Published:Updated:

ஜெயலலிதா மரண மர்மம்... தி.மு.க-வுக்கு செக்!

ஜெயலலிதா
ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தைப் பற்றி விசாரணை நடத்தும் ஆணையில் கையெழுத்திட்ட எடப்பாடி பழனிசாமிதான், இப்போது இந்தக் கருத்தையும் முன்வைக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டிசம்பர் 5-ம் தேதி (2016) அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம். அதை மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவக்குழுவும் உறுதிசெய்துவிட்டது. 75 நாள்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா மரணத்தின் மீதான சர்ச்சையும் அப்போதே தொடங்கிவிட்டது.

Jayalalitha in Apollo Hospital Rewind
Jayalalitha in Apollo Hospital Rewind

ஜெயலலிதா மரணமடைந்து மூன்றாண்டுகளை நெருங்கப்போகிறது. இப்போது, ஜெயலலிதாவின் மரணமே தேர்தல் பிரசாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதா அல்லது மர்ம மரணமா என்கிற விவாதத்தில் ஆரம்பித்து, மரணத்திற்குக் காரணம் யார் என்று விவாதத்தின் போக்கு மாறியுள்ளது.

ஜெயலலிதா மரணமடைந்து பன்னீர்செல்வம் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வரை, ஜெயலலிதா மரணம்குறித்து ஆளும் தரப்பிலிருந்து எந்தச் சந்தேகமும் எழவில்லை. ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன நடந்தது என்று அரசு தரப்பில் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டுமே கூறிவந்தன. அதற்குப் பிறகு, இந்தக் கோஷம் மெள்ள மெள்ள அ.தி.மு.க-வில் இருந்த சசிகலா தரப்புக்கு எதிரான நபர்களிடம் எதிரொலித்தது. குறிப்பாக கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி.மனோஜ்பாண்டியன் ஆகியோர் அடுத்தடுத்த சந்தேகங்களை எழுப்ப ஆரம்பித்தனர். 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது, "ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளிக்கொண்டுவருவேன்" என்று அதிரடியாக அறிவித்தார்.

சசிகலா குடும்பத்தினரே ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணம் என்று போர்க்கொடி தூக்கிய பன்னீர்செல்வம், ஊடகங்கள் மத்தியில் தொடர்ந்து சொல்லிவந்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைத்தால் மட்டுமே அ.தி.மு.க-வுடன் இணையும் சாத்தியக்கூறுகளைப் பற்றி பேசமுடியும் என்று மரணத்தைவைத்து மல்லுக்கட்டு நடத்தினார்.

இது ஒருபுறமிருக்க... மறுபுறம் சசிகலாவுக்கு எதிராக அமைச்சர்களும் திரள, பழனிசாமி - பன்னீர்செல்வம் இணைப்பு சுபமாக முடிந்தது. அந்த இணைப்புக்குப் பிறகு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தைப் பற்றியும், சசிகலா தரப்பு இந்த மரணத்திற்குக் காரணமா என்பதுகுறித்து விசாரித்து அரசுக்கு முழுமையாக அறிக்கை அளிக்கவுமே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோரைத் தவிர நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரித்து முடித்துவிட்டனர். திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருக்கும் சரவணனும் ஜெயலலிதா மரணத்தில் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து தனது சாட்சியத்தைப் பதிவுசெய்தார்.

ஜெயலலிதா மரணம்
ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணத்தைப் பற்றி விசாரணை நடத்தும் ஆணையில் கையெழுத்திட்ட எடப்பாடி பழனிசாமிதான் இப்போது, “தி.மு.க-வினர் ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டதால்தான் அவர் சிறைக்குச் சென்றார். ஜெயலலிதாவைப் பழிவாங்கவும் அ.தி.மு.க-வை அழிக்க வேண்மென்று நினைத்தும் தி.மு.க-வினர் மேல்முறையீடு வழக்குப் போட்டு மன உளைச்சல் கொடுத்ததாலும் அவர் உடல்நிலை மோசமடைந்து, உரிய சிகிச்சை மேற்கொள்ளாமல் மரணத்தைத் தழுவியுள்ளார்” என்று புதிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்திற்குக் காரணம் என்ன என்பதை அறியவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த ஆணையத்தின் அறிக்கை வரும்முன்பே, மன உளைச்சலும் சிகிச்சை முறையாக எடுத்துக்கொள்ளாமல் போனதுமே காரணம் என்று எடப்பாடி சொல்லியிருப்பது முரணாக அமைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது ஒருபுறமிருக்க, தி.மு.க தரப்பில் அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாகவும், அவரது மரணம் தொடர்பாகவும் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

ஜெயலலிதா கைரேகை
ஜெயலலிதா கைரேகை

இவரே ஆறுமுகசாமி ஆணையத்தில், `ஜெயலலிதாவின் கைரேகைகுறித்து நான் வல்லுநர்களிடம் ஆராய்ந்தபோது, ரத்த ஓட்டம் இல்லாத நேரத்தில் இந்த ரேகைப்பதிவு நடைபெற்றது’ என குற்றம் சாட்டினார். ஆனால் பல மருத்துவர்கள், ஜெயலலிதா கையெழுத்திட்டபோது நாங்கள் உடன் இருந்தோம் என்பதையும் சாட்சியத்தில் பதிவு செய்திருக்கின்றனர்.

தி.மு.க மீது எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுக்கு நெருக்கடி ஏற்படுத்தவே இந்தப் புகாரை தி.மு.க சார்பில் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தியே வாக்கு வாங்கும் நிலையில் அ.தி.மு.க இன்னும் இருக்கிறதா என்கிற கேள்வியும் தி.மு.க தரப்பில் வைக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து இன்னும் எத்தனைகாலம்தான் அரசியல் செய்வார்கள் என்று புலம்புகிறார்கள், ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு