Published:Updated:

அஸ்ஸாமில் சட்டவிரோதக் குடியேறிகளுக்கான முகாம்... இரட்டை வேடம் போடுகிறதா காங்கிரஸ்?

அஸ்ஸாம் மாநிலத்தில்  கட்டப்பட்டு வரும் முகாம்
அஸ்ஸாம் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் முகாம்

அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்தில்தான் முதன்முறையாக சட்ட விரோத குடியேறிகளுக்கான முகாம்கள் கட்டப்பட்டனவா?

இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில்தான் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய மக்கள் அதிகம். இந்த மாநிலத்தில் இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர்கள் என்று எந்தப் பாகுபாடும் பார்க்காமல் வெளிநாட்டவர்களை வெளியேற்ற வேண்டுமென்று அஸ்ஸாம் மக்கள் பல ஆண்டு காலமாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாட்டிலேயே தேசியக் குடியுரிமைப் பதிவேடு முறை இங்குதான் முதன்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இருப்பதால் என்.ஆர்.சி சட்டம் இங்கே உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் அஸ்ஸாமில் மட்டும் 19 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர். தங்களை இந்திய குடிமகன்தான் என்று நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைப்பதற்காகப் பல முகாம்கள் இந்த மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டுள்ளன. அதில், கோல்பாரா என்ற இடத்தில் உள்ள முகாம் இந்தியாவிலேயே பெரியது. இது தவிர கோக்ராஜார், திஷ்பூர், ஜொர்ஹட், திப்ருகர், சில்சார் மாவட்டங்களிலும் இது போன்ற முகாம்கள் கட்டப்பட்டுள்ளன.

அஸாம் மாநிலத்தில் முகாம்களின் கட்டுமானப்பணிகள்
அஸாம் மாநிலத்தில் முகாம்களின் கட்டுமானப்பணிகள்

உயரமாக மதில் சுவர் அதைச் சுற்றி முள்வேலி கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலை தோற்றத்தில் இந்த முகாம்கள் உள்ளன. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வரை, என்.ஆர்.சி-யில் விடுபட்டவர்கள் இங்கே, தங்க வைக்கப்படுவார்கள். இதே போன்ற முகாம்களில்தான் லட்சக்கணக்கான உய்குர் இன முஸ்லிம் மக்களை சீன அரசு அடைத்து வைத்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் பேசியபோது, ``அஸ்ஸாமில் 1,600 கோடி ரூபாய் செலவழித்து 19 லட்சம் பேர் வெளிநாட்டினராக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களை எந்த நாட்டிலும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். வங்கதேசம், மியான்மர் நாடுகள் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவும் இவர்களை வெளியே தள்ளினால், அவர்கள் எங்கே போகப்போகிறார்கள்? இவர்களை அடைக்கத்தான் அஸ்ஸாமில் சிறை கட்டுகிறார்கள். 19 லட்சம் பேரை அடைக்க எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று மனக்கணக்குப் போட்டால் சுமார் 24,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

சுமார், 3,000 பேரை அடைக்க 46 கோடி ரூபாய் செலவழித்து சிறை கட்ட வேண்டும். 10, 000 பேருக்கு சிறை கட்ட வேண்டுமானால் , 120 கோடி ரூபாய் தேவை. லட்சம் பேரை அடைக்க 1,200 கோடி தேவைப்படும். 10 லட்சம் பேரை அடைக்க 12,000 கோடி செலவாகும். 20 லட்சம் பேருக்கு 24,000 கோடி ரூபாய் செலவாகிறது. எத்தனை நாள் அவர்களை அடைத்து வைக்க முடியும். வாழ்நாள் முழுவதும் அவர்கள் அங்கேதான் இருக்க வேண்டுமா... பிறகு சாப்பாடு, துணிமணிகள் அவர்களுக்குத் தேவை இல்லையா... சிறைபடுபவர்களின் குழந்தைகள் கதி என்ன? இதுவெல்லாம் விபரீதமானது. நாஜிக்களின் ஆட்சியில் ஜெர்மனியில் என்ன நடந்தோ அதுதான் இன்று இந்தியாவில் நடக்கிறது'' என்று சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளர்.

ஆனால், அஸ்ஸாமில் சட்டபூர்வமாகக் குடியேறியவர்களை அடைப்பதற்காகக் காங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான் முதன்முறையாக முகாம்கள் கட்டப்பட்டன என்பதை ப.சிதம்பரம் வசதியாக மறந்துவிட்டார். இதற்குப் பின்னணியில் ரத்தக்கறை படிந்த பல சம்பவங்கள் உள்ளன.

தற்போது, காங்கிரஸ் கட்சி தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அஸ்ஸாமில் அந்தக் கட்சி ஆட்சிக் காலத்தில்தான் இது போன்ற முகாம் முதன்முறையாகக் கட்டப்பட்து. 2008-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அஸ்ஸாமில் ஆட்சியில் இருந்தது. அப்போது, தருண் கோகோய் முதல்வராக இருந்தார். சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்களை அஸ்ஸாமிலிருந்து அகற்றப்பட வேண்டுமென்பது அந்த மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கை. இந்தச் சமயத்தில், வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாமில் 50 பேர் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியதாக கவுஹாத்தி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பி.கே.சம்ரா, அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய்
அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய்

அதோடு, இவர்களைப் போன்றவர்களிடம் அனுதாபம் காட்டப்படுவதாகவும் இதே நிலை நீடித்தால் அஸ்ஸாமில் மூலை முடுக்கெல்லாம் வங்கதேசத்தவர்கள் புகுந்து, கிங் மேக்கர்களாகிவிடுவார்கள் என்றும் தன் தீர்ப்பில் குறிப்பிட்டர். தீர்ப்பையடுத்து 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கவுஹாத்தியில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து 70 பேர் பலியானார்கள். வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள்தான் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குக் காரணம் என்று அஸ்ஸாம் மக்கள் கொந்தளித்தனர்.

வங்தேசத்தில் இருந்து செயல்பட்டு வரும் ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதனால், தருண் கோகோய் அரசு, வேறு வழியில்லாமல் அஸ்ஸாமில் சட்டபூர்வமாகக் குடியேறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. 2010-ம் ஆண்டு கோல்பாரா, சில்சார், கோக்ராஜார் இடங்களில் முகாம்கள் செயல்டத் தொடங்கின. 2011-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி வரை அஸ்ஸாமில் சட்டத்துக்குப் புறம்பாக அஸ்ஸாமில் குடியேறிய 326 பேர் பிடித்து முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

பொள்ளாட்சி பயங்கரம் முதல் சுபஶ்ரீ மரணம் வரை... 2019-ம் ஆண்டின் மறக்க முடியாத துயரங்கள்!

பின்னர் 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக, அனைத்து மாநிலங்களிலும் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்களை அடைக்க முகாம்கள் கட்டும்படி உத்தரவிட்டது. 2016-ம் ஆண்டு நடந்த அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதக் குடியேறிகள் விஷயத்தை பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்தது. 'சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவோம்' என்று வாக்குறுதி அளித்து, அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. 2001-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அஸ்ஸாமில் ஆட்சியில் இருந்த தருண் கோகோய் பதவியை இழந்தார்.

அஸ்ஸாமில் கட்டப்பட்டு வரும் முகாம்
அஸ்ஸாமில் கட்டப்பட்டு வரும் முகாம்

தொடர்ந்து, அஸ்ஸாமில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் கட்டப்பட்டு வருகின்றன. முகாம் ஒன்றில் 3,000 பேரை அடைத்து வைக்க முடியும். மருத்துவமனை, சமையல் அறை, கூட்ட அரங்கு உள்ளிட்டவையும் இங்கே இருக்கும். முகாம் ஒன்றுக்கு180 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள அஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய், ''உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படியே அஸாமில் இது போன்ற முகாம்கள் ஏற்படுத்தப்பட்டது'' என்று தற்போது தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் மாநில அரசு இத்தகைய முகாம்களை நடத்தும். பாரதிய ஜனதா கட்சி ஆளும் கர்நாடகத்திலும் இது போன்ற முகாம்கள் கட்டப்பட்டு வருகின்றனவாம். கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அந்த மாநிலத்திலும் The Department of Social Justice என்ற அமைப்பின் கீழ், சட்டவிரோத குடியேறிகளுக்கான முகாம்கள் கட்டப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு