Published:Updated:

``சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நடமாடும் பிணங்கள்” - சஞ்சய் ராவத் சர்ச்சைக் கருத்து

சஞ்சய் ராவத்

``அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் படிக்காத நடமாடும் பிணங்கள்” என்று சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கிறார்.

``சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நடமாடும் பிணங்கள்” - சஞ்சய் ராவத் சர்ச்சைக் கருத்து

``அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் படிக்காத நடமாடும் பிணங்கள்” என்று சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாகப் பிரிந்துள்ளனர். அவர்கள் அஸ்ஸாமில் தங்கியிருக்கின்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 16 பேர்மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அடுத்தகட்ட விசாரணை வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இந்த வாரம் நடக்கவிருக்கிறது. உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கொஷாரியாவிடம் மனு கொடுப்பதற்காக சிவசேனா அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஓரிரு நாளில் மும்பைக்கு வரவிருக்கிறார்.

இது தவிர பாஜக தரப்பிலும் ஆளுநரைச் சந்தித்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இது இரண்டும் இல்லாத பட்சத்தில் ஆளுநரே அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் கொடுத்திருக்கும் கடிதத்தின் அடிப்படையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டும்படி உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிடலாம்.

ஷிண்டே மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்
ஷிண்டே மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது தேவைப்பட்டால் தற்காலிக சபாநாயகரை ஆளுநர் நியமிப்பார் என்று பாஜக தெரிவித்திருக்கிறது. இந்த அரசியல் திருப்பங்களால் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் பாஜக தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும் என்று பெயர் சொல்ல விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார். இந்த முறை முழுமையாக ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தைச் செயல்படுத்த பாஜக திட்டமிட்டிருக்கிறதாம். இதற்காக கட்சித் தலைமையின் உத்தரவுக்காக மாநில பாஜக தலைவர்கள் காத்திருக்கின்றனர். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸ் அவசரப்பட்டு அஜித் பவாருடன் இணைந்து அதிகாலையில் ஆட்சி அமைத்தார். ஆனால் அந்த அரசு வெறும் இரண்டு நாள்கள் மட்டுமே நீடித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே அணி தனித்து செயல்படுவதா அல்லது ஏதாவது கட்சியுடன் இணையாலாமா என்பது குறித்து சட்ட வல்லநர்களுடன் ஆலோசித்துவருகிறது. ஏக்நாத் ஷிண்டே அணி எந்தக் கட்சியுடனும் இணையவேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்றும், சிவசேனா இரண்டாக உடைந்தாலும் அதிருப்தி கோஷ்டிக்குத்தான் பெரும்பான்மை இருப்பதால் அவர்கள்தான் உண்மையான சிவசேனா என்று பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். அதேசமயம் நவநிர்மாண் சேனாவுடன் இணைய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தனர். சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்படு்ம்போது அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் ஆட்சி கவிழும். உடனே புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்ட பிறகு புதிய சபாநாயகரும் தேர்வு செய்யப்படுவார். புதிய சபாநாயகர் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை உண்மையான சிவசேனா என்று அங்கீகரிக்க வாய்ப்பிருப்பதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இந்நிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை, சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் `படிப்பறிவற்ற நடமாடும் பிணங்கள்’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்து மேலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஏற்கெனவே `அஸ்ஸாமில் தங்கியிருக்கும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பிணங்கள்’ என்றும், `அவை நேரடியாக பிரேத பரிசோதனைக்கு சட்டமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். சஞ்சய் ராவத்தின் இந்தக் கருத்து குறித்து அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கூறுகையில், ``சிவசேனாவை சஞ்சய் ராவத் அழித்துவிடுவார்” என்று தெரிவித்தனர். இதற்கிடையே, ``அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 15 முதல் 20 பேர் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை மும்பைக்கு அழைத்து வர வேண்டும்” என்று ஆதித்ய தாக்கரே தெரிவித்திருக்கிறார். ``அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தங்களைப் பல கோடிக்கு விற்பனை செய்துவிட்டனர்” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.