Published:Updated:

தூத்துக்குடி:`முதல்வர் மனுவை வாங்கினார்; ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை!’ -ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``தூத்துக்குடிக்கு வந்த முதல்வர் பழனிசாமி, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காததும், அவர்களின் கோரிக்கை குறித்து மேடையில் எதுவும் பேசாததும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் கூறியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``நான் விவசாயின்னு சொன்னாலே ஸ்டாலினுக்குக் கோபம் வருது. எனக்குத் தொழில் விவசாயம்தான். ஆனா, ஸ்டாலினுக்கு என்ன தொழில் இருக்கு. அவர் என்ன தொழில் செய்யுறார்? `விவசாயிகள் வாயில் விஷம் ஊற்றிய விஷக்கிருமி பழனிசாமி’ என என்னைப் பார்த்துச் சொல்கிறார். எவ்வளவு மட்டமான ஒரு பேச்சு... எம்.ஜி.ஆரை பெரியப்பா என்கிறார் ஸ்டாலின். அப்படியானால், அந்தப் பெரியப்பாவை ஏன் கட்சியைவிட்டு நீக்கினீர்கள்... சட்டமன்றத்தில் அவர்மீது செருப்பு வீசி அவமானப்படுத்தியது ஏன்?

பிரசாரத்தில் பழனிசாமி
பிரசாரத்தில் பழனிசாமி

தற்போது ஸ்டாலின் ஊர் ஊராகக் கூட்டம் நடத்தி மக்களிடம் மனுக்களை வாங்கிப் பெட்டியில் போடுகிறார். அவர் முதல்வர் ஆனதும் அதற்குத் தீர்வு அளிக்கப்படும் எனச் சொல்லி பெட்டியை எடுத்துச் செல்கிறார். அவர் முதல்வர் ஆகப்போவதும் இல்லை. பெட்டியைத் திறக்கப்போவதும் இல்லை. அவரது முதல்வர் கனவு ஒருபோதும் பலிக்காது” எனப் பேசினார். சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த முதல்வரை விமான நிலையத்தில் சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால், அது குறித்து பொதுக்கூட்ட மேடையில் எதுவுமே பேசாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்கின்றனர் இயக்கத்தை சேர்ந்த சிலர். இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியை பாத்திமா பாபுவிடம் பேசினோம். ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் நடந்த போராட்டத்தின் 100-வது நாளில் ஏற்பட்ட கலவரத்தில் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதற்குக் காரணமானவர்கள்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

பொதுக்கூட்டத்தில் பழனிசாமி
பொதுக்கூட்டத்தில் பழனிசாமி

உயிர்நீத்த 13 பேரின் நினைவாக தூத்துக்குடியின் மையப்பகுதியில் நினைவகம் அமைக்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கிட வேண்டும், ஸ்டெர்லைட் போன்ற அடர் சிவப்பு தொழிற்சாலைகளை அனுமதிக்காத வகையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கைகள்.

ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலையும் மக்களின் ஆரோக்கியத்தையும் சீர்கெடுத்திருக்கிறது; பல விதிமீறல்களை செய்திருக்கிறது என்ற அடிப்படையில்தான் அரசு அந்த ஆலைக்கு சீல் வைத்திருக்கிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்றத்திலும் அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறது என்றபோது மக்களின் நியாயங்களை ஏற்றுக்கொள்கிறது என்றுதானே அர்த்தம்... அப்படியிருக்கும்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது ஒரு பெரிய முரண்பாடாகவே இருக்கும். மூன்று ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்காக மக்கள் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

பாத்திமா பாபு
பாத்திமா பாபு

இதனால், அன்றாட தொழில்களும், எதிர்காலமும் பாதிப்புக்குள்ளாகின்றன. சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால் உயிரிழந்த தந்தை, மகனின் குடும்பத்தில் மூத்த மகள் பெர்சிக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகள், காயம்பட்டவர்களுக்கு சமையலர், கிராம உதவியாளர், அலுவலக உதவியாளர் போன்ற சாதாரணப் பணியிடங்களே வழங்கப்பட்டுள்ளன. அதற்காக சாத்தான்குளம் சம்பவத்தைக் காரணம் காட்டவில்லை. உயிரிழப்பு ஈடுகட்ட முடியாதது. இவர்களுக்கும் பாரபட்சமின்றி அவரவர் கல்வித்தகுதிக்கேற்ப பணியிடத்தை வழங்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளித்தோம். மனுவை வாங்கிக்கொண்டவர் நடவடிக்கை எடுக்கிறேன் எனச் சொன்னார். ஆனால், தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் அந்தக் கோரிக்கைகளில் எதைப் பற்றியும் முதல்வர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அந்தப் பொதுக்கூட்டம் நடந்த பகுதியில்தான் கடந்த 2018, மே மாதத்துக்கு முன்பாக மார்ச்சில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். மூன்று மாதங்களுக்கு முன்பாக கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் வந்தபோதும், அவரை நேரில் சந்திக்க உயிரிழந்தவர்கள், காயம்பட்டவர்களின் குடும்பத்தினர் பலமுறை முயன்றனர்.

பொதுக்கூட்டத்தில் மக்கள்
பொதுக்கூட்டத்தில் மக்கள்

மாவட்ட ஆட்சியரிடம் முதல்வரைச் சந்திக்க மனுவும் கொடுத்தார்கள். ஆனால், அதில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளில் இரண்டு பேரை மட்டும் மனு கொடுக்க அனுமதித்தனர். ``மனு மட்டும்தான் கொடுக்கணும். வேற எதுவும் பேசக் கூடாது” என கண்டிஷன் போட்டுத்தான் கொடுக்கவைத்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு முதல்வர் இதுவரை வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை. கோரிக்கை மனு கொடுத்தும் அதைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்பதுதான் எங்களுக்குப் பெரிய ஏமாற்றம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு