Published:Updated:

``மூலப்பத்திரம் எங்கே?" - `முரசொலி' போர் மூண்டதன் மூலக்காரணம் என்ன?

முரசொலி
முரசொலி

முரசொலி விவகாரத்தை வைத்துச் சுழன்று கொண்டிருக்கும் சூறாவளியின் ஆணிவேர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதைந்து கிடக்கிறது

'அசுரன்' படத்தைப் பார்க்கப் போன ஸ்டாலினுக்கு ஆரம்பித்தது பிரச்னை. படத்தைப் பார்த்துவிட்டு, பஞ்சமி நிலம் பற்றிக் கருத்து சொல்ல... பஞ்சமி நில விவகாரம் முரசொலி ஆபீஸ் படியேறியது. "முரசொலி நிலமே பஞ்சமி நிலம்தான்'' என அதிரடி கிளப்பினார் ராமதாஸ். "முரசொலி அலுவலகத்துக்குப் பட்டா இருக்கு" எனச் சொல்லி, அதற்கான ஆவணங்களை அள்ளிப் போட்டார் ஸ்டாலின். "மூலப்பத்திரம் எங்கே? அதை முதலில் காட்டுங்கள்" எனப் பதிலடி கொடுத்தார் ராமதாஸ்.

முரசொலி விவகாரத்தை வைத்துச் சுழன்று கொண்டிருக்கும் சூறாவளியின் ஆணிவேர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதைந்து கிடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு நிகராக அந்தக் கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க-வைக் குறி வைத்துத் தாக்கிப் பேச ஆரம்பித்தார் ஸ்டாலின். "மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி என்ற முழக்கம், மாற்றம்... ஏமாற்றம்... சூட்கேஸ்மணியாகிவிட்டது'' எனக் காட்டமாக விமர்சித்தார்.

கடைசி நிமிடம் வரையில் எடப்பாடி ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த அன்புமணி, தினம் தினம் ஆட்சியின் அவலம் பற்றிக் கண்டிப்புடன் அறிக்கை கொடுத்துக்கொண்டிருந்த ராமதாஸ், நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தார்கள். கருணாநிதியால் தீவிரப் பிரசாரம் செய்ய முடியாத சூழலில், ஸ்டாலின் மேற்பார்வையில்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தலும் 2016 சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. இந்த இரண்டு தேர்தல்களிலும் அடுத்தடுத்து தி.மு.க-வுக்குப் படுதோல்வி. அடுத்து வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டால் அது தனக்கு ஹாட்ரிக் தோல்வியாக அமைந்துவிடும் என அஞ்சினார் ஸ்டாலின். அதற்காக வலுவான கூட்டணியை அமைத்தார். இப்படியான நிலையில் பா.ம.க அ.தி.மு.க அணியில் சேர்ந்ததை ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை. அது தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்தது.

``மூலப்பத்திரம் எங்கே?"  -  `முரசொலி' போர் மூண்டதன் மூலக்காரணம் என்ன?

தொடர்ச்சியாக பா.ம.க-வைப் பிரசாரத்தில் சீண்டிய ஸ்டாலின், அரக்கோணம் தொகுதித் தேர்தல் பிரசாரத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை விவகாரத்தைக் கையில் எடுத்தார். "வன்னியர் கல்வி அறக்கட்டளைச் சொத்துகளை எல்லாம் ராமதாஸ் அவரின் மனைவி பெயருக்கு மாற்றி வைத்திருக்கிறார். தமிழக அரசு சொத்துகளைக் கைப்பற்றிவிட முடியும் என்பதால், அ.தி.மு.க அணியில் பா.ம.க இணைந்துள்ளது'' எனத் திரி கொளுத்திப் போட்டார் ஸ்டாலின். இந்தப் பேச்சுதான் முரசொலி மூலப்பத்திர விவகாரத்துக்கு மூல காரணம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/386Khaf

வன்னியர் கல்வி அறக்கட்டளை விவகாரத்துக்கு அப்போதே ஸ்டாலினுக்குப் பதில் சொன்ன ராமதாஸ், "வன்னியர் அறக்கட்டளை பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வியை ஏற்படுத்தித் தர உருவாக்கப்பட்ட அமைப்பு. அது தி.மு.க அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை போன்று பினாமி சொத்துகளைப் பதுக்கி வைக்க உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. அந்த அறக்கட்டளையில் நிறுவனராக மட்டுமே உள்ளேன். எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை. என் மனைவிக்கு வன்னியர் அறக்கட்டளையுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஸ்டாலின் விரும்பினால் வன்னியர் அறக்கட்டளையின் ஆவணங்களை ஆய்வு செய்யட்டும். அறக்கட்டளைச் சொத்துகளை என் மனைவி பெயருக்கு மாற்றி எழுதியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லையென்றால், அரசியலிலிருந்து ஸ்டாலின் விலகத் தயாரா?'' எனக் கேட்டார் ராமதாஸ்.

``மூலப்பத்திரம் எங்கே?"  -  `முரசொலி' போர் மூண்டதன் மூலக்காரணம் என்ன?

இந்த வன்னியர் அறக்கட்டளை வார்த்தைப் போர் நடந்து, சரியாக ஒரு வருடம் நிறைவடைந்திருக்கிறது. கடந்த மாதம் வன்னியர் கல்வி அறக்கட்டளையில் சில மாற்றங்கள் நடைபெற்றன. பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுடன் செயல்பட்டுவந்த வன்னியர் கல்வி அறக்கட்டளை, 'மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. "வன்னியர் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியதில் பங்காற்றியதற்காக ராமதாஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது'' என விளக்கம் சொல்கிறது பா.ம.க. ஆனால், "அதற்காக வன்னியர் என்கிற அடையாளப் பெயரை நீக்கிவிட்டது சரியா?'' என முணுமுணுக்கிறார்கள் வன்னியர் சமூகத்தின் ஒரு சாராரே.

`` 'மனைவி பெயருக்கு அறக்கட்டளைச் சொத்தை ராமதாஸ் மாற்றிக்கொண்டார்' என அன்றைக்கு ஸ்டாலின் சொன்னார். இன்று அந்த அறக்கட்டளையின் பெயரே ராமதாஸ் எனத் தாங்கி நிற்கிறது. அதைச் சரிசெய்துவிட்டு முரசொலி பற்றி ராமதாஸ் பேசட்டும்'' என்கிறார்கள் தி.மு.க-வினர்.

- 'கழகத்தின் கதை'... ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் நடந்த பதவிச்சண்டைகளை மையமாக வைத்து டாக்டர் ராமதாஸ் எழுதிய புத்தகத்தின் பெயர் இது. இப்போது தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் இடையே நடக்கும் முரசொலி மோதல்கூட 'கலகத்தின் கதை'தான்!

தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் இடையே நடக்கும் பகை அரசியலுக்குப் பின்னால் பத்தாண்டுக்கால வரலாறு உண்டு. அதுகுறித்த விவரத்துடன் முழுமையான கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > முடியாத 'முரசொலி' போர்! பா.ம.க - தி.மு.க பகை ஏன்? https://www.vikatan.com/government-and-politics/controversy/why-is-murasoli-controversy-still-in-the-limelight

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு