Published:Updated:

சீட்டுக்குக் கணக்கு... தொகுதிகளுக்கு வேட்டு! - கடைசி நேரத்தில் கரைசேரத் தவிக்கும் தி.மு.க அணி!

தி.மு.க கூட்டணி
தி.மு.க கூட்டணி

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற நான்கு கட்சிகள் இப்போது தி.மு.க அணியில் உள்ளன. அவர்கள் அனைவருமே பத்து தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்க்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கூட்டணிக் கட்சிகள் பிடிவாதமாக இருப்பதால், தி.மு.க தலைமை கூட்டணியை இறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவிவருகிறது. இரண்டு நாள்களுக்குள் கூட்டணியை முடிவு செய்துவிடுங்கள் என்று மற்றொரு பக்கம் ஸ்டாலின் தனது கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

தி.மு.க கூட்டணியிலுள்ள கட்சிகளுடன் கடந்த சில தினங்களாக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் போன்று இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுக்க வேண்டாம் என்று தி.மு.க தலைமை நினைக்கிறது. குறிப்பாக 180 தொகுதிகளையாவது தி.மு.க தன்வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறது.

தி.மு.க கூட்டணியிலுள்ள கட்சிகளில் பெரும்பாலனவை இரட்டை இலக்க எண்ணிக்கையில் சீட்களை பெறும் முயற்சியில் உள்ளன. தி.மு.க கூட்டணியிலுள்ள கட்சிகளில் இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் முடிவாகியிருக்கின்றன. தி.மு.க கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிந்தும், முடிவு எட்டப்படாத நிலையே இப்போதும் இருக்கிறது. கடந்த முறை காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டதது. இந்தமுறையும் அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை மீண்டு்ம் எதிர்பார்த்தது. ஆனால் இருபது தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்று ஆரம்பத்தில் தி.மு.க-வும் முரண்டு பிடித்தது. அதன் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க-விடம் இறங்கிப்போகலாம் என்று பேசிய பிறகு தி.மு.க-விடம் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.

தி.மு.க நிர்வாகிகள்
தி.மு.க நிர்வாகிகள்

காங்கிரஸ் கட்சி தரப்பு இறுதியாக 30 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. ஆனால், தி.மு.க 24 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்று கறார் காட்டிவருகிறது. இதனால்``கூட்டணியில் முடிவெடுக்கவேண்டியது தி.மு.க-தான். பந்து அவர்கள் கையில்தான் இருக்கிறது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

இதேபோல் தி.மு.க கூட்டணியிலுள்ள ம.தி.மு.க-வுக்கும் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இருக்கிறது. ம.தி.மு.க தரப்பு 12 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. அந்தத் தொகுதிகள் எவை என்பதையும் பட்டியலாகக் கொடுத்திருக்கிறது. ஆனால் தி.மு.க தரப்பில் ஐந்து தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ம.தி.மு.க குழுவினர் முடிவு எதுவும் சொல்லாமல் தி.மு.க தலைமையகத்திலிருந்து கிளம்பிவிட்டனர். இதன் பிறகு தி.மு.க நிர்வாகிகள் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரனும், தங்கம் தென்னரசுவும் வைகோவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அவர்களிடமும் பத்து தொகுதிகளுக்குக் குறைந்து நிற்க முடியாது என்று சொல்லியிருக்கிறார் வைகோ.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆரம்பத்தில் 12 தொகுதிகளைக் கேட்டது. ஆனால். அவர்களிடமும் ஐந்து தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்று தி.மு.க தரப்பு சொல்லியிருக்கிறது. அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் ஒப்புக்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து மற்றொரு யோசனையும் தி.மு.க தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. `எட்டு தொகுதிகளை அளிக்கிறோம. நான்கு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், நான்கு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் சின்னத்திலும் போட்டியிடலாம்’ என்பதுதான் அந்த யோசனை. இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைமை ஒப்புக்கொள்வது கடினம் என்கிறார்கள். பத்து தொகுதிகளுக்குக் குறையக் கூடாது என்று திருமாவளவன் நினைக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

தி.மு.க கூட்டணியிலுள்ள இரண்டு கம்யூனிஸ்ட்களும் இதுவரை கூட்டணியை இறுதி செய்யவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி பதினான்கு தொகுதிகளை எதிர்பார்த்தது. ஆனால், அவர்களுக்கு அதிகபட்சம் ஆறு தொகுதிகளைத் தரலாம் என்று தி.மு.க திட்டமிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான்கு தொகுதிகளை அளிக்க தி.மு.க தலைமை முடிவெடுத்திருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்ற நான்கு கட்சிகள் இப்போது தி.மு.க அணியில் உள்ளன. அவர்கள் அனைவருமே பத்து தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்க்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளைப் பெற்றோம். அதன்படி பன்னிரெண்டு தொகுதிகளை தி.மு.க விட்டுக்கொடுக்கலாம் என்று கூட்டணிக் கட்சிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் `பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் வெற்றியைப் பெறும் நிலையில் இருக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வா சாவா என்பதை முடிவெடுக்கும் தேர்தலாக இருப்பதால் கூட்டணியினர் விட்டுக்கொடுக்க வேண்டும்’ என்று சொல்கிறது தி.மு.க தரப்பு.

மக்கள் நலக்கூட்டணி
மக்கள் நலக்கூட்டணி

அதேபோல் கூட்டணிக் கட்சியினர் கொடுத்திருக்கும் தொகுதிகளின் பட்டியலிலும் சிக்கல் எழுந்திருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் ஐந்து தனித் தொகுதிகளை கேட்கிறது. காங்கிரஸ் கட்சியினர், தி.மு.க-வின் முக்கியஸ்தர்கள் போட்டியிடும் தொகுதியைக் குறிவைக்கிறது. இப்படி, தொகுதியிலும் குளறுபடிகள் இருப்பதால் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் திணறிவருகிறது தி.மு.க தலைமை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு