Published:Updated:

திருச்செந்தூர்: சசிகலாவுக்கு வாழ்த்து செய்தி பதிவிட்டது ஏன்?! - ஓபிஎஸ் மகன் ஜெய பிரதீப் சொல்வதென்ன?

ஜெய பிரதீப்
ஜெய பிரதீப்

``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் மீண்டும் அமைய வேண்டும் என முருகக் கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்” என்றார் ஓ.பி.எஸ்-ன் இளைய மகன் ஜெய பிரதீப்.

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெய பிரதீப், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் சசிகலாவுக்கு வாழ்த்து செய்தி பதிவிட்டிருந்தார். அதில், ’சசிகலா பூரண குணமடைந்து, இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று, அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே வாழ்த்தில், ``இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல.

ஜெய பிரதீப்
ஜெய பிரதீப்

என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவு அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அ.தி.மு.க கட்சித் தலைமையே சசிகலா குறித்துப் பேச வேண்டாம் எனக் கூறயிருக்கும் நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டநிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரின் மகனே இது போன்ற பதிவை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக வந்திருந்தார் ஜெய பிரதீப். மூலவர் சுப்பிரமணியசுவாமி, உற்சவர் சண்முகர் சந்நிதியில் இருபது நிமிடங்கள் வரை வேண்டிக்கொண்டார். உபிராகாரத்திலுள்ள சத்ருசம்ஹார மூர்த்தி சந்நிதியில், சத்ருசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகளில் கலந்துகொண்டார். ஒன்றரை மணி நேரம் வரை நடந்தது அந்த சிறப்பு பூஜை.

ஜெய பிரதீப்
ஜெய பிரதீப்

எதிரிகளை வீழ்த்தி, தடைகளைத் தகர்த்து இலக்கினை அடைந்து வெற்றி சூடிடவே, சத்ருசம்ஹார மூர்த்திக்கு வி.ஐ.பி-க்கள் பலரும் சிறப்பு பூஜைகள் செய்துவருகிறார்கள். கோயிலுக்குள் யாகம் வளர்க்க அனுமதி இல்லை என்பதால், தனியார் மடத்தில் சத்ருசம்ஹார ஹோமம் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

கோயிலில் சுமார் இரண்டரை மணி நேர சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த ஜெய பிரதீப்பிடம் பேசினோம், ``10 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாவின் அரசு மீண்டும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் தலைமையிலும் அமைய வேண்டும் என முருகக் கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். தன்னை நம்பி மனமுருகி வேண்டிக்கொண்டவர்களை திருச்செந்தூர் செந்திலாண்டவன் கைவிட்டதில்லை.

ஜெய பிரதீப்
ஜெய பிரதீப்

எனவே, தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சியே அமையும்” என்றார். `ஒவ்வொரு கோயிலாக தாங்கள் செல்வதில் ஏதும் சிறப்புப் பிரார்த்தனை உண்டா?\ என்று கேட்டதற்கு, ``மன நிம்மதிக்காகச் செல்கிறேன்” என்றார். சசிகலாவுக்கு முகநூலில் வாழ்த்து செய்தி பதிவிட்டது குறித்து கேட்டதற்கு, ``மனிதாபிமான முறையில் வெளியிடப்பட்டதுதான் அந்தப் பதிவு, அதில் எந்த அரசியலும் இல்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு