Published:Updated:

ஹாட்ஸ்டார் நிறுவனம் தடை விதிக்கும் அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் ஆலிவர் என்னதான் பேசினார்?

சார்லி சாப்ளின்
சார்லி சாப்ளின்

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் நிகழ்த்திய கொடூரங்களை சர்காஸத்துடன் பேசிய ‘தி கிரேட் டிக்டேட்டர்' என்கிற அமெரிக்கத் திரைப்படத்தின் ஒரு காட்சி இப்படி விரியும்.

”யூதர்களை அடிமைப்படுத்தித் துன்புறுத்தும் வதைமுகாம்களை உருவாக்குகிறான் டொமேனியா தேசத்தின் சர்வாதிகாரி அடினாய்ட் ஹென்கல். அண்டை நாடான ஆஸ்ட்டரிச்சை யார் கைப்பற்றுவது என ஹென்கலுக்கும் பாக்டீரியா தேசத்தின் சர்வாதிகாரி பென்சினோ நபோலினிக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. சரி, பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என இருவரும் ஒரு விருந்தில் சந்திக்கிறார்கள். ஆனால், அந்த சீரியஸான பேச்சுவார்த்தை, துரதிர்ஷ்டவசமாக, பந்தியில் வைக்கப்பட்ட கடுகு சாஸை யார் சாப்பிடுவது என்கிற சண்டையில் முடிகிறது. முடிவில், இரண்டு சர்வாதிகாரிகளும் கடுகு சாஸை சமமாகப் பங்கு போட்டுக்கொள்வது என்று முடிவுசெய்கிறார்கள். கடுகு சாஸில் இரண்டு சர்வாதிகாரிகளும் நட்பு வளர்த்துக் கொண்டிருந்த அதே நேரம், ஆஸ்ட்டரிச் தேசம், ஹென்கலின் படைவீரர்களால் சூறையாடப்படுகிறது. மக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், யூத வதைமுகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.”

சார்லி சாப்ளின்
சார்லி சாப்ளின்

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் நிகழ்த்திய கொடூரங்களை சர்காஸத்துடன் பேசிய ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்கிற அமெரிக்கத் திரைப்படத்தின் காட்சிகள் இப்படி விரியும்.

இது, சார்லி சாப்ளின் இயக்கி நடித்த அந்தப் படத்தின் 80-வது ஆண்டு. இரண்டாம் உலகப்போர் காலத்தில் எடுத்த படம். வெளியிடவே முடியாது என்று சார்லி சாப்ளின் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ் எனப் பல இடங்களில் சக்கைபோடு போட்டது. நாஜிக்களின் ஆதரவாளர்கள் இருந்த பகுதிகளில் மட்டும் தடைசெய்யப்பட்டிருந்த இந்தத் திரைப்படத்தை, ஹிட்லர் இரண்டுமுறை பார்த்தாகச் சொல்லப்பட்டதும் உண்டு.

சார்லி சாப்ளின்
சார்லி சாப்ளின்

பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர் ஜான் ஆலிவர் தொகுத்து வழங்கும் ''தி லாஸ்ட் வீக் டு நைட்” என்கிற அரசியல் பகடி நிகழ்ச்சியின் தீவிர ஆடியன்ஸுக்கு பிரதமர் மோடி பற்றிய அவரின் சமீபத்திய பகடி, ’தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தை நினைவூட்டும். ஆலிவர், தனது அரசியல் பகடி எழுத்துகளுக்காக 2013-ம் ஆண்டின் எம்மி விருது பெற்றவர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியை 'தேசத் தந்தை' என்று குறிப்பிட்டதைப் பற்றி நையாண்டியுடன் தனது நிகழ்ச்சியில் விமர்சித்திருக்கிறார் ஆலிவர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், வதைமுகாம்கள், ஆர்.எஸ்.எஸ், தாமரை, யோகி ஆதித்யநாத், அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சி, ஹிட்லர், பியர் கிரில்ஸ் என மோடியின் மீதான சீரியஸான விமர்சனத்தை ஆங்காங்கே நகைச்சுவை கலந்து பேசியிருக்கிறார்.

ஜான் ஆலிவர்
ஜான் ஆலிவர்

குடியுரிமை சட்டத்தைப் பற்றி விவாதிக்காமல், 'தாஜ்மகாலுக்கு செல்வாரா ட்ரம்ப்' என இந்திய ஊடகங்கள் டைட்டில் வைத்து விவாதிப்பதை விமர்சிக்கிறார். 'சிறுபான்மையினர்களுக்கு எதிரான வன்முறையின் மீதான மோடியின் மௌனத்தை 'தன்னலமும் தந்திரமும் கலந்த அமைதி' என்கிறார். சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ஆலிவரின் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஹாட்ஸ்டார் நிறுவனம் தடை விதித்திருக்கிறது.

தனது நிகழ்ச்சியை இறுதியாக இப்படி முடிக்கிறார் ஆலிவர், “ஆம், ட்ரம்ப் சொன்னதுபோல மோடி இந்தியாவின் தந்தைதான். குடும்பத்தில் பிரச்னை என்றால் தந்தைதான் அவர்களைச் சேர்த்துவைக்கக் காரணமாக இருப்பார். மோடி ஏற்படுத்திய வெறுப்பரசியல்தான் இன்று, இந்தியா என்னும் மிகப்பெரும் ஜனநாயக தேசத்தின் மக்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறது.

ஜான் ஆலிவர்
ஜான் ஆலிவர்

வெறுப்பரசியலுக்கான இதுபோன்ற தற்காலிக அடையாளங்களைவிட, தாஜ்மகால் போன்ற சிறுபான்மை அடையாளங்களின் மீது இன்னும் அதிக அன்பு செலுத்துங்கள்” என்கிறார் ஜான் ஆலிவர்.

முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம்... 'தி கிரேட் டிக்டேட்டர்' படத்தின் இறுதிக்காட்சியும், “ஜனநாயகத்தின் பெயரால் ஒன்றுபடுவோம் வீரர்களே” என்றுதான் முடியும்.

அடுத்த கட்டுரைக்கு