சேலம், எடப்பாடி நகராட்சி மன்றக் கட்டடத்தில் நகரமன்றக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், எடப்பாடி நகரமன்றத் தலைவர் தலைமை வகித்தார். காலை 11:30 மணிக்கு கூட்டம் ஆரம்பித்தது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகளும், அ.தி.மு.க-வைச் சேர்ந்த எடப்பாடி நகரச் செயலாளர் முருகன் உட்பட 13 பேரும் கலந்துகொண்டனர். இதில் எடப்பாடி நகராட்சி வருவாய் ஆய்வாளர் குமரகுருபரன், 21 தீர்மானங்கள் அடங்கிய தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது 5-வது தீர்மானமாக பூலாம்பட்டியிலுள்ள கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பராமரிப்புப் பணி மேற்கொள்வதற்கு 10 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அப்போது அ.தி.மு.க நகரச் செயலாளர் முருகன், முதலில் 10 லட்ச ரூபாய்க்குக் கணக்கு காண்பித்துவிட்டு அடுத்த தீர்மானங்களை வாசிக்கும்படி கூறியிருக்கிறார். ஆனால் வருவாய் ஆய்வாளர் குமரகுருபரன் அதைக் கண்டுகொள்ளாமல் 21 தீர்மானங்களையும் படித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன், வருவாய் ஆய்வாளரைத் தாக்க முற்பட்டதாகவும் , நகரமன்றத் தலைவர் பாஷா, முருகனைத் தடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக தி.மு.க-வினருக்கும் - அ.தி.மு.கவினருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரிக்க ஆரம்பித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் நகர்மன்ற கூட்டத்தை கலைத்துவிட்டு தி.மு.க-வினரும், அதிகாரிகளும் வெளியே சென்ற நிலையில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த முருகன், அவரின் ஆதரவாளர்கள் நகர்மன்ற அலுவலகத்திலேயே அமர்ந்து உள்ளிருப்பு தர்ணாவில் ஈடுப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த மகுடஞ்சாவடி போலீஸார் மற்றும் தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த, தர்ணாவைக் கைவிட்டனர்.

இது குறித்து அ.தி.மு.க., நகர செயலாளர் முருகனிடம் பேசினோம். “எடப்பாடி நகர சபைக் கூட்டம் சரியான முறையில் நடத்தப்படுவதில்லை. ஊழலைத் தட்டிக்கேட்டால் அடிக்க வர்றாங்க. சரியான முறையில் செலவு செய்யாமல், தேவையில்லாத கணக்கு காட்டி மக்களுடைய வரிப்பணத்தை சுரண்டுவதற்கான வேலையைச் செய்துவருகிறார்கள்” என்றார்.