Published:Updated:

சமூக வலைத்தளத்தில் அவதூறு: நள்ளிரவில் பொறியாளரை கடத்தி, தாக்கிய வழக்கு! - மகாராஷ்டிரா அமைச்சர் கைது

மகாராஷ்டிரா அமைச்சருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரை கடத்தி சென்று அடித்து உதைத்தது தொடர்பாக அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா வீட்டு வசதித் துறை அமைச்சராக இருப்பவர் ஜிதேந்திர அவாத். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக கருதப்படும் ஜிதேந்தரா அவாத், பொறியாளர் ஒருவரை கடத்தி சென்று அடித்து உதைத்தாக கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது, பிரதமர் நரேந்திர மோடி அனைவரும் வீட்டில் விளக்கு ஏற்றவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து அமைச்சர் ஜிதேந்திரா விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து மும்பை தானே பகுதியை சேர்ந்த பொறியாளர் ஆனந்த் கர்முல்(40) என்பவர் அமைச்சர் ஜிதேந்திரா, அவரின் குடும்பத்திற்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் ஜிதேந்திரா, கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி இரண்டு போலீஸாரை அனுப்பி ஆனந்த்தை அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டார்.

சமூக வலைத்தளத்தில் அவதூறு: நள்ளிரவில் பொறியாளரை கடத்தி, தாக்கிய வழக்கு! - மகாராஷ்டிரா அமைச்சர் கைது
PremKumar SK

இரண்டு போலீஸார் நள்ளிரவில் ஆனந்த் வீட்டிற்கு சென்று விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். எதற்காக விசாரணை என்று ஆனந்த் கேட்டதற்கு சொல்ல மறுத்த போலீஸார் கட்டாயப்படுத்தி ஆனந்தை கடத்தி செல்வது போல் அழைத்து சென்றனர். அவரை நேராக அமைச்சர் ஜிதேந்திராவின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து ஜிதேந்திராவின் ஆட்கள் ஆனந்த்தை போலீஸார் மற்றும் ஜிதேந்திரா முன்னிலையில் கம்பு ஒடியும் வரை மணிக்கணக்கில் அடித்து உதைத்தனர். இதில் ஆனந்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது தவிர உடம்பின் பல்வேறு பகுதியிலும் ஏராளமான காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

`கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்க முடியாது!’ - கைவிரித்த மகாராஷ்டிரா

அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு ஏப்ரல் 7ம் தேதி அமைச்சருக்கு எதிராக போலீஸில் புகார் செய்தார். அப்புகார் நிலுவையில் இருந்தது. அந்நேரத்தில் ஆனந்தின் புகாரின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் ஜிதேந்திரா மீது கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் ஜிதேந்திரா மட்டும் கைது செய்யப்படாமல் இருந்தார். தற்போது இவ்வழக்கில் போலீஸார் ஜிதேந்திராவை கைது செய்தனர். ஜிதேந்திரா உடனே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு கோர்ட் 10 ஆயிரம் ரொக்க ஜாமீனில் ஜிதேந்திராவை விடுவிக்க உத்தரவிட்டது. ஆனால் அமைச்சர் ஜிதேந்திராவை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பாஜக பிரமுகர் கிரீத்சோமையா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், ``நாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள். ஜிதேந்திராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறும் பாஜக முதலில் மத்திய அமைச்சர் நாராயண் ராணேயை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும்” என்று தெரிவித்தார். இதே போன்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவுத் இது குறித்து கூறுகையில், ``சட்டம் அனைவருக்கும் சமம். அது தன் கடமையை செய்யும்” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு