Published:Updated:

`மத்திய அரசு ஜனநாயகத்தின் நான்கு தூண்களை பலவீனப்படுத்துகிறது!’ - கொதிக்கும் சிவசேனா

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

மத்திய அரசு ஜனநாயகத்தின் நான்கு தூண்களை பலவீனப்படுத்துவதாக சிவசேனா குற்றம்சாட்டியிருக்கிறது.

மத்திய அரசு இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்களின் மொபைல்போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதை பாஜக கடைசிவரை ஏற்கவே இல்லை. அதோடு உளவு பார்க்கப்படுவதாகக் கூறும் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்திருக்கிறது. இது குறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ``பெகாசஸ் ஒட்டுக்கேட்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளபோதிலும் அதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமளிப்பதாக இருக்கிறது.

பெகாசஸ் ஸ்பைவேர்
பெகாசஸ் ஸ்பைவேர்

மத்திய அரசு பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை, ஊடகம் ஆகியவற்றை பலவீனப்படுத்துகிறது. எதிர்க்கட்சிகள் இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்துவிட்டது. மத்திய அரசு இந்தப் பிரச்னை மட்டுமல்லாமல் விவசாயிகள் பிரச்னை குறித்தும் விவாதிக்கத் தயாராக இல்லை” என்று தெரிவித்தார்.

மராத்தா இட ஒதுக்கீடு குறித்துக் கேட்டதற்கு, ``50 சதவிகித இட ஒதுக்கீடு உச்சவரம்பைத் தளர்த்தாத பட்சத்தில் மராத்தா சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது” என்று தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை கடந்த மே மாதம் ரத்து செய்து உத்தரவிட்டது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் ராவத், ``மகாராஷ்டிரா அமைச்சரவை பரிந்துரை செய்த பிறகும் சட்ட மேலவைக்கு 12 நியமன உறுப்பினர்களின் நியமனத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இருந்துவருகிறார். இதுவும் அரசியல் சாசனத்தை மீறிய செயல்தான். அதோடு இது மகாராஷ்டிரா சட்டமன்றத்தையும், மராத்திய மக்களையும் அவமதிப்பதாகும்” என்று தெரிவித்தார். 12 நியமன உறுப்பினர்கள் பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

`பெகாசஸ் மூலம் கர்நாடக, மத்தியப் பிரதேச அரசை வீழ்த்தினர்!’-மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே
அடுத்த கட்டுரைக்கு