செல்ல