Published:Updated:

சசிகலா விவகாரம்: ஓ.பி.எஸ் அணுகும் விதமும், எடப்பாடியின் திட்டமும்!

சசிகலா - பன்னீர்செல்வம்
சசிகலா - பன்னீர்செல்வம்

சசிகலா விவகாரத்தில் ஓ.பி.எஸ் -ஸின் மௌனத்துக்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன, எடப்பாடியின் 'மாவட்டந்தோறும் நிர்வாகிகளின் தீர்மானம்' சசிகலாவுக்கு எதிரானது மட்டும்தானா? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

சசிகலா தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசுவதுபோல இதுவரைக்கும் அறுபதுக்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. மறுபுறம், சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க மாவட்ட கழகங்கள் சார்பில் மிகத் தீவிரமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சேலத்தில் நடந்த கூட்டத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி முன்னிலையிலேயே சசிகலாவை மிகக் கடுமையாகத் தாக்கும் வார்த்தைகளை உள்ளடக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேவேளை, ஓ.பி.எஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் இதுவரை தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமல்ல, சசிகலா ஆடியோ வெளியிடுவது குறித்து எந்தவித கருத்துகளும் தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார் ஓ.பி.எஸ். அவரின் மௌனத்துக்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன, எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் நிர்வாகிகளை தீர்மானம் போடச்சொல்வது சசிகலாவுக்கு மட்டுமான அஸ்திரம்தானா என்பதை விரிவாகப் பார்ப்போம்.

எடப்பாடி  - சசிகலா
எடப்பாடி - சசிகலா

தேர்தல் நேரத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ளப்போவதாக அறிவித்த சசிகலா, கடந்த சில நாள்களாக அ.தி.மு.க நிர்வாகிகளுடன் உரையாடுவது போன்ற ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதற்கு பதிலடி தரும் விதமாக, கடந்த 14-ம் தேதி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கட்சியிலிருந்து 15 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வருகின்றனர்.

முன்னாள் முதல்வரும் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில்தான், இந்த தீர்மானப் படலம் நடந்துவருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இப்படி மாவட்டந்தோறும் தீர்மானம் நிறைவேற்றப்போவது குறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர் செல்வத்துக்கே ஆரம்பத்தில் தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் இதில் ஹைலைட். தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தீர்மானங்கள் தலைமைக் கழகத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டன. ஆனால், ஓ.பி.எஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனி உள்ளிட்ட சில தென் மாவட்டங்களில் இன்னும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

இதற்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர்.... ''முதல்வர் வேட்பாளர், தன் ஆதரவாளர்களுக்கு எம்.எல்.ஏ சீட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி என தொடர்ந்து எடப்பாடி & கோவால், பன்னீர்செல்வம் ஏமாற்றப்படுகிறார். நிலைமை இப்படியே போனால், எங்கே தன்னை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு கட்சியைக் கைப்பற்றிவிடுவார்களோ என்கிற அச்சம் ஓ.பி.எஸ்ஸிடம் இருக்கிறது. அதனால்தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியைச் சரியென ஏற்றுக்கொண்டார். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அவரிடம் எதைப்பற்றியும் கலந்தாலோசிக்காமல், சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றச் சொல்லி எடப்பாடி உத்தரவிட்டிருக்கிறார். அதில், ஓ.பி.எஸ்ஸுக்கு இ.பி.எஸ் மீது கடுமையான கோபம். சசிகலா சிறையில் இருந்து வந்த நாள் முதலாகவே அவருக்கு எதிராக எந்தவித வார்த்தைகளையும் உதிர்க்காமல் தவிர்த்து வருகிறார் ஓ.பி.எஸ். தற்போது, கட்சியில் தனக்கு எந்தவித செல்வாக்கும் இல்லாத நிலையில், சசிகலாவை வைத்து மீண்டும் கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் எனவும் நினைக்கிறார். சசிகலாவின் துணை இல்லாமல் தன்னால் தனியாக எடப்பாடி & கோவை சமாளிக்க முடியாது என்பதை ஓ.பி.எஸ் எப்போதோ புரிந்து கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேரடியாக சசிகலாவுடன் இப்போதே கைகோர்த்துவிட்டால் தொண்டர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற தயக்கம் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கிறது. அதனால் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்து வருகிறார். தன்னுடைய மாவட்டம் மட்டுமல்லாது தென்மாவட்டம் மற்றும் சென்னையில் ஒரு சில மாவட்டச் செயலாளர்களிடம் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என வலியுறுத்தியிருக்கிறார். நேரம் வரும்போது நிச்சயமாக அவர் களத்தில் இறங்குவார். அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவுக்கு எதிராக மட்டும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றச் சொல்லவில்லை. ஏற்கெனவே தேர்தல் நேரத்தில், அமித்ஷா எவ்வளவோ சொல்லியும், அ.ம.மு.கவைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள மாட்டேன் எனப் பிடிவாதமாக இருந்தார் எடப்பாடி. டெல்லி தலைமை கணித்தது போல 60 - 70 இடங்களைத்தான் அ.தி.மு.க கூட்டணியால் வெல்ல முடிந்தது. அதனால், தற்போது பா.ஜ.கவின் பார்வை சசிகலாவின் பக்கம் திரும்பியிருக்கிறது.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

இந்த நேரத்தில், சசிகலாவுக்கு எதிராக, கட்சியில் மாவட்ட, ஒன்றிய அளவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போது, தனக்கு மட்டுமல்ல, சசிகலா மீண்டும் கட்சிக்குள் வருவதை அ.தி.மு.க நிர்வாகிகள் யாருமே விரும்பவில்லை என்கிற பிம்பத்தை உருவாக்கி வருகிறார். மேலும், கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் என் சொல்லுக்குத்தான் கட்டுப்படுகிறார்கள். வெளியில் இரட்டைத் தலைமை இருந்தாலும் கட்சியில் அதிகாரமிக்க, செல்வாக்குமிக்க நபர் நான்தான் என்பதை டெல்லி பா.ஜ.க தலைமைக்கு உணர்த்துகிறார்.

தற்போது சசிகலாவுக்கு எதிராக மாவட்ட வாரியாக தீர்மானம் போடவைக்கும் எடப்பாடி பழனிசாமியால், நாளை கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் எனவும் தீர்மானம் போடவைக்க முடியும். அதுமட்டுமல்ல, அதற்காக மறைமுகமாக சில வேலைகளையும் அவர் தொடங்கிவிட்டார். இந்த விஷயத்தில் மட்டுமல்ல, எந்த விஷயத்திலும் ஓ.பி.எஸ் துணிச்சலாக ஒரு முடிவை எடுக்கவே மாட்டார், யோசித்துக்கொண்டே இருப்பார். அடுத்தவர்களை வைத்தே ஆழம் பார்ப்பார். அவரை எளிதாக சமாதானம் செய்துவிடவும் முடியும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படியல்ல. ஒரு முடிவெடுத்துவிட்டால் தடாலடியாக செயலில் இறங்கிவிடுவார். அதேபோல, தான் எடுத்த முடிவில் மிகவும் உறுதியாக இருப்பார். யாரும் அவரை எளிதாக மனமாற்றம் செய்துவிட முடியாது'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு