Published:Updated:

ராகுல் காந்தியின் அவதாரங்கள்... காங்கிரஸுக்கு கை கொடுக்குமா?

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

வலுவான பா.ஜ.க-வை எதிர்த்து நேருக்கு நேர் போட்டியிடுவதற்காவது, காங்கிரஸில் வசீகரமான ஒரு தலைவர் தேவை. அந்தத் தலைவராக ராகுல் காந்தி தன்னை வார்த்தெடுக்கத் தொடங்கிவிட்டார்.

நம் மீதான எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதைவிட, நம் மீதான புதிய பிம்பங்களைக் கட்டமைப்பது எளிது. ராகுல் காந்தி சறுக்கியதும் மோடி வெற்றிபெற்றதும் அங்கேதான். எளிய மக்களில் ஒருவனாக, ஏழைத்தாயின் மகனாக, அடித்தட்டு மக்களின் இன்னல்களை அனுபவித்தவராக, மாற்றத்தின் நாயகனாக மோடியின் பிம்பம் மிகக் கவனமாகக் கட்டமைக்கப்பட்டதால் அவரை ஏற்றுக்கொள்வதில் மக்களுக்கு பெரும் சிரமம் இருக்கவில்லை. ஆனால், நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என ஒப்பிட்டுப் பார்ப்பதற்குப் பெரும் ஆளுமைகளும், வெகுஜனங்களின் வாழ்க்கையை அறியாத ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்னும் பிம்பமும் ராகுலை எப்போதும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தியே வைத்திருக்கிறது. ராகுல் காந்தியின் கடந்த 16 ஆண்டுகள் அரசியல் பயணத்தில் இது அவருக்கான மிகப்பெரிய பின்னடைவாகத்தான் இருந்திருக்கிறது.

நேரு - காந்தி குடும்பம்
நேரு - காந்தி குடும்பம்
wordpress.com

ராகுலின் அரசியல் என்ட்ரி நிகழ்ந்தது 2004-ம் ஆண்டு. நேரு குடும்பத்து வாரிசாக இருந்தாலும், பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு என அரசியல் வாடையே இல்லாமல் வளர்க்கப்பட்டார் ராகுல். பாட்டி இந்திரா காந்தியின் மரணத்துக்குப் பிறகு, பாதுகாப்புக் காரணம் கருதி பள்ளியிலிருந்து விலகி, வீட்டிலிருந்து படிப்பைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரின் தந்தை ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பின்னர், ரவூல் வின்சி (Raul Vinci) எனும் புனைபெயரில் அமெரிக்காவில் கல்லூரிப் படிப்பை முடித்தார். லண்டனில் வேலை, சொந்தமாக இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனம் என பிஸியாக இருந்தவர், 2004-ம் ஆண்டு, தன்னுடைய 34-ம் வயதில் திடீரென அரசியல் களம் கண்டார்.

அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பிறகு 2009, 2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அதே தொகுதியில் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டார். 2019-ம் ஆண்டில் அமேதியில் தோல்வியைத் தழுவிய ராகுல் காந்தி, தான் போட்டியிட்ட மற்றோர் தொகுதியான கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார்.

ராகுல், சோனியா
ராகுல், சோனியா

ராகுல் காந்தியின் அரசியல் பயணம் மேற்சொன்ன வகையில், ஒரே பத்தியில் சுருங்கச் சொல்ல முடியாதது. ஏனெனில், அரசியலில் செயல்படும் தீவிரத்தைக் குறைப்பதும், கூட்டுவதும், திடீரென வெளிநாட்டுக்கு ஓய்வெடுக்கச் செல்வதும், தோல்வி அடைந்தால் பதவியைத் துறப்பதும், திடீரென பம்பரமாய் களத்தில் சுழல்வதும், தீவிர பிரசாரங்கள், அறிவுசார் மக்களுடன் கருத்து பரிமாற்றங்களில் தீவிரம் காட்டுவதும் என நிலையற்ற ஓர் அரசியல் பயணக் கதையைக் கொண்டவர் ராகுல். 2019-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமாகத் தோல்வியைத் தழுவ, தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன் எனத் தலைமை பதவியிலிருந்து பின்வாங்கினார் ராகுல்.

அதன்பிறகு சற்று வலுவிழந்தே காணப்பட்டது காங்கிரஸ் கட்சி. தேர்தல் வெற்றிக்குப் பின்னர் படையெடுத்த பா.ஜ.க அரசின் அடுத்தடுத்த அதிரடி முடிவுகளுக்கு மாநில அரசுகள் முன்வைத்த அளவுகூட வலுவான விமர்சனங்களை முன்வைக்கவில்லை காங்கிரஸ் கட்சி. பா.ஜ.க-வுக்குச் சமமான பலம் கொண்ட தேசிய கட்சியாக இன்னும் அழுத்தமாகச் செயல்பட்டிருக்க வேண்டிய இடத்தில், வெறும் அறிக்கைகளோடு மட்டுமே நிறுத்திக் கொண்டது அந்தக் கட்சி. ஆனால், ராகுல் காந்தி இந்த முறையும் மீண்டு வந்தார். கொரோனா நோய்த் தொற்றை எதிர்த்து உலகம் போராடிக்கொண்டிருக்க, கொரோனா எதிர்ப்பில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு விமர்சனங்களோடு மீண்டும் களம் கண்டிருக்கிறார்.

ராகுல் காந்தி மற்றும் சுகாதார நிபுணர் ஆஷிஷ் ஜா
ராகுல் காந்தி மற்றும் சுகாதார நிபுணர் ஆஷிஷ் ஜா

தேர்தல் சமயத்தில்கூட, ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் பா.ஜ.க செய்த ஊழல் எனும் 'சௌக்கிதார் சோர் ஹே' எனும் முழக்கத்தை மட்டுமே பெரும் ஆயுதமாகக் கையில் எடுத்தார். ரபேல் ஊழல் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு என்பதாலும், இந்தியாவில் அரசியல் வாதிகள் ஊழல் செய்வது சாதாரணம்தான் என மக்கள் பழகிப் போயிருப்பதாலும் அது பா.ஜ.க-வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகளை விட்டுவிட்டு ராகுல், மக்களின் சமகால பிரச்னைகள் குறித்தும், அதன் தீர்வுகள் குறித்தும் நேரடியாக மக்களைச் சந்தித்து நிறைய பேசியிருக்க வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக அப்போது இருந்தது.

அப்போது கையிலெடுக்கத் தவறிய விஷயத்தைத் தற்போது செய்யத் தொடங்கியிருக்கிறார் ராகுல் காந்தி. ஒருபுறம் இந்தியாவின் பிரச்னைகளைக் கையாளும் திறனும் அறிவும், புரிதலும் தனக்கு இருக்கிறது என நடுத்தர வர்க்க மக்களுக்குப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதற்கு அவர் எடுத்திருப்பது ஜர்னலிஸ்ட் அவதாரம். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் தொடங்கி, ஹார்வர்டு கல்வியாளர்கள் வரை பலரைப் பேட்டி கண்டிருக்கிறார். அந்தந்த விஷயங்கள் குறித்த ஆழ்ந்த அறிவோடும், பெரும் நிதானத்தோடும் அவர்களைக் கையாண்டு அப்லாஸ் அள்ளுகிறார்.

கொரோனா காலத்தில் நாம் கவனிக்கத் தவறிய சில முக்கிய வழக்குகள் - ஒரு பார்வை!

மறுபுறம், சீன எல்லை பிரச்னையைப் பற்றி மத்திய அமைச்சர்களிடம் கேள்வி எழுப்புவது; அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பது; புலம்பெயர் தொழிலாளர்களை நேரில் சந்தித்துப் பேசுவது; காங்கிரஸ் சார்பாக நலத்திட்டங்கள் அறிவிப்பது என ஜனரஞ்சகமாகவும் தனது இருப்பைப் பதிவு செய்து வருகிறார். அரசின் நேரடி பகையாளியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாமல், பத்திரிகையாளர் சந்திப்பில், கட்சி பேதமின்றி இணைந்து பணியாற்றத் தயார் என நல்லெண்ணம் விதைக்கிறார். ஒரு அறிவுஜீவியாக, விமர்சகராக, போராளியாக, மக்கள் சேவகராக, செயல் வீரராக என எல்லா பிம்பங்களிலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதைச் சிரத்தையுடன் கையாளுகிறார் ராகுல் காந்தி.

'மத்திய அரசு வெளிப்படையாக இருக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்து, பா.ஜ.க-வின் பலவீனத்தைப் புத்திசாலித்தனமாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். நான் விமர்சிக்கவில்லை, ஆலோசனை வழங்குகிறேன் எனச் சூட்சுமமாகச் சவால் விடுகிறார். ஆன்லைன் அழைப்புகளில், பல அறிஞர்களோடு ராகுல் காந்தி நிகழ்த்தும் இந்த ஆங்கில உரையாடல்கள் பற்றி விமர்சனங்கள் எழுந்தாலும், தொடர்ந்து மக்களின் கண் பார்வையில் அவர் இயங்கிக்கொண்டே இருக்கிறார் எனப் பதிவாகிறது. அதுவே ராகுலின் முதல் வெற்றி.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கடந்த தேர்தலில், மோடி எனும் ஒரு பிராண்டுக்கு இணையாக வலுவானதொரு முகம், ஒரு ஆளுமையை முன்னிறுத்த முடியாமல் போனது காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரும் பலவீனமாகப் பார்க்கப்பட்டது. ராகுல் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்கும் இந்தியாவே கேட்கும் அளவுக்கு, மிகச் சத்தமாக எதிர்ப்பு காட்டினார் பா.ஜ.க-வினர். பப்பு எனப் பட்டப் பெயரிட்டு, பணக்கார வீட்டு வாரிசாக அவரை சித்திரிப்பதில் தீவிரம் காட்டினர். வெகுஜன மக்களிடையே இவையெல்லாம் ராகுலை அதிகம் அந்நியப்படச் செய்ததாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அதனால்தான், தன்னுடைய அறிவு முதிர்ச்சியை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என ராகுல் களத்தில் இறங்கியிருப்பது தெரிகிறது. அடுத்த தேர்தல் வர இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. ராகுல் காந்தி எனும் பெரும் குடும்ப வாரிசு, மக்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில், ராகுல் மாளிகையிலிருந்து தெருவுக்கு இறங்கி வந்தே ஆக வேண்டும், அதையும் அவர் மெதுவாகச் செய்யத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், மீண்டும் இடைவெளி இல்லாமல் அடுத்த நான்கு ஆண்டுகளும் அவர் களத்தில் செயல்பட்டுக்கொண்டே இருப்பது மிக அவசியம்.

சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், "கொரோனா அச்சம், சீனாவின் ஊடுருவல், பொருளாதாரச் சீர்குலைவு, நேபாள் போன்ற அண்டை நாடுகளுடன் பிரச்னை, 14 கோடி குடும்பங்களின் வேலை இழப்புகள், அகதிகளாய் மக்கள், இயற்கைச் சீற்றங்கள், முடங்கியிருக்கும் அரசு, செயல்படாத நீதிமன்றம் போன்ற ஜனநாயக அமைப்புகள், அமைதி காக்கும் பிரதம மந்திரி என இந்தியா பேராபத்தில் இருக்கிறது. இவற்றையெல்லாம்விட, இவ்வளவையும் கடந்து 130 கோடி மக்களைப் பாதுகாத்து முன் நடத்திச் செல்ல சரியான தலைமைக்குப் பஞ்சமிருக்கிறது அதுவே இன்றைய இந்தியாவின் தலையாயப் பிரச்னை" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பிரஷாந்த் பூஷன்
பிரஷாந்த் பூஷன்

ஒரு பொருளுக்குச் சமமான தரமுள்ள, விலையுள்ள மாற்று கம்பெனியின் எதிர் பொருள் சந்தையில் இருப்பதும், அவற்றிற்கிடையேயான தொடர் போட்டியும், நல்ல லாபத்துக்கான வியாபார உத்தி. கூகுள் நிறுவனத்தோடு போட்டி போட ஆப்பிள் நிறுவனமும், பெப்சிக்கு எதிராக கோகோ கோலாவும், சினிமாவில் சிவாஜி - எம்.ஜி.ஆர் தொடங்கி அஜித்-விஜய் வரையிலும், அரசியலில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அத்தகைய சரி சமமான ஆளுமைகள். இன்றைய காலகட்டத்தில், வலுவான பா.ஜ.க-வை எதிர்த்து நேருக்கு நேர் போட்டியிடுவதற்காவது, காங்கிரஸில் வசீகரமான ஒரு தலைவர் தேவை. அந்தத் தலைவராக ராகுல் காந்தி தன்னை வார்த்தெடுக்க தொடங்கிவிட்டார் என்றே தெரிகிறது. காலம்தான் பதில் சொல்லும்.

அடுத்த கட்டுரைக்கு