Published:Updated:

`என் பெயரையோ, இயக்கத்தின் பெயரையோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை!’ - நடிகர் விஜய்

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

`எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ, கட்சிப் பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’ - நடிகர் விஜய்.

தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகிவருகின்றன. அ.தி.மு.க., தி.மு.க என ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டிவருகின்றன. அதேபோல், கூட்டணி குறித்த பேச்சுகளும் எழுந்திருக்கின்றன.

விஜய் செல்ஃபி
விஜய் செல்ஃபி
Twitter/@ActorVijay

அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க ஆகிய கட்சிகள் தரப்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. மற்ற கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், கொரோனா சூழலால் இந்தத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சி தொடங்க ரஜினி விரும்பவில்லை என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. அதேநேரம், சென்னையில் மூன்று நாள்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கும் மக்கள் நீதி மய்யம், முதலமைச்சர் வேட்பாளராகக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனைத் தேர்வுசெய்திருக்கிறது.

`மக்கள் பணிகள் தொடரட்டும்..!’ - மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் நடிகர் விஜய்

இந்தச்சூழலில், நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருப்பதாகத் தகவல் வெளியானது. `அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்வதற்குத் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தில், கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால், தமிழக அரசியல் களம் பரபரத்தது.

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய்
மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய்

இந்தநிலையில், `` `அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்’, `கட்சியின் பெயரைத் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய்’ என்ற செய்தி தவறானது’’ என விஜய் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. அவரது அதிகாரபூர்வ மக்கள் தொடர்பு அலுவலரான ரியாஸ் அகமது, இது தொடர்பாக ட்விட்டரில் விளக்கமளித்திருக்கிறார்.

 `5 கேள்விகள்... மெகா சர்வே... ரகசிய மீட்டிங்!’ - `2021’ விஜய்யின் `மாஸ்டர்’ ப்ளான்?

சமீபத்தில் சென்னை பனையூரிலுள்ள வீட்டில் தன்னுடைய மக்கள் இயக்கத்தினரைச் சந்தித்து, புகைப்படங்கள் எடுத்திருக்கிறார் நடிகர் விஜய். மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் அரசியல்ரீதியாகவே ஆலோசனை நடத்தினார் என்றும் அப்போது விவாதிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக விஜய் தரப்பிலிருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் விளக்கம் கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``இன்று எனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்விதத் தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இதன்மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். மேலும், எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ, கட்சிப் பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமது இயக்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜய் அறிக்கை
விஜய் அறிக்கை

மேலும், என் பெயரையோ, புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று விஜய், தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு