Published:Updated:

மும்பை : `சாக்கடையைச் சரியாகத் தூர்வாருங்கள்’; கொட்டும் மழையில் 70 வயது முதியவர் போராட்டம்!

நடுரோட்டில் அசோக்
நடுரோட்டில் அசோக்

மும்பையில் இரண்டு நாள்களாகப் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு சரியாகச் சாக்கடைகள் தூர் வாரப்படாததே காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.

மும்பையில் சனிக்கிழமையிலிருந்து விடாமல் கனமழை பெய்த மழை இன்றுதான் சற்று ஓய்ந்திருக்கிறது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்து மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள். இந்த மழையின்போது இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பை சாலையில் வெள்ளப்பெருக்கு
மும்பை சாலையில் வெள்ளப்பெருக்கு

மேலும் தானே பார்சி மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 3 பேரை உள்ளூர் மக்கள் உயிரோடு மீட்டனர். தீயணைப்புத்துறையினர் போராடி இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள் உடலை மீட்டனர். அதோடு மீரா ரோட்டில் 9 வயது சிறுவன் திறந்த சாக்கடையில் விழுந்தான். அவன் உடல் இன்னும் மீட்கப்படவில்லை. இது தவிர தானே மற்றும் பால்கரில் மூன்று பேர் மழை நீரில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இதனால் மும்பை மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்தது. நவிமும்பை பேலாப்பூரில் கார் ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. காரில் மூன்று பேர் இருந்தனர். அந்த காரை மழைநீர், அருகிலுள்ள ஏரிக்கு அருகில் இழுத்துச் சென்றது. மீட்புக்குழுவினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

வசாய் ரோட்டில் 70 வயது முதியவர் மழை வெள்ளத்தில் நடு ரோட்டில் அமர்ந்து நான்கு மணி நேரம் போராடினார். ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் தனது வீட்டுக்குள் மழைநீர் புகுந்துவிடுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடையைச் சரியாகத் தூர்வாருவது கிடையாது என்றும் கூறி அசோக் என்பவர் மழைநீரில் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்தார். இது குறித்து அசோக் கூறுகையில், ``2017-ம் ஆண்டிலிருந்து மழைநீர் என் வீட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

நடுரோட்டில் அசோக்
நடுரோட்டில் அசோக்

2017-ம் ஆண்டில் வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் எனக்கு 1.5 லட்சம் செலவானது. மழைநீர் வடிய நான்கு நாள்கள் பிடித்தன" என்றார். அவரின் மகள் கோமல் இது குறித்து கூறுகையில், ``மழைக் காலத்தில் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடுவதால் எங்களால் வாழவே முடியவில்லை. சாக்கடை நடுவே மின் கம்பம் ஒன்று இருக்கிறது. இதனால் மழைநீர் சரியாகச் செல்ல முடியவில்லை’’ என்று தெரிவித்தார். அசோக் இப்போது 40-க்கும் மேற்பட்ட பவர் பிளாக் கற்களை வாங்கி வந்து வீட்டில் அடுக்கிவைத்து, அவற்றின்ன் மீது குளிர்சாதனப்பெட்டி, படுக்கை போன்ற முக்கியப் பொருள்களை வைத்திருக்கிறார். நான்கு மணி நேரம் போராடியும் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வந்து என்னவென்று கேட்கவில்லை என்கிறார்.

இதற்கிடையே மும்பையில் மழைக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு ஆளும் சிவசேனா நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப் அளித்த பேட்டியில், ``ஒவ்வோர் ஆண்டும் மழைநீர் விரைவாக வெளியேற சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாநகராட்சி கூறுகிறது. ஆனால் அதை நிறைவேற்ற தவறிவிடுகிறது. சாக்கடைகளைத் தூர்வார பல நூறு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் 25 சதவிகித பணிகள்கூட முடியவில்லை. பணிகள் முடியவில்லையெனில் பணம் எங்கு போனது... நிச்சயம் மாநகராட்சியின் அனைத்து மட்டத்திலும் ஊழல் நடந்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சிவசேனாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது. இப்போது சிவசேனா ஆட்சி செய்யும் மும்பை மாநகராட்சி மீது காங்கிரஸ் கட்சி ஊழல் புகார் தெரிவித்திருப்பது, இரு கட்சிகளிடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு