Published:Updated:

பட்டணப்பிரவேசம்: ஆதினத்தால் அமுங்கிய விவகாரம்; திமுக முடிவு மாறியது எப்படி?!

தருமபுற ஆதினம்- பட்டணப்பிரவேசம்.

முதல்வருக்கு நெருக்கமான குன்றக்குடி ஆதினம் மூலம் பேசலாம் என்று அதிகாரிகள் சொல்ல, சேகர்பாபு குன்றக்குடி ஆதினத்தைத் தொடர்பு கொண்டார். அதன் பிறகு...

பட்டணப்பிரவேசம்: ஆதினத்தால் அமுங்கிய விவகாரம்; திமுக முடிவு மாறியது எப்படி?!

முதல்வருக்கு நெருக்கமான குன்றக்குடி ஆதினம் மூலம் பேசலாம் என்று அதிகாரிகள் சொல்ல, சேகர்பாபு குன்றக்குடி ஆதினத்தைத் தொடர்பு கொண்டார். அதன் பிறகு...

Published:Updated:
தருமபுற ஆதினம்- பட்டணப்பிரவேசம்.

“சமய மறுப்புக் கொள்கையில் சிலர் எப்படி இருக்கிறார்களோ நாங்களும் எங்களது கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். மனிதரை மனிதர் தோளில் சுமப்பது குறித்த பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனாலும் சுமப்பவர்கள் அவர்கள் விருப்பப்பட்டுத்தான் அவ்வாறு சுமக்கிறார்கள். வரும் மே மாதம் 22-ம் தேதி அரசு அனுமதியோடு பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்” என்று தருமபுர ஆதினத்தின் ஆதினம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

முதல்வருடன் குன்றக்குடி அடிகளார்
முதல்வருடன் குன்றக்குடி அடிகளார்

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெரும் விவாதத்தைக் கிளப்பிய பட்டணப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதித்திருந்த தடையை கடந்த 8-ம் தேதி நீக்கியிருக்கிறது தமிழக அரசு. அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூறியதுபோல, இந்த ஆன்மிக நிகழ்வு இந்த ஆண்டும் எவ்வித தடங்களும் இல்லாமல் நடக்கப்போகிறது. தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் அமர வைத்து, மடத்தைச் சுற்றியுள்ள 4 வீதிகளிலும், தோளில் தூக்கிச் செல்வர். அந்த நேரத்தில் ஆதீனம் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். இந்த நிகழ்ச்சியே பட்டணப்பிரவேசம் எனப்படுகிறது. தற்போது தமிழகத்தை ஆட்சி செய்துவரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு ஆன்மிகத்திற்கு எதிரான அரசு என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த தடை நீக்க உத்தரவு அதற்கு ஒருவகையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழகத்தில் உள்ள முக்கிய சைவ ஆதினங்களில் ஒன்றான மதுரை ஆதினத்தின் ஆதினம் “ பட்டணப்பிரவேசத்தை உலகறிய செய்த கி.வீரமணிக்கு நன்றி” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆம்! பட்டணப்பிரவேசம் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு ஆண்டுதோறும் தருமபுர ஆதினத்தில் நடந்துவந்தாலும் அதைப் பற்றி பெரும்பாலும் யாரும் அறியாமலே இருந்தனர். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் மயிலாடுதுறை கோட்டாச்சியர் பாலாஜியிடம் திராவிடர் கழகத்தினர் “மனிதனை மனிதன் துாக்கிச் சுமக்கும் பட்டணப்பிரவேசத்திற்கு தடைவிதிக்க வேண்டும்" என்று மனு அளிக்க கோட்டாச்சியரும் தடை உத்தரவை பிறப்பித்தார். இதன்பிறகு இந்த விவகாரத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தது. வைணவ சமயத்தைச் சேர்ந்த ஜீயர்களும் இந்த விவகாரத்தில் அரசுக் எதிராகக் குரல் கொடுத்தனர். சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் வெடித்தது. “பட்டணப்பிரவேசத்தினை நிறுத்துவது அரசின் நோக்கம் அல்ல. இதுகுறித்து விரைவில் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று தமிழக அரசின் சார்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டது.

சேகர்பாபு - ஸ்டாலின்
சேகர்பாபு - ஸ்டாலின்

ஆனால் இந்த விவகாரம் தொடர்ந்து பூதாகரமாகி வந்த நிலையில்தான் பட்டணப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அரசு நீக்கியிருக்கிறது. இந்த விவகாரத்தின் பின்னணியில் நடந்து என்ன? என்று அரசு தரப்பில் விசாரித்தோம். “இந்த விவகாரத்தில் அரசு தரப்பு தடையாணை பிறப்பிக்க காரணமே திராவிடர் கழகத்தின் சார்பில், `இந்த நிகழ்வை நடத்தக்கூடாது' என்று மனு அளிக்கப்பட்டதால்தான். அவர்கள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்ததால்தான் அரசு தரப்பும் ஆரம்பத்தில் இதற்கு தடைவிதித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன்பிறகு இந்த விவகாரத்தை பாஜக உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்கியதும் அரசும் கொஞ்சம் உஷாராகவே இந்த விவகாரத்தைக் கையாளத் தொடங்கியது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திவந்தார். மற்றொருபுறம் தருமபுர ஆதினத்திடமும் முதலில் அதிகாரிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார்கள். அதன்பிறகு முதல்வருக்கு நெருக்கமான குன்றக்குடி ஆதினம் மூலம் பேசலாம் என்று அதிகாரிகள் சொல்ல, சேகர்பாபு குன்றக்குடி ஆதினத்தினைத் தொடர்பு கொண்டார். இந்த விவகாரம் குறித்துப் பேசியதோடு உடனடியாக சென்னை வரவும் வேண்டுகோள் வைக்க கடந்த 7-ம் தேதி அன்று குன்றக்குடி அடிகளார் சென்னை வந்தடைந்தார். குன்றக்குடி ஆதினத்துடன், தருமபுர ஆதினத்தின் சார்பில் தம்புரான் சுவாமிகளும், மயிலம் ஆதினம் உள்ளிட்டவர்களும் அமைச்சர் சேகர்பாபுவைச் சந்தித்து மூன்று மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

ஆதினம்- பல்லக்கில் பட்டணப்பிரவேசம்
ஆதினம்- பல்லக்கில் பட்டணப்பிரவேசம்

அந்த ஆலோசனையில் “இது பல ஆண்டுகளாக நடந்துவரும் மரபு. இதை நமது அரசு இப்போது நிறுத்தினால், சைவ மடங்களுக்கு எதிராக தி.மு.க அரசு செயல்படுவது போன்ற ஒரு எண்ணம் மக்களிடம் ஏற்படும். அந்த நிகழ்விற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு என்பதால் அதை நிறுத்த வேண்டாம்” என்று ஆதினங்களின் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபுவும் ஆதினங்கள் சொன்ன கருத்துக்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன்பிறகே இந்த பட்டணப்பிரவேசம் நிகழ்விற்கான தடையை நீக்கலாம் என்று அமைச்சர் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். முதல்வரிடமும் இந்த விவகாரத்தைக் கொண்டு செல்ல முடிவாகியது. ஆதினங்களை அழைத்துக்கொண்டு அமைச்சர் சேகர்பாபு முதல்வர் வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கு முதல்வரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரனும் இருந்திருக்கிறார். ஒரு வருட தி.மு.க ஆட்சிக்கு முதல்வரிடம் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் விளக்கியிருக்கிறார் குன்றக்குடி அடிகளார். முதல்வரின் செயலாளர் உதயச்சந்திரன் “ இந்த விவகாரத்தில் அரசு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்க, குன்றக்குடி அடிகளார் “மரபுப்படி நடக்கும் இந்த நிகழ்வை இப்போது நிறுத்த வேண்டாம். எதிர்காலத்தில் இதை எப்படி நடத்தவது என்று மாற்று ஏற்பாடுகளைக் கண்டறியலாம்” என்று சொன்னதும், “சரி, அப்படியே செய்யலாம்” என்று உதயச்சந்திரன் சொல்லியிருக்கிறார். அவரும் முதல்வரும் ஆதினங்கள் சென்ற பிறகு தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

தம்புரான் சுவாமிகள்-குன்றக்குடி அடிகளார்
தம்புரான் சுவாமிகள்-குன்றக்குடி அடிகளார்

அதன்பிறகே சம்பந்தப்பட்ட மயிலாடுதுறை கோட்டாச்சியருக்குத் தடையை நீக்கம் செய்யும் உத்தரவு மேலிடத்திலிருந்து சென்றது” என்கிறார்கள். தமிழகத்தில் பட்டணப்பிரவேசம் என்னும் இந்நிகழ்வு குன்றக்குடி ஆதினம், திருவாடுதுறை ஆதினம், தருமபுர ஆதினம் ஆகிய மூன்றில் மட்டும் நடந்துவந்தது. அதில் குன்றக்குடி ஆதினம் மற்றும் திருவாடுதுறை ஆதினங்களில் இந்த நிகழ்வை நிறுத்திவிட்டார்கள். தற்போது தருமபுர ஆதினத்தில் மட்டுமே ஆண்டிற்கு ஒருமுறை இந்நிகழ்வு நடக்கிறது. இப்போது இந்த ஆதினத்தில் வழக்கத்திற்கு சிக்கல் எழ ஆரம்பித்திருப்பதால் எதிர்காலத்தில் இந்த ஆதினத்திலும் இந்த பட்டணப்பிரவேச முறையில் மாற்றம் வரும் என்கிறார்கள் ஆன்மிக அன்பர்கள். அரசுக்கு ஆதினங்கள் கொடுத்த ஆலோசனையே இந்த விவகாரம் சுமுகமாக முடிய காரணம் என்கிறார்கள் ஆதினத்திற்கு நெருக்கமானவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism