Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: லட்சக்கணக்கில் ஏலம்போன ஊராட்சித் தலைவர் பதவிகள்?! - விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சில ஊராட்சிகளில், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்குப் பல லட்சங்களில் ஏலம்விடும் சட்டவிரோதச் செயல்கள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் வார்டு வரையரைக்காக நடைபெறாமல் இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் - 28, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் - 293, கிராம ஊராட்சி தலைவர்கள் - 688, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் - 5,088, என மொத்தமாக 6,097 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் 2,948 வாக்குச்சாவடிகளில், 694 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.

புகாரளித்த கிராம மக்கள்
புகாரளித்த கிராம மக்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமாக 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில், செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக 6-ம் தேதியும், காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்டமாக 9-ம் தேதியும் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

மாவட்ட கவுன்சிலருக்கு ரூ.1 கோடி வரை... உள்ளாட்சி பேரம் பின்னணி!

இந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக, மனுத்தாக்கல் செய்வது கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பொன்னங்குப்பம் ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு சட்டவிரோதமாக ஏலம் விடப்பட்டிருக்கிறது. இந்த பொன்னங்குப்பம் ஊராட்சியில், துத்திப்பட்டு எனும் கிராமமும் இடம்பெற்றுள்ளது. பொன்னங்குப்பம் கிராமத்தில் 1,450 வாக்காளர்களும், துத்திப்பட்டு கிராமத்தில் 2,450 வாக்காளர்களும் இருக்கிறார்களாம். இதனால் பொன்னங்குப்பம் கிராமம் ஊராட்சியாகவே இருந்தாலும், அதிக வாக்குகளைக்கொண்ட துத்திப்பட்டு கிராமத்தினர் எடுப்பதே முடிவாக இருந்துவந்திருக்கிறது. இந்தநிலையில், பொன்னங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான ஏலத்தை நேற்று (17.09.2021) இரவு துத்திப்பட்டு கிராமத்தினர் மறைமுகமாக நடத்தியிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

பொன்னங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக, துத்திப்பட்டை சேர்ந்த முனுசாமி என்பவரின் மனைவி மங்கை என்பவர் 13,00,000 (13 லட்சம்) ரூபாய் ஏலத்துக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறாராம். அதேபோல, 30,000 ரூபாய்க்கு புகழேந்தி என்ற நபரும்; 29,000 ரூபாய்க்கு ஆனந்த் என்ற நபரும் வார்டு உறுப்பினர்களாக அந்த ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களாம். இவ்வாறு ஏலம் விடப்பட்ட சம்பவம் பொன்னங்குப்பம் கிராமத்தினருக்கு தெரியவந்திருக்கிறது. உடனே இன்று காலை செஞ்சி வட்டாட்சியர் மற்றும் பி.டி.ஓ-விடம் இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளனர் அந்த கிராமத்தினர். அதைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக, காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பொன்னங்குப்பம் ஊராட்சிக்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.

பேச்சுவார்த்தையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்
பேச்சுவார்த்தையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்

இது தொடர்பாக பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரைத் தொடர்புகொண்டு பேசினோம். ``இரண்டு கிராமம் சேர்ந்ததுதான் எங்கள் ஊராட்சி. இந்த முறை எங்கள் ஊராட்சியில் பட்டியல் சமூகத்துப் பெண்கள் தலைவர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தைவிட துத்திப்பட்டு கிராமத்தில் 1,000 ஓட்டுகள் அதிகம். அதனால், ஒவ்வொரு முறையும் எங்கள் கிராமத்தை மதிக்காமல் துத்திப்பட்டு ஊர்க்காரங்களே ஏலம்விட்டு தலைவரை தேர்ந்தெடுத்துப்பாங்க. இந்த மாதிரி ஏற்கெனவே மூணு முறை நடந்திருக்கு. இப்போ நாலாவது முறையாக ஏலம்விட்டிருக்காங்க. இது பற்றித் தகவல் தெரிஞ்சவுடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் கூறியிருந்தோம். அதிகாரிகளும் ஒலிபெருக்கி மூலமாக, ``ஏலம் மூலம் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது" அப்படின்னு முன்கூட்டியே எங்க ஊராட்சியில் அறிவிப்புவிட்டாங்க. ஆனா, நேற்று இரவு 9 மணிபோல துத்திப்பட்டுல இருக்கிற ஏரியில ஏலம் நடத்தியிருக்காங்க. இரண்டு நாட்டாமைக்காரங்க முன்னிலையில இந்த ஏலம் நடந்திருக்கு.

உள்ளாட்சி உய்யலாலா!

இதுக்கு முன்னாடி நடந்த தேர்தல்களில் எப்படி ஏலம்விட்டு பணத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தோமோ... அதே மாதிரி, இந்த முறை போட்டியிடும் பட்டியல் சமூகத்தினரும் ஏலம்விட்டு பணத்தைப் பகிர்ந்து கொடுக்கணும்" அப்படின்னு இந்த ஏலத்தை நடத்தியிருக்காங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

13 லட்சம் ரூபாய்க்கு ஊராட்சித் தலைவர் பதவியையும், 30,000, 29,000 ரூபாய் வீதம் இரண்டு வார்டு உறுப்பினர்கள் பதவியையும் ஏலம்விட்டிருக்காங்க. ஏலத்தின் மூலம் முடிவுசெய்யப்பட்ட அந்த மூன்று வேட்பாளர்களுமே துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் எங்கள் கிராமத்துக்கு தனி ஊராட்சி அந்தஸ்து கேட்டும், தேர்தலை முறைப்படி நடத்தக் கோரியும், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர், ``தேர்தலை நாம் சரியாக நடத்த வேண்டும். அதற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஏலம்விடப்பட்டது உண்மையானால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறிச் சென்றிருக்கிறார். எங்கள் ஊராட்சியில் மொத்தம் ஒன்பது வார்டுகள் உள்ளன. அவற்றில் துத்திப்பட்டு கிராமத்தில் ஆறு வார்டுகள் வருகின்றன. இரண்டு வார்டு உறுப்பினர்களுக்கான ஏலம்விடப்பட்ட நிலையில், மீதமுள்ள நான்கு வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர் மற்றும் உப தலைவர் பதவிகளுக்கு இன்று இல்லாட்டி நாளை இரவு அங்கே ஏலம்விடப்போவதாகத் தெரியுதுங்க" என்றார் ஆதங்கத்துடன்.

பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை

இதேபோல காணை-யை அடுத்த சித்தேரி ஊராட்சியிலும், ஊராட்சித் தலைவர் பதவி 14,00,000 ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட இருப்பதால், இந்த ஏலம் அங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு எதிரில் நடந்திருக்கிறதாம். சற்குணம் என்ற நபருக்கு, 14 லட்சத்துக்கு ஏலம் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல். இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்திவருகின்றனராம். ஜனநாயகத்துக்கு முரணான இது போன்ற செயல்கள் துடைக்கப்பட வேண்டியது அவசியமானதே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு