Published:Updated:

டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களால் எந்தப் பயனும் ஏற்படவில்லை - சரத் பவாரை சீண்டும் சிவசேனா

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூட்டிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தால் எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை என்று சிவசேனா பத்திரிகை விமர்சனம் செய்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லியில் இரண்டு நாள்களுக்கு முன்பு ராஷ்டிர மஞ்ச் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து பேசினார். காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்தக் கூட்டத்துக்கு சரத் பவார் ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் சிவசேனா கலந்துகொள்ளவில்லை. ஆனால், மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருக்கிறது. சரத் பவார் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் முன்பும், சந்தித்த பிறகும் தேர்தல் ஆலோகர் பிரசாந்த் கிஷோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சரத் பவார்
சரத் பவார்

2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில், புதிய கூட்டணி அமைப்பது குறித்து சரத் பவார் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டம் குறித்து, சிவசேனா தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: டெல்லியில் சரத் பவார் இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். மீடியாக்கள் இந்தக் கூட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன. ஆனால், இந்தக் கூட்டத்தால் எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை. சிலர் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி எதிர்ப்புக்காகவே இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

ஜாவேத் அக்தர், ஓமர் அப்துல்லா, ராஷ்டிரிய லோக் தளத்தின் ஜெயந்த் சௌதாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஷ்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலோத்பால் பாசு, ஆம் ஆத்மி கட்சியின் சுனில் குப்தா போன்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்தான் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கூட்டணியா என்று கேட்டுள்ள சிவசேனா, 'தற்போதுள்ள அரசால், நாட்டில் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இது பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு மிகவும் அவசியம். கடந்த ஏழு ஆண்டுகளாக தேசிய அளவில் எதிர்க்கட்சி இல்லாமல் இருக்கிறது. எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் சரத் பவாரின் முயற்சியில் ராகுல் காந்தி சேர வேண்டும். அதன் மூலமே எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு உண்மையிலேயே வலு கிடைக்கும். காங்கிரஸ் கட்சி இந்த முயற்சிக்குத் தலைமை தாங்க வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சி, தலைவர் இல்லாமல் திணறிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதை முன்னெடுக்க வேண்டும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசிய பிறகு, மோடி மீதான தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டிருக்கிறார். டெல்லியில் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துப் பேசினார். இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டிய சரத் பவார் தன்னை தேசியத் தலைவராக உயர்த்திக்கொள்ள இதற்கு முன்பு முயன்றிருக்கிறார். ஆனால் அதில் வெற்றி பெறவில்லை என்று மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், விரைவில் மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு