Published:Updated:

அண்ணாமலையின் தலைவர் என்ட்ரி; அதிரடி அஜெண்டா ரெடி! அடுத்த மூவ் என்ன?!

அண்ணாமலை
அண்ணாமலை

அண்ணாமலைக்குப் பெரிய அசைன்மென்ட் டெல்லி தலைமையால் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலில் அவர் இருந்தாலும், சத்தமில்லாமல்  இனி ஐ.பி.எஸ் அதிகாரிக்கான  வேலையையும் செய்ய வேண்டும்.

கட்சிக்குள் என்ட்ரி கொடுத்த இரண்டு ஆண்டுக்குள் மாநிலத் தலைவர் என்கிற பவர்ஃபுல் பதவியைப் பிடித்திருக்கிறார் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை. இதற்குப் பின்னால் நடந்த அரசியலைவிட இனி நடக்கபோகும் அரசியல் என்ன என்கிற கேள்வியே தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை

கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணிபுரிந்துவந்த அண்ணாமலை, ஐ.பி.எஸ் வேலையை உதறிவிட்டு, தமிழகத்துக்குத் திரும்பினார். ஆரம்பத்தில் எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தவர், ஒரு கட்டத்தில் பா.ஜ.க-வில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்டு, தோல்வியைத் தழுவியவருக்கு இப்போது தமிழக மாநில பாஜக தலைவர் என்கிற உயர்ந்த பதவியை வழங்கியுள்ளது பாஜக-வின் அகில இந்தியத் தலைமை.

ஆனால், அண்ணாமலையின் அரசியல் பயணம் முதல் அவர் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது வரை எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்கிறார்கள் பாஜக-வுக்கு நெருக்கமானவர்கள். இது குறித்து நம்மிடம் பேசிய டெல்லி பா.ஜ.க தலைமைக்கு நெருக்கமானவர்கள், ``அண்ணாமலை அவராகப் பதவியை ஒன்றும் ராஜினாமா செய்யவில்லை. கர்நாடாகாவில் நடந்த ஒரு போலீஸ் அதிகாரியின் மரணம் குறித்த விசாரணை அதிகாரியாக அண்ணாமலை இருந்தார். அந்த மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கர்நாடக அரசியலில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள். அதோடு அப்போது பா.ஜ.க தலைமைக்கு நெருக்கமான ஒரு வி.ஐ.பி-யின் ஆதரவு அந்த கர்நாடக மாஃபியாக்களுக்கு இருந்தது.

சந்தோஷ் பா.ஜ.க
சந்தோஷ் பா.ஜ.க

இந்த நெருக்கடியால் அண்ணாமலையால் அந்த காவல்துறை அதிகாரியின் மரண வழக்கை முறையாக விசாரிக்க முடியாத நிலை இருந்தது. தனக்கு வரும் அழுத்தங்கள் பற்றி அப்போது கர்நாடக பா.ஜ.க-வில் இருந்த மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷிடம் சொல்லியிருக்கிறார். அவரும் அண்ணாமலைக்குச் சில அறிவுரைகள் வழங்கிவந்த நிலையில்தான் அரசியல் பாதைக்குத் திரும்பும் முடிவை அண்ணாமலை எடுத்தார். அதற்கு அடிப்படையாக அமைந்தது பி.எல்.சந்தோஷ் நட்பு. அவர் மூலம் ஆர்.எஸ்.எஸ் முக்கியப் பிரமுகர்களுடனும் நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார் அண்ணாமலை. கர்நாடக மாநில அரசியலில் களம்காணவே அண்ணாமலை ஆசைப்பட்டார். ஆனால், தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். அதனால் தமிழக அரசியல் களத்தில் பயணிக்கலாம் என்று அண்ணாமலையைத் தமிழகத்துக்கு அனுப்பியதும் சந்தோஷ்தான்” என்கிறார்கள்.

அண்ணாமலை கட்சிக்குள் சேர்ந்தவுடனே அவருக்கு துணைத் தலைவர் பதவியை வழங்கியது தலைமை. அதன் பிறகு சட்டமன்றத் தேர்தலில் முருகன் தலைமையில் பா.ஜ.க தேர்தலைச் சந்தித்தாலும், பா.ஜ.க-வின் முக்கிய முகமாக அண்ணாமலை கருதப்பட்டார். தமிழக பா.ஜ.க தலைவர்கள் பெரும்பாலும் டெல்லி தலைமையுடன் சரளமான தொடர்பை வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அண்ணாமலையின் பலமே டெல்லியிலுள்ள பா.ஜ.க தலைமையின் ஆதரவாகத்தான் இருந்தது. கட்சிக்குள் அண்ணாமலை வந்தபோதே, ``தமிகத்தில் மிகப்பெரிய பொறுப்பை உனக்கு வாங்கித்தருகிறேன்” என்று உறுதி கொடுத்திருந்தார் சந்தோஷ். அதற்குத் தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் அமைச்சரவை மாற்றம் என்கிற முடிவை மோடி எடுத்தார்.

எல்.முருகன்
எல்.முருகன்

பா.ஜ.க-வின் அமைப்புச் செயலாளர் என்கிற பவர்ஃபுல் பதவியில் இருக்கும் பி.எல். சந்தோஷ் இந்தச் சந்தர்ப்பதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முருகனை மத்திய அமைச்சராகக் கொண்டுவந்தார். அந்த இடத்தில் தனது ஆளான அண்ணாமலையை எந்தச் சிக்கலும் இல்லாமல் அமரவைத்துவிட்டார்” என்கிறார்கள். அதேபோல் அண்ணாமலைக்குப் பெரிய அசைன்மென்ட் டெல்லி தலைமையால் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலில் அவர் இருந்தாலும், சத்தமில்லாமல் இனி ஐ.பி.எஸ் அதிகாரிக்கான வேலையையும் செய்ய வேண்டும். ஆம்... தி.மு.க-வுக்கு எதிரான வழக்குகள், அவர்கள் மீது எழும் சர்ச்சைகள் குறித்தெல்லாம் தனியாக ஃபைல்களைத் தயார் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.

அண்ணாமலை தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
அண்ணாமலை - நரேந்திர மோடி
அண்ணாமலை - நரேந்திர மோடி

அதேபோல் அ.தி.மு.க-வை அடுத்த இரண்டு ஆண்டுக்குள் அடக்கி வைத்துவிட வேண்டும் என்கிற கட்டளையும் கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டே, அ.தி.மு.க-வை அடக்கும் வேலையையும் அண்ணாமலை இனி மேற்கொள்ள வேண்டும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இந்தப் பணிகளை அவர் முடித்து, தேர்தல் களத்தை பாஜக-வுக்குச் சாதகமாகக் கொண்டுவர வேண்டும் என்று டெல்லி தலைமையில் உத்தரவிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே கொஞ்சம் கறார் பேர்வழியான அண்ணாமலை, இப்போது அதிகாரத்தோடு பவனி வரப்போவதால் பா.ஜ.க-வுக்குள்ளேயே பல காய்நகர்த்தல்களை இனி எதிர்பார்க்கலாம்.

பா.ஜ.க-வின் திட்டம் சரியா, இதனால் தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை கமென்ட்டில் கூறுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு