Published:Updated:

ஜெயலலிதா: சொந்த வரலாறும் சொத்து வரலாறும்!

ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா

ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு வாங்கப்பட்ட சொத்துகள் அனைத்துமே சர்ச்சைக்குரியவை.

ஜெயலலிதா: சொந்த வரலாறும் சொத்து வரலாறும்!

ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு வாங்கப்பட்ட சொத்துகள் அனைத்துமே சர்ச்சைக்குரியவை.

Published:Updated:
ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா
ஜெயலலிதாவின் மரணம் உட்பட அவர் சம்பந்தப்பட்ட பல மர்மங்கள் விலகாத நிலையில், மிக முக்கியமான ஒரு பிரச்னையைத் தீர்த்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

அவர் மறைந்து மூன்றாண்டுகள் கடந்த நிலையில், அவரின் அண்ணன் பிள்ளைகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரை ஜெயலலிதா வின் நேரடி வாரிசு என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இனி ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தும் தீபா, தீபக் ஆகிய இருவருக்கும் வந்துசேரும். ‘ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது, ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துகள்’ என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சொத்துகள் விவரம் குறித்து ஜெ.தீபாவிடம் நாம் கேட்டபோது, ``தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் சொத்துகள் பற்றிய எந்த விவரமும் என் கைக்கு வந்துசேரவில்லை. அந்த விவரங்கள் கிடைத்தால்தான் அதுபற்றி என்னால் சொல்ல முடியும்” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையத்திடம் ஜெயலலிதா அளித்த பிரமாணப்பத்திரத்தில் தன் சொத்துவிவரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உட்பட ஜெயலலிதாவுக்குச் சொந்தமானவை என்று எத்தனையோ சொத்துகளின் பெயர்கள் நீண்டகாலமாக அடிபட்டுவந்தாலும், போயஸ் கார்டன் இல்லம், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் உள்ளிட்ட சிலவற்றை மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார். தன் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.113 கோடி என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அந்தச் சொத்துகள் அனைத்தும் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தீபாவுக்கும், தீபக்குக்கும் வந்து சேர வேண்டும். ஆனால், அவ்வளவு எளிதில் அது நடந்துவிடுமா என்பது தெரியவில்லை.

ஜெயலலிதா: சொந்த வரலாறும் சொத்து வரலாறும்!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் என்பது தமிழக அரசியலில் மிகப்பெரும் அதிகாரக் குறியீடு. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அங்கே இருந்துதான் தன் சாம்ராஜ்ஜியத்தை ஜெயலலிதா நடத்தினார். சிறையிலிருந்து வெளிவரக் காத்திருக்கும் சசிகலாவுக்கு போயஸ் கார்டன் இல்லத்தைக் கைப்பற்றுவது மிகப்பெரிய கனவுத்திட்டமாக இருக்கலாம். இன்னொருபுறம், எக்காரணம் கொண்டும் போயஸ் கார்டன் இல்லத்தை சசிகலா கைப்பற்றிவிடக் கூடாது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். எனவேதான், அதை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ஓர் அவசரச் சட்டத்தையே கொண்டுவந்திருக்கிறார். அதற்கு எதிராக உயர் நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது என்றாலும், எடப்பாடி பழனிசாமி அரசு அவ்வளவு எளிதில் அதை விட்டுக்கொடுத்துவிடுமா என்பது தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை போயஸ் கார்டன்
சென்னை போயஸ் கார்டன்

போயஸ் கார்டன் இல்லம்!

ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு வாங்கப்பட்ட சொத்துகள் அனைத்துமே சர்ச்சைக்குரியவை. ஆனால், நடிப்புலகில் இருந்தபோது அவர் வாங்கிய சொத்துகள் குறித்து எவரும் கேள்வியெழுப்ப முடியாது. காரணம், ஜெயலலிதாவும் அவரின் தாயார் சந்தியாவும் தங்கள் உழைப்பால் அவற்றை வாங்கியிருக்கிறார்கள். ஜெயலலிதாவும் சந்தியாவும் 1967-ம் ஆண்டு போயஸ் கார்டனில் ரூ.1.32 லட்சத்துக்குப் பத்து கிரவுண்டு நிலம் வாங்கி வீடு கட்டி யிருக்கிறார்கள். ‘ஜெயா விலாஸ்’ என்று பெயர் சூட்ட வேண்டுமென்பது தாயாரின் விருப்பம். ஆனால், ‘வேதா நிலையம்’ என்று பெயர் வைத்தார் ஜெயலலிதா. சந்தியாவின் நிஜப்பெயர் வேதவல்லி. இந்த இல்லத்தை யொட்டிய ஒரு கட்டடத்தை 1997-ல் ரூ.10.2 லட்சத்துக்கு ஜெயலலிதா வாங்கினார். அங்கு, ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் சில ஆண்டுகள் செயல்பட்டது. இன்றைய பிரதமர் நரேந்திர மோடி உட்பட தேசியத் தலைவர்களெல்லாம் வந்துசென்ற பெருமை வேதா இல்லத்துக்கு உண்டு. தமிழ்நாட்டின் தலைவிதியையே தீர்மானித்த அந்த இல்லம் தற்போது பூட்டப்பட்டுக் கிடக்கிறது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.90 கோடி என்று சொல்லப்படுகிறது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஹைதராபாத் திராட்சைத் தோட்டம்!

ஜெயலலிதா, சினிமாவில் படுபிஸியாக நடித்துக்கொண்டிருந்தபோது சென்னைக்கும் ஹைதராபாத்துக்குமாகப் பறந்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், 1967-ம் ஆண்டு, தாயாருடன் சேர்ந்து செகந்திராபாத் ஸ்ரீநகர் காலனியில் 651 சதுர மீட்டர் நிலம் ஒன்றை ரூ.50,000 கொடுத்து வாங்கினார். இன்றைக்கு அதன் மதிப்பு ரூ.15 கோடி என்று சொல்லப்படுகிறது. ஆனால், ரூ.5.03 கோடி என்று பிரமாணப்பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். ரெங்காரெட்டி மாவட்டம் ஜீடிமெட்லா கிராமத்தில் ரூ.14.5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி, அதில் பண்ணை அமைத்தார் ஜெயலலிதா. இவை போக சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள பார்சன்ஸ் காம்ப்ளக்ஸில் ஒரு கட்டடம், செயின்ட்மேரீஸ் சாலையில் ஒரு கட்டடம் ஆகியவை ஜெயலலிதா பெயரில் உள்ளன.

கொடநாடு எஸ்டேட்!

ஜெயலலிதாவின் மனதுக்கு நெருக்கமான இடம் கொடநாடு எஸ்டேட். முதன்முறையாக முதல்வரான பிறகு, தேயிலைத் தோட்ட அதிபர்களைச் சந்திக்க ஊட்டிக்குச் சென்ற ஜெயலலிதாவின் கவனத்தைக் கவர்ந்தது கொடநாடு தேயிலை எஸ்டேட். உடனே அதை வாங்க முடிவுசெய்தார். 924 ஏக்கர் பரப்பளவிலான அந்த எஸ்டேட்டுக்குள் சொகுசுப்படகுகளுடன் கூடிய 10 ஏக்கரிலான ஏரி, வெள்ளை நிற ஆடம்பர மாளிகை, தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள், தேயிலைத் தொழிற்சாலை ஆகியவை உள்ளன. ‘ஜெயலலிதாவுடைய எஸ்டேட்’ என்று மக்கள் பேசிக்கொண்டாலும், ரூ.1,115 கோடி மதிப்புள்ள அந்த எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் பங்கு என்பது வெறும் ரூ.63.03 கோடி மட்டுமே. மீதிப் பங்குகள் அனைத்தும் சசிகலா, இளவரசி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கே சொந்தம்.

ஜெயலலிதா: சொந்த வரலாறும் சொத்து வரலாறும்!

வெளிநாட்டவரான பீட்டர் என்பவரிடமிருந்து கொடநாடு எஸ்டேட்டை வாங்கியுள்ளனர். ரூ.7.6 கோடிக்கு டி.டி கொடுத்துவிட்டு,. மீதி ரூ.4 கோடியை ரொக்கமாகத் தருவதாகக் கூறியுள்ளனர். அந்த ரூ.4 கோடி இன்னும் அவருக்குப் போய்ச்சேரவில்லை. குண்டர்களை வைத்தும், வருமான வரித்துறையை ஏவியும் தம்மை மிரட்டி எஸ்டேட்டை அபகரித்து விட்டார்கள் என இன்றைக்கும் கதறுகிறார் பீட்டர். பிற்காலத்தில், அருகிலுள்ள எஸ்டேட்களையெல்லாம் வாங்கி விரிவுபடுத்தியிருக்கிறார்கள். 200 ஏக்கர் கர்ஸன் எஸ்டேட், 1,100 ஏக்கர் தாய் சோலை எஸ்டேட், எடக்காடு அருகே 750 ஏக்கரில் ஒரு எஸ்டேட் என வாங்கிக் குவித்தனர். கர்ஸன் எஸ்டேட்டை வாங்கும் தறுவாயில்தான், கார்டனிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

தொகுப்பு: நா.வருண், இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிஃப் முகம்மது
தொகுப்பு: நா.வருண், இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிஃப் முகம்மது

சிறுதாவூர் பங்களா!

சென்னையை அடுத்த சிறுதாவூரில் 115 ஏக்கரில் சவுக்கு மரங்கள் சூழ பிரமாண்டமான பங்களா உள்ளது. அது, ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் இடம். 45 அறைகள், நான்கு சமையல் கூடங்கள் என ஆடம்பரமான அந்த பங்களா, ஜெயலலிதாவுடையது என்ற பேச்சு இருந்தாலும், அது அவருக்குச் சொந்தமானதல்ல என்று சொல்லப்படுகிறது. சசிகலா தரப்பினர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனத்தின் பெயரில் இது வாங்கப்பட்டிருக்கிறது. பட்டியலின மக்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்து அந்த பங்களாவைக் கட்டியதாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர்மீது குற்றச்சாட்டு எழுந்து, நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையமே அமைக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று கூறிவிட்டது ஆணையம்.

தீபா, தீபக்
தீபா, தீபக்

பையனூர் பங்களா!

சிறுதாவூருக்கு அருகிலுள்ள பையனூரில் பிரமாண்டமான பண்ணை வீடு 1992-93-ல் வாங்கப்பட்டது. தனக்குச் சொந்தமான அந்தச் சொத்தை சசிகலா தரப்பினர் மிரட்டி வாங்கினர் என்று குற்றம்சாட்டுகிறார் இசையமைப்பாளர் கங்கை அமரன். அன்றைக்கு ரூ.1.5 கோடி மதிப்புடைய அந்த பங்களாவின் இன்றைய மதிப்பு ரூ.75 கோடி என்கிறார்கள். மிரட்டி வாங்கிய தன் சொத்தை எப்படியும் மீட்டுவிடுவேன் என்று சொல்லிவருகிறார் கங்கை அமரன்.

இளவரசி
இளவரசி

சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் இயக்குநர்களாக இருக்கும் பல நிறுவனங்களின் பெயர்களில் வாங்கப்பட்ட சொத்துகளில் ஜெயலலிதா பங்குதாரராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜெயா பப்ளிகேஷனஸ், சசி என்டர்பிரைசஸ் ஆகியவற்றில் ஜெயலலிதாவுக்கு 50 சதவிகிதம் பங்கு இருப்பதாக குன்ஹா தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மங்களைப்போலவே, அவருடைய சொத்துகள் பற்றிய மர்மங்களும் விலகாதவைதான்.

1991-1996 ஆட்சிக்காலத்தில் ஊழல்செய்ததாக ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது அவர் வீட்டில் குவியல் குவியலாகச் செருப்புகள் முதல் நகைகள் வரை காட்சிப்படுத்தப்பட்டன. சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்காகப் பலர் மிரட்டப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. வளர்ப்பு மகன் திருமணம், மக்கள் பணத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்து நடத்திய மெகா ஈவன்ட்.

ஜெயலலிதா: சொந்த வரலாறும் சொத்து வரலாறும்!

எத்தனையோ வழக்குகள், புகார்கள், விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்ப்பட்டபோதும் சொத்துகளை வாங்கிக் குவித்த ஜெயலலிதா, இவை அனைத்தும் தீபாவுக்கும் தீபக்குக்கும் போய்ச்சேரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஜெயலலிதாவுக்குப் பிறகு ஆட்சியும் கட்சியும் சொத்துகளும் தனக்குத்தான் என்று நிழலாக நீங்காமல் இருந்தார் சசிகலா. அவர் கையில் கட்சியும் இல்லை; ஆட்சியும் இல்லை.

ஜெயலலிதா,  சசிகலா
ஜெயலலிதா, சசிகலா

விந்தைகளும் மர்மங்களும் நிறைந்ததுதான் ஜெயலலிதாவின் வாழ்க்கையும் மரணமும். ஆனால் அவர் மரணத்துக்குப் பின்பும் அவை தொடர்வது விந்தையிலும் விந்தை; மர்மத்திலும் மர்மம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism