Published:Updated:

`உள்ளாட்சிக்கு உரம் போடும் பா.ம.க!’ - அ.தி.மு.க-வுடனான மோதல் பின்னணி!

அதிமுக - பாமக
அதிமுக - பாமக

அன்று 2011-ல் ‘எங்களால்தான் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது’ என்று தே.மு.தி.க சொன்னதுபோலவே, இன்று 2021-ல் ‘எங்களால்தான் 66 தொகுதிகளை அ.தி.மு.க ஜெயித்தது’ என பா.ம.க சொல்லிவருகிறது.

ஒருவழியாக பா.ம.க தனது ஆஸ்தான பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டது. அதாவது, எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஜெயித்தாலும், கூட்டணிக்குள் குடைச்சல் கொடுப்பதுதான் அந்தக் கட்சியின் வழக்கம். அந்த வகையில் தற்போதைய குடைச்சலை அன்புமணி ஆரம்பித்து வைத்திருக்கிறார். அவருக்கு பதிலளித்து அந்தப் பக்கம் பிரச்னையைத் தொடங்கியிருக்கிறார் அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி.

புகழேந்தி
புகழேந்தி

தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஒரு அரசியல் பிரபலம் இந்தச் சம்பவங்களின் பின்னணியை நம்மிடம் விவரித்தார்.

``உள்ளே இருந்துகொண்டே குடைச்சல் கொடுப்பது பா.ம.க-வுக்கு கைவந்த கலை. 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க மைனாரிட்டி ஆட்சியில் கூட்டணியில் அங்கம் வகித்துக்கொண்டே கருணாநிதிக்கு அவ்வப்போது ஏதாவதொரு குடைச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்தார் ராமதாஸ். அந்தப் பழக்கத்தை இப்போது அவரது மகனும், கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி கையிலெடுத்திருக்கிறார். 2011-ம் ஆண்டு தே.மு.தி.க-வுடன் கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. 41 தொகுதிகளைக் கொடுத்ததில், 29-ல் வென்று எதிர்க்கட்சியாகவே அமர்ந்தது தே.மு.தி.க. கொஞ்ச காலத்தில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் மோதல் உருவானது. சட்டசபையிலேயே பிரச்னை வெடித்தது. அப்போது ‘தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க ஆட்சிக்கே வந்தது’ என்றார் விஜயகாந்த். அதேபோல்தான் இப்போது 2021-ல் அன்புமணி ‘பா.ம.க-வுடன் கூட்டணி வைத்ததால்தான் 66 தொகுதிகளை அ.தி.மு.க ஜெயித்தது’ எனப் பேசியிருக்கிறார்.

சரி, `எதற்காக இப்படி ஸ்டன்ட் அடிக்கிறது பா.ம.க...’ என்று பார்க்கப்போனால் கூட்டணியைவிட்டு வெளியேறுவதுதான் பிளான் எனத் தெரிகிறது. தேர்தல் முடிந்தவுடன் அதிகாரபூர்வ கூட்டணி முடிந்துவிட்டாலும், இரு பக்கங்களிலும் கூட்டணி போன்றுதான் இருந்துவருகிறார்கள். எனினும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தோ அல்லது தி.மு.க-வுடனோ கூட்டணிக்குச் செல்ல ஆழம் பார்த்துவருகிறது பா.ம.க. ஏனெனில், ஸ்டாலின் அரசுப் பொறுப்பேற்றபோது பா.ம.க சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டார். கூட்டணி அமைத்த அ.தி.மு.க தலைவர்களைச் சந்திக்காத பா.ம.க எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இன்னும் சில நிகழ்வுகளையும் உதாரணத்துக்குச் சொல்லலாம். இது மட்டுமன்றி, போராடிப் பெற்ற வன்னியர் சமூகத்துக்கான 10.5 இட ஒதுக்கீட்டை நீதிமன்ற வழக்கைக்காட்டி அமல்படுத்த முடியாது எனப் பேசினார் அமைச்சர் சிவசங்கரன். இதற்குக் கொந்தளித்திருக்க வேண்டிய ராமதாஸ், ‘இது அமைச்சரின் எண்ணமா... தி.மு.க அரசின் நிலைப்பாடா?’ என்பதோடு நிறுத்திக்கொண்டார். தன்னால்தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என ராமதாஸ் மார்த்தட்டிக்கொண்டிருப்பதால், அதற்கு பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என மென்மையான போக்கைக் கடைப்பிடித்துவருகிறார்.

அன்புமணி - ராமதாஸ்
அன்புமணி - ராமதாஸ்

`ஓ.பி.எஸ் பற்றி நாங்கள் கண்டுகொள்வதேயில்லை’ என்று அன்புமணி, பன்னீரை கார்னர் செய்வதற்கும் காரணமுண்டு. வன்னியர் சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததால்தான் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க படுதோல்வியடைந்தது, இதனால்தான் ஆட்சியே பறிபோனது என பன்னீர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசினார். இதுதான் பா.ம.க-வுக்கு பன்னீரின் மீதான கோபத்துக்குக் காரணம்.` வன்னியர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய அ.தி.மு.க-வுடனேயே மோதலாமா?’ என்று கேட்டால், இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி அமல்படுத்தியதற்குத் தனது தொகுதியில் தான் வென்றாக வேண்டும் என்ற சுயநலமும் காரணம் என்பது பா.ம.க-வுக்குத் தெரியும். உள்ளாட்சித் தேர்தல் எப்படியும் 2022 ஜனவரியில் நடத்தப்படவிருக்கிறது. அப்போதும் சில நகராட்சிகளைக் கைப்பற்ற அ.தி.மு.க-வுக்கு பா.ம.க-வின் ஒத்தாசை தேவை. அப்போது இன்னும் டிமாண்டை அதிகப்படுத்துவதற்கே அன்புமணி இப்படிக் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது” என்பதோடு முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு