Published:Updated:

விழுப்புரம் தொமுச: பொதுச்செயலாளர் பதவிச் சர்ச்சையும் திமுக மாவட்டச் செயலாளரின் விளக்கமும்!

சேகர், தொ.மு.ச கட்டடம்

``அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர், பணி ஓய்வு வயதைக் கடந்தவர்... இவருக்கு ஏன் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை அளிக்க வேண்டும்... காரணம், சொசைட்டி பணம் கொள்ளை வழக்கை திசைதிருப்பி செயலற்றுப்போக வைப்பதற்குத்தான்" என்கிறார்கள்.

விழுப்புரம் தொமுச: பொதுச்செயலாளர் பதவிச் சர்ச்சையும் திமுக மாவட்டச் செயலாளரின் விளக்கமும்!

``அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர், பணி ஓய்வு வயதைக் கடந்தவர்... இவருக்கு ஏன் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை அளிக்க வேண்டும்... காரணம், சொசைட்டி பணம் கொள்ளை வழக்கை திசைதிருப்பி செயலற்றுப்போக வைப்பதற்குத்தான்" என்கிறார்கள்.

Published:Updated:
சேகர், தொ.மு.ச கட்டடம்

தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையில், ஓர் அங்கமாக இணைந்து செயல்பட்டுவருகிறது விழுப்புரம் மண்டல மத்திய சங்க தொ.மு.ச (தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களை உறுப்பினர்களாகக்கொண்டிருக்கும் சங்கம்). இந்த தொ.மு.ச - வுக்கான நிர்வாகிகளைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் கடந்த 14-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்றது. அப்போது, சில பதவி நியமனங்களுக்கு எதிராக நிர்வாகிகளிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் (27.07.2022) விழுப்புரம் தொ.மு.ச நிர்வாகிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இதில், எதிர்ப்புகளுக்கு உள்ளான நபர்களின் பெயரும் மாற்றப்படாமல் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும்பாலான சங்க நிர்வாகிகளின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் அறிவிப்பு
அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் அறிவிப்பு

எனவே, விழுப்புரம் தொ.மு.ச-வில் நிகழ்ந்திருக்கும் குழப்பங்கள், அதற்கான காரணங்கள் குறித்து அறிந்துகொள்ள அந்தச் சங்கத்தின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அப்போது நம்மிடைய பேசிய பெயர் சொல்ல விரும்பாத தொ.மு.ச நிர்வாகி, "இந்த தொ.மு.சங்கம் (தி.மு.க), அரசுப் பேருந்துக் கழகத் தொழிலாளர்களுக்கானது. விழுப்புரம் மண்டல தொ.மு.ச., 13 அரசுப் பேருந்து பணிமனைகளை உள்ளடக்கிச் செயல்பட்டுவருகிறது. சுமார் 3,500 அரசுப் பேருந்து தொழிலாளர்கள் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கடந்த 14-ம் தேதி, சங்க நிர்வாகிகளைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் நடந்தபோது... அங்கிருந்த மாவட்டச் செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட முக்கிய தி.மு.க கட்சி நிர்வாகிகள், அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர் தரப்பைச் சேர்ந்த சேகர் என்பவரைக் காட்டி "இவர்தான் பொதுச்செயலாளர்" என அறிவித்துவிட்டார்கள். ஆனால், மோசடிப் பின்னணி, சொசைட்டிக்கு மூடுவிழா நடத்தக் காரணமாக இருந்தவர் அந்த சேகர். அவரை நியமித்ததற்குத்தான் அன்றைய தினம் சலசலப்பு எழுந்தது. அவர்மீது இருக்கும் மோசடி வழக்கை நீர்த்துப்போகச் செய்து, அவரைக் காப்பாற்றுவதற்குத்தான் இப்படிச் செய்திருக்கிறார்கள்" என்று போட்டுடைத்தவர், சேகர் என்பவரின் கடந்தகாலப் பின்னணி குறித்து விவரித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்காக, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே `பெரியார் கூட்டுறவு கடன் சங்கம்' ஒன்று இயங்கிவந்தது. மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று, இந்தச் சங்கத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுவந்தது. சுமார் 12,000 தொழிலாளர்களைக்கொண்ட இந்த மிகப்பெரிய கூட்டுறவு சங்கத்தில் கோடிக்கணக்கில் பணம் புழக்கத்தில் இருந்தது. வழக்கமாக இந்தக் கடன் சங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டு தலைவர், து.தலைவர், 6 - இயக்குநர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். பொதுச்செயலாளரை மட்டும் அரசு நியமனம் செய்யும். ஆக, 2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில், தொ.மு.ச-வைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் வெற்றிபெற்றார்கள். அதில், இந்த சேகரும் (இயக்குநர்) அடக்கம். ஆனால், இதற்குப் பின்னணியிலிருந்து செயல்பட்டது பொன்முடியின் ஆதரவாளர்களான கோத.குமாரும், செல்வமும்தான். பொன்முடியின் குடும்பத்துக்கு இவ்விருவரும் எப்படி முக்கிய விசுவாசிகளோ, அப்படித்தான் இவர்களுக்கு சேகர் இருந்துவந்தார். அதேபோல, அரசு மூலம் நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர் பாலுவும், கோத.குமார் மற்றும் செல்வத்தின் நண்பர். ஆகவே, இவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு செயல்பட்டார்கள்.

மூடப்பட்ட நிலையில் விழுப்புரம் பெரியார் சொசைட்டி
மூடப்பட்ட நிலையில் விழுப்புரம் பெரியார் சொசைட்டி

நண்பரே பொதுச்செயலாளர் என்பதால், அந்தக் காலத்திலேயே இந்த சொசைட்டி மூலம் இயங்கிய பென்டோசாஃப்ட் கம்ப்யூட்டர் சென்டருக்கு மேனேஜராக இருந்தார் கோத.குமார். இப்படியாகப் போய்கொண்டிருக்க, இவர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து கோடிக்கணக்கிலான சொசைட்டி (பெரியார் கூட்டுறவு கடன் சங்கம்) பணத்தைக் கையாடல் செய்து பங்கு போட்டுக்கொண்டார்கள். இதனால், சில மாதங்களிலேயே சொசைட்டி மத்திய கூட்டுறவு வங்கிக்குச் செலுத்தவேண்டிய நிலுவைக் கடன் தொகை அதிகரித்துவந்தது. அதனால், கடன் வழங்குவதும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், உறுப்பினர்களாக இருந்த தொழிலாளர்களும் வேறு சங்கத்துக்கு இடம்பெயரத் தொடங்கினார்கள். ஒருகட்டத்தில் ஓவர் டியூ அதிகரித்து 2006-ல் சொசைட்டி இழுத்து மூடப்பட்டது.

சொசைட்டிக்கு மூடுவிழா நடைபெறக் காரணமாக இருந்த தலைவர், பொதுச்செயலாளர், இயக்கநர்கள் மீது போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டது. அவர்கள்மீது துறைரீதியான விஜிலென்ஸ் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. உடனே, அப்போதைய தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன், இந்தப் புகாரில் சம்பந்தப்பட்ட தலைவர், இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவரையும் தி.மு.க-விலிருந்து நீக்கி உத்தரவிட்டார். ஆனால், இந்த நீக்கம் வெற்று கண்துடைப்பாகத்தான் இருந்தது. அமைச்சர் தரப்பினரின் ஆதரவாளர்கள் என்பதால் விஜிலென்ஸ் விசாரணையிலிருந்து காப்பாற்றவும், மீண்டும் கட்சியில் இணைக்கவும் வேலைகள் விறுவிறுத்தன. சொசைட்டி கொள்ளையில் ஈடுபட்டு நீக்கப்பட்ட அனைவரும், 2008-ம் ஆண்டு கட்சியில் இணைக்கப்பட்டனர்.

அமைச்சர் பொன்முடி, புகழேந்தி -எம்.எல்.ஏ.
அமைச்சர் பொன்முடி, புகழேந்தி -எம்.எல்.ஏ.

அப்போது நடைபெற்ற விழுப்புரம் மண்டல தொ.மு.ச தேர்தலிலும் அவர்கள் அனைவரும் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்கள். சேகர், தொ.மு.ச-வின் பொதுச்செயலாளர் ஆனார். அன்றிலிருந்து 2019 வரை அவர்தான் தொ.மு.ச-வின் பொதுச்செயலாளர். 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, இவர்கள் மீதான விஜிலென்ஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. அதற்கான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்றும் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில், சொசைட்டி கொள்ளை வழக்கில் சேகர் உட்பட அனைவரும் பணி ஓய்வு பெறும் நாளன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இந்நிலையில், பணி ஓய்வு பெற்றவர்கள் பொறுப்பில் இருக்கக் கூடாது என்று 2019-ம் ஆண்டு தண்டபாணி என்பவரை பொதுச்செயலாளராக அறிவித்தார்கள்.

சொசைட்டி கொள்ளை வழக்கில் சிக்கிய சேகர் உட்பட அனைவர் மீதான விஜிலென்ஸ் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி, நீதிமன்றத்தில் விரைவில் தீர்ப்பு வரும் நிலையில் இருக்கிறது. எனவே இந்த விஜிலென்ஸ் விசாரணையை நீர்த்துப்போகச் செய்து, வழக்கை திசைதிருப்ப வேண்டும் என்பதன் அடிப்படையில், பொன்முடியின் ஆதரவாளர் கோத.குமார், செல்வம் உதவியுடன்... தி.மு.க மாவட்டச் செயலாளர் புகழேந்தி முன்னிலையில் மீண்டும் V.சேகர் தொ.மு.ச பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், சுமார் 12,000 போக்குவரத்து தொழிலாளர்களுக்குப் பெரும் உதவியாக இருந்த சொசைட்டிக்கு மூடுவிழா நடைபெறக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் இவர், அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர், பணி ஓய்வு வயதைக் கடந்தவர்... இவருக்கு ஏன் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை அளிக்க வேண்டும்... காரணம், சொசைட்டி பணம் கொள்ளை வழக்கை திசைதிருப்பி செயலற்றுப்போக வைப்பதற்குத்தான்.

விழுப்புரம் மண்டல தொ.மு.ச
விழுப்புரம் மண்டல தொ.மு.ச

சேகருக்கு தொ.மு.ச-வில் பதவி கொடுத்துவைத்திருப்பதால், துறை விஜிலென்ஸ் நடவடிக்கை பாயும்போது தி.மு.க கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படும் என்பதால் விசாரணை தாமதமாவதோடு, சம்பந்தப்பட்ட மற்ற நபர்களும் காக்கப்படுவார்கள் என்பதுதான் அவர்களின் நோக்கம்" என்றார் விரிவாக.

இது குறித்து விளக்கம் கேட்க விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ-வும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க செயலாளருமான புகழேந்தியிடம் பேசினோம். "சேகர், சொசைட்டியில் முறைகேடு செய்தார் என்று அ.தி.மு.க தரப்பில் பொய்யான கேஸ் போட்டார்கள். அதற்கான வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், இன்னும் சில நாள்களில் அது முடியும் தறுவாயில் இருக்கிறது. அவர்மீதான குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அவர்மீது போடப்பட்ட கேஸ் பொய்யானது என விசாரணையில் தெரிந்துவிட்டது. அது பொய் கேஸ் என்று சொல்லி அரசு மூலமாகவே நீதிமன்றத்துக்கு பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. சேகர் மீது எந்தத் தவறும் இல்லை என்றுதான் தீர்ப்பு வரப்போகிறது. அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவிருக்கிறார். அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை என்பது தெரிந்த பின்னர்தான் தொ.மு.ச-வின் பொதுச்செயலாளராக நியமனம் செய்திருக்கிறோம். 2006-ம் ஆண்டு அவர் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை, அது தவறாகக் கூறப்பட்டிருக்கிறது. ஓய்வுபெற்ற நிர்வாகியும் பொறுப்புக்கு வரலாம் என தொ.மு.ச சட்டத்தைத் திருத்திவிட்டார்கள். அதன்படிதான், அனுபவமுள்ள அவரைத் தேர்வுசெய்தோம்" என்கிறார்.