Published:Updated:

புதுக்கோட்டை: ``நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தமிழகத்துக்கே அவமானம்” - துரை வைகோ

துரை வைகோ

``வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் இறையூர் நிகழ்வு தொடர்பாக ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள்.” - துரை வைகோ

புதுக்கோட்டை: ``நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தமிழகத்துக்கே அவமானம்” - துரை வைகோ

``வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் இறையூர் நிகழ்வு தொடர்பாக ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள்.” - துரை வைகோ

Published:Updated:
துரை வைகோ

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அந்தக் கிராமத்தை ம.தி.மு.க-வின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பார்வையிட்டார். ஒவ்வொரு வீடாகச் சென்றவர், இந்தச் செயலில் ஈடுபட்டதாக, யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்று பட்டியலின மக்களிடம் கேள்வியை எழுப்பினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது, மிகவும் இழிவான செயல், கண்டிக்கத்தக்கது. விஞ்ஞான உலகில் இது போன்ற இழிவான செயலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்து வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். மேலும், இது போன்ற செயல் தமிழகத்தில் வேறு எங்கும் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இழிவான செயல் நடைபெற்றது தமிழகத்துக்கு அவமானம். ஒவ்வொரு தமிழனுக்கும் இது அவமானம். ஆறறிவு படைத்த மனிதன், சக மனிதனுக்கு இது போன்ற இழிவான செயலைச் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வளரும் தலைமுறைகளை முறையாகப் படிக்கவைத்து அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டிய இந்தக் காலகட்டத்தில், சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்கள் தூண்டுவதைப்போல சில சமூகவிரோதிகள் இது போன்று ஈடுபடுவது வேதனை.

புதுக்கோட்டை: ``நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது  தமிழகத்துக்கே அவமானம்” - துரை வைகோ

தமிழக அரசு, காவல்துறை இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துவருகிறது. 24 மணி நேரமும் காவல்துறையும் ஆட்சியரும் பொதுமக்களைக் கண்காணித்து பாதுகாப்புக் கொடுக்க முடியாது. அதனால் மக்கள்தான், குறிப்பாக, சாதி, மத, இன வேறுபாடுகள் அனைத்தையும் களைந்துவிட்டு நாம் அனைவரும் மனிதர்கள் என்று மனிதநேயத்துடன் பழக வேண்டும்.

இது முழுமையாக ஒழிய, மக்கள் திருந்தி சாதி, மத வேறுபாட்டால் நம்மைப் பிரிக்க முடியாது என்று ஒருமித்த கருத்தோடு இருக்கும்போதுதான் இது சாத்தியமாகும். சாதிய அமைப்புகள் சாதிரீதியாக செயல்படக்கூடியவர்கள் இது போன்று செயல்பட்டால் நம்மை மக்கள் புறக்கணிப்பார்கள் என்ற எண்ணம் தோன்றும். அப்போதுதான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இறையூர் மட்டுமின்றி இது போன்ற செயல் எங்கு நடந்தாலும் ம.தி.மு.க குரல் கொடுக்கும். மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும். மனிதர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதே ம.தி.மு.க-வின் நோக்கம். வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் இறையூர் நிகழ்வு தொடர்பாக ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள். இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்கும் வரை நாங்களும் ஓய மாட்டோம் மக்களுடன் சேர்ந்து நிற்போம்.

அரசியல் இயக்கங்களில் உள்ளவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை, ஒரு சித்தாந்தம் இருக்கலாம். அந்தக் கொள்கையின்படி அவர்கள் கொள்கைகளை, சித்தாந்தத்தை மக்களிடம் சென்று அதைப் பரப்பிவருகின்றனர். அதேநேரத்தில் பத்திரிகையாளர்கள் அவர்களது கடமையைச் செய்கின்றனர். ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அதன்படி பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளிடம் கேள்விகளை முன்வைக்கின்றனர். அந்தக் கேள்வியைக் கேட்கும்போது அரசியல்வாதிகள் பதில் சொல்லவேண்டியது அவர்களின் கடமை. அதைவிடுத்து பத்திரிகையாளர்களை அவமானப்படுத்துவது தவறான செயல்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை இது போன்று பேசுவது எதிர்கால அரசியலுக்கும் நல்லது இல்லை; அவரது இயக்கத்துக்கும் இது நல்லது இல்லை" என்றார்.