Published:Updated:

ஜெ.அன்பழகன் பொறுப்பு யாருக்கு? வலுக்கும்போட்டி... குழப்பத்தில் ஸ்டாலின்!

ஜெ.அன்பழகன் - ஸ்டாலின்

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரான அன்பழகனின் மறைவுக்குப் பிறகு, மாவட்டப் பொறுப்பாளர் பதவியைப் பிடிப்பதற்கான ரேஸ் சூடு பிடித்துள்ளது.

ஜெ.அன்பழகன் பொறுப்பு யாருக்கு? வலுக்கும்போட்டி... குழப்பத்தில் ஸ்டாலின்!

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரான அன்பழகனின் மறைவுக்குப் பிறகு, மாவட்டப் பொறுப்பாளர் பதவியைப் பிடிப்பதற்கான ரேஸ் சூடு பிடித்துள்ளது.

Published:Updated:
ஜெ.அன்பழகன் - ஸ்டாலின்

சென்னை தி.மு.க-வின் தூண்களில் ஒருவராக இருந்த ஜெ.அன்பழகனின் மறைவு, அக்கட்சியை அசைத்துப்பார்த்துள்ளது. சென்னைக்குள் நடைபெறும் எந்த ஆர்ப்பாட்டம், போராட்டமாக இருந்தாலும், ‘அன்பை கூப்பிடு’ என மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியே பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அன்பழகனின் ஆதிக்கம் சென்னை தி.மு.க-வில் அதிகம். இது, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு குறையத் தொடங்கியது தனிக்கதை. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் மனத்தில் பட்டதை பட்டவர்த்தமாகச் சொல்லும் துணிச்சலுடையவர் ஜெ.அன்பழகன். இதைப் பற்றி பல நிகழ்வுகளை தி.மு.க. நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கருணாநிதியுடன் ஜெ.அன்பழகன்
கருணாநிதியுடன் ஜெ.அன்பழகன்

ஒருமுறை அறிவாலயத்தில் இருந்து கோபாலபுரம் கிளம்பிய ஸ்டாலின், தன்னுடன் அன்பழகனை வருமாறு கேட்டார். ஸ்டாலினின் காரில் கு.க.செல்வம் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு காரில் ஏற அன்பழகன் மறுத்துவிட்டார். நேராக கோபாலபுரம் வந்த ஸ்டாலின், ‘‘நான் கூப்பிட்டுக்கூட என் கார்ல அன்பு ஏற மாட்டேங்குறார்” எனக் குறைபட்டுக் கொண்டார். பின்னாலேயே வந்த அன்பழகனிடம் கருணாநிதி விசாரிக்கவும், "ஆமாங்க தலைவரே. அ.தி.மு.க-வுல இருந்து வந்தவரையெல்லாம் பின்னால வச்சுகிட்டு சுத்துனா, நான் எப்படி கார்ல ஏற முடியும்?” என ஒரே போடாகப் போட, ஸ்டாலினால் எதுவும் பேச முடியவில்லை. ஸ்டாலினிடம் இப்படி ஓப்பனாகப் பேசக்கூடிய ஒரு மாவட்டச் செயலாளர் இப்போது தி.மு.க-வில் இல்லை என்பது வேதனையான விஷயம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அன்பழகன் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை மேற்கு மாவட்டம், கிழக்கில் சேப்பாக்கத்தில் தொடங்கி, மேற்கில் மதுரவாயல் வரை பரந்துவிரிந்தது. மத்திய சென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர் என மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. தி.நகர் போன்ற பெருவணிக ஏரியாக்கள் அன்புவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. தி.மு.க-வை பொறுத்தவரை ஒரு மாவட்டச் செயலாளர் பதவி காலியாகிவிட்டால், கட்சி ஜனநாயகப்படி புதிய மா.செ தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிகப் பொறுப்பாளராக ஒருவரை மேலிடம் நியமிக்கும். அன்பழகன் மறைந்துவிட்ட நிலையில், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளருக்கான ரேஸில் யாரெல்லாம் இருக்கிறார்கள்... ஸ்டாலினின் மனநிலை என்ன? விவரமறிய அறிவாலயத்தை வட்டமடித்தோம்.

ஸ்டாலினுடன் எம்.கே.மோகன்
ஸ்டாலினுடன் எம்.கே.மோகன்

1. அண்ணாநகர் எம்.கே.மோகன்

அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ-வான எம்.கே.மோகனின் பெயர் தான் முதலில் அடிபடுகிறது. ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்பதோடு, இவரது அதிகாரபூர்வ சொத்துமதிப்பு 170 கோடி ரூபாய். எந்தச் செலவென்றாலும் மோகன் சமாளித்துவிடுவார் எனத் தெம்பாக இருக்கிறார்கள். மோகனின் மகன் கார்த்திக்கும் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் தொழில்முறை பார்டனர்கள் என்பது மோகனுக்கு பலம் சேர்க்கும் மற்றொரு விஷயம். ஆனால், கட்சி நிர்வாகம், உள்ளடி அரசியலை தட்டிவைக்கும் திறமை போன்ற விஷயங்களில் அனுபவமில்லாதது அவருக்கு மைனஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. கு.க.செல்வம்

ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் தி.மு.க தலைமை நிலையச் செயலாளருமான கு.க.செல்வம், மாவட்டப் பொறுப்பாளர் பதவிக்கு கடுமையாக முட்டி மோதுகிறார். இவருக்கும் மறைந்த அன்பழகனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். கடந்த ஆண்டு, இளைஞரணி சார்பாக ஆயிரம் விளக்கு தாமஸ் சாலையில் உறுப்பினர்கள் இணைப்பு விழா நடைபெற்றது.

விழாவில் பேசிய அன்பழகன், “ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி போட்டியிட வேண்டும். நாங்கள் அவரை ஜெயிக்க வைப்போம்” என கு.க.செல்வத்தை மேடையில் வைத்துக் கொண்டே பேசியதை இன்றுவரை செல்வத்தால் ஜீரணிக்க முடியவில்லை. “தொகுதிக்குள்ளேயே பெரிய அறிமுகம் இல்லாதவர், எப்படி பகுதிச் செயலாளர்களைக் கட்டுப்படுத்தி வேலை வாங்குவார்?” எனக் கட்சிக்காரர்களே புரியாத புதிராக பார்க்கின்றனர். ஸ்டாலினின் தீவிர விசுவாசி என்கிற ஒற்றை அடையாளம் அவருக்கு பதவியைப் பெற்றுத் தந்துவிடுமா என்பதும் சந்தேகம்தான்.

கு.க.செல்வம், வி.பி.கலைராஜன்
கு.க.செல்வம், வி.பி.கலைராஜன்

3. வி.பி.கலைராஜன்

அ.தி.மு.க, அ.ம.மு.க. எனப் பயணித்துவிட்டு தி.மு.க-வுக்கு வந்திருப்பவர் வி.பி.கலைராஜன். கழகத்தின் இலக்கிய அணிச் செயலாளராக இருக்கிறார். அன்பழகனை எதிர்த்து அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக அரசியல் செய்தவர். தி.நகரின் எம்.எல்.ஏ -வாக இரண்டு முறை இருந்தவர். மாவட்டத்தின் நீள அகலமெல்லாம் அறிந்திருப்பதும் அனுபவத்தால் கட்சியினரை அரவணைத்துச் செல்வதும் கலைராஜனுக்கு ப்ளஸ் பாயின்ட். ஆனால், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர் என்கிற அதிருப்தி லேசாக பூக்கிறது. “அ.ம.மு.க -வில் இருந்து வந்த செந்தில்பாலாஜி கரூரைக் கலக்கவில்லையா. வாய்ப்பு கொடுத்தால் அண்ணனும் கலக்குவார்” என்கிறது கலைராஜன் ஆதரவு வட்டம். கலைராஜனும் ஸ்டாலின் குடும்ப ரூட் மூலமாக மாவட்டப் பொறுப்பாளர் பதவிக்கு காய் நகர்த்துகிறார்.

4. ஆயிரம் விளக்கு மோகன்

தி.மு.க மாணவரணி மாநில துணைச் செயலாளராக இருக்கும் மோகனும் பொறுப்பாளர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார். 'மிட் நைட் மசாலா' என்கிற உணவகத்தை நடத்தி வரும் மோகன், கட்சிக்காக 15 வருடங்கள் பலன் எதிர்பாராமல் செலவு செய்திருப்பவர். கட்சிக்குள் இளம் ரத்தம் பாய்ச்ச தலைமை முடிவெடுத்துவிட்டால், மோகனுக்கு பதவி நிச்சயம்.

மோகன், மதன்மோகன், தனசேகரன்
மோகன், மதன்மோகன், தனசேகரன்

5. சேப்பாக்கம் மதன் மோகன்

சேப்பாக்கம் பகுதி செயலாளரான மதன்மோகன், தீவிர உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர். இந்த அடையாளத்துடன் மாவட்டப் பொறுப்பாளர் பதவிக்கு அவரும் போட்டிபோடுகிறார். ஆனால், செலவு செய்வாரா என்பதுதான் கேள்விக்குறி. “தி.நகர் போன்ற வணிக ஏரியாக்களில் இருந்து திரட்டப்படும் கட்சி நிதியை கையாளவே தனித்திறமை வேண்டும். மதன் இன்னும் வளர வேண்டியதிருக்கிறது” என்கிறது சீனியர் வட்டாரம். ஆனாலும் விடாப்பிடியாக பதவிக்கு மதன் முட்டி மோதுகிறார்.

6. தனசேகரன்

தி.மு.க-வின் உயர்மட்டக் குழு உறுப்பினர் தனசேகரனும் மாவட்டப் பொறுப்பாளர் பதவியைக் கேட்கிறார். இவர் ஏரியாவான விருகம்பாக்கம் தொகுதி, தென்சென்னை மாவட்டத்திற்குள் வருகிறது. ஆனால், “சென்னை மேற்கு மாவட்டத்தை எனக்கு தாங்க. எவ்வளவு செலவு வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்” என ஸ்டாலினிடமே தூது அனுப்பியிருக்கிறார். விருகம்பாக்கம் தொகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியடைந்ததால், இம்முறை சீட் கிடைப்பது கஷ்டம். அதற்குள் மாவட்டப் பொறுப்பாளராக அமர்ந்துவிட்டால் செட்டில் ஆகிவிடலாம் என்று தனசேகரன் நினைக்கிறாராம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மாவட்டப் பொறுப்பாளருக்கான ரேஸில் இன்னும் சில பகுதிச் செயலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், புதியவரை நியமிக்கும் மூடில் ஸ்டாலின் இல்லை என்கிறது அறிவாலய வட்டாரம். “அன்பு இருந்த இடத்துல யாரைப் போடுவேன்?” என சீனியர்களிடம் ஸ்டாலின் மனம் வெதும்பிவிட்டாராம். மாவட்ட நிர்வாகத்தை நிர்வகிப்பதற்கு பகுதிச் செயலாளர்களைக் கொண்ட குழு அமைக்கும் யோசனையில் ஸ்டாலின் இருக்கிறார். கொரோனா காலம் முடிந்த பிறகு, மாவட்டப் பொறுப்பாளர் நியமனம் இருக்கும் என்கிறார்கள். கடந்த 10-ம் தேதி இறந்த அன்பழகனுக்கு மூன்று நாள்கள் துக்கத்தை தி.மு.க. அனுஷ்டிக்கிறது. இதற்குப் பிற்பாடு அறிவிப்பு வெளியாகலாம்.

ஜெ.அன்பழகன் இருந்த கட்சிப்பொறுப்பில் யாரை வேண்டுமானாலும் கட்சித்தலைமை நியமிக்கலாம். ஆனால், அவருடைய இடத்தை இப்போதைக்கு யாராலும் நிரப்பவே முடியாது என்பதுதான் சென்னை தி.மு.க.வினரின் பொதுவான மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது. கட்சித் தலைமைக்கும் அது நன்றாகவே தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism