Published:Updated:

`மத்திய அரசு பிளாக்மெயில் செய்து டீலிங் நடத்துகிறது!’ - தெலங்கானா முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

மத்திய அரசு மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்களின் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டதாக தெலங்கானா முதல்வர் விமர்சித்துள்ளார்.

இந்தியா முழுவதும் நேற்று ஒரேநாளில் 4,970 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 134 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,130 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,163-ஆகவும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு ஆகியவை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இது ஒருபுறம் என்றால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை, நடுத்தர மக்கள் ஆகியோர் பொருளாதாரரீதியில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
Representational image \ AP

இந்தப் பொருளாதார பாதிப்பை மீட்கும் வகையில் `தற்சார்பு இந்தியா’ என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார் பிரதமர் மோடி. ஆளும் கட்சிகள் இந்தத் திட்டத்தை வெகுவாகப் பாராட்டியும் எதிர்க்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் இதைக் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். `இது மக்களுக்கான உதவி இல்லை தொழில் நிறுவனங்களுக்கான உதவி மட்டுமே' எனப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரூ.20 லட்சம் கோடி நிதி உதவி... பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்குமா?

அந்த வரிசையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், ``மாநிலங்கள் ஒன்றும் மத்திய அரசின் கூட்டாளிகள், அடிமைகள் இல்லை, நாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுதான் பதவிக்கு வந்துள்ளோம். சொல்லப் போனால் மக்களுடன் நெருக்கமாக இருக்கும் எங்களுக்குத்தான் மத்திய அரசைவிட பொறுப்பு அதிகமாக உள்ளது. ஆனால் மத்திய அரசு, மாநிலங்களை பிச்சைக்காரர்களின் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. நாங்கள் ஒன்று கேட்டால் மத்திய அரசு வேறு ஏதாவது ஒன்றைக் கொடுக்கிறது.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

மத்திய அரசு எப்போதும் ஒரு டீலிங்குடன் மாநில அரசுகளைக் கையாளும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. நீங்கள் இதைச் செய்தால் நாங்கள் ரூ.2,000 கோடி நிதி தருகிறோம் எனப் பேசுகிறார்கள். மாநிலங்களை பிளாக்மெயில் செய்து எங்கள் கழுத்தில் கத்தி வைக்கிறது. அப்படிக் கிடைக்கும் ரூ.2,000 கோடியை நாங்கள் விரும்பவில்லை. பிரதமர் மோடி எப்போதும் கூறும் கூட்டாட்சி இதுதானா? நான் சீர்திருத்தத்துக்கு எதிரானவன் இல்லை. அவர்கள் செய்ததைவிட நாங்கள் இன்னும் அதிகமான சீர்திருத்தத்தைச் செய்துள்ளோம்” எனக் கடுமையாகப் பேசியுள்ளார் சந்திரசேகர ராவ்.

‘அவர்களின் செயலுக்கு நாடு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்’-மத்திய அரசைச் சாடும் சந்திரசேகர ராவ்

தொடர்ந்து பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தை விமர்சித்த அவர், ``ரூ.20 லட்சம் கோடியை ஒரு பொருளாதாரத் தொகுப்பு என அழைக்க முடியுமா.. அது அபத்தமானது. இந்தத் திட்டம் எண்களின் ஏமாற்று வித்தை, போலியானது. FRBM (Fiscal Responsibility and Budget Management) சட்டத்தின்கீழ் கடன் பெறும் வரம்பை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக உயர்த்துவதாகவும், ஆனால் பல நிபந்தனைகளுடன் கடன் வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அவர்களின் நிபந்தனை கூட்டாட்சி மனப்பான்மைக்கு முற்றிலும் எதிரானது. மாநிலங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது, மாநிலங்கள் மீது அதிகாரம் காண்பிப்பது நியாயமில்லை. மத்திய அரசின் அணுகுமுறை மிகவும் வேதனையாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு