Published:Updated:

பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டம்... விரைவில் மும்பையில் நடத்தத் திட்டம்?!

சஞ்சய் ராவுத்

பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் விரைவில் மும்பையில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டம்... விரைவில் மும்பையில் நடத்தத் திட்டம்?!

பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் விரைவில் மும்பையில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Published:Updated:
சஞ்சய் ராவுத்

நாட்டில் பாஜக அல்லாத முதல்வர்கள் எண்ணிக்கை குறைந்த அளவிலே இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் தோல்வி அடைந்துவிட்டதால் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் பலம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதனால் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்துவருகின்றன. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போன்ற தலைவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மம்தா பானர்ஜி இதற்காக ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்நிலையில் பாஜக அல்லாத எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள் கூட்டத்தை மும்பையில் கூட்டி முக்கிய ஆலோசனை நடத்த மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். இதற்காக பாஜக அல்லாத அனைத்து முதல்வர்களுக்கும் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ``மும்பையில் பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அனைத்து முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

மும்பையில் பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட முயற்சிகள் நடக்கின்றன. இக்கூட்டத்தில் மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது, வேலையில்லா திண்டாட்டம், மத வன்முறையைப் பரப்ப நடக்கும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது. அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் வாக்காளர்களைக் கவர அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் அரசியல் கட்சிகள் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்தின. மகாராஷ்டிராவில் இந்து ஒவைசி (ராஜ்தாக்கரே) அனுமன் ஜெயந்தியின்போது அமைதியைச் சீர்குலைக்க முயன்றார்” என்று தெரிவித்தார். மகாராஷ்டிராவில்தான் அதிகப்படியாக அமலாக்கப் பிரிவும், சிபிஐ-யும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism