Published:Updated:

``விளையாட்டு மைதானத்தை அபகரிக்க நினைத்தால் கையை வெட்டுவேன்"- `ஃபேஸ்புக் லைவ்'-ல் மிரட்டிய எம்.எல்.ஏ!

``விளையாட்டு மைதானத்தை அபகரிக்க நினைத்தால் அவர்களின் கையை வெட்டுவேன்" என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ மிரட்டியிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் உள்ள கமர்ஹதி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மதன் மித்ரா. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் எப்போதும் பேஸ்புக் மூலமாகத் தனது கருத்துக்களைச் சொல்வது வழக்கம். இவரது தொகுதிக்கு உட்பட்ட பெல்காரியா என்ற இடத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் அபகரிக்க முயன்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக மதன் மித்ரா ஃபேஸ்புக் லைவ்-ல் மிரட்டியிருக்கிறார். அதில், ``எனது கட்சியைச் சேர்ந்த சில கிரிமினல்கள் விளையாட்டு மைதானத்தில் குடியிருப்பு காம்ப்ளக்ஸ் கட்ட முயன்றுவருகின்றனர். நானும் உள்ளூர் எம்.பி.சவுகதா ராயும் சம்பவ இடத்தை சென்று பார்வையிட்டோம்.

மதன் மித்ரா
மதன் மித்ரா
`மோடியைவிட்டு விலகியே இரு’ - பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு பாகிஸ்தானிலிருந்து கொலை மிரட்டல்!

மூன்று பேர் இந்த மைதானத்தை அபகரிக்கத் திட்டமிடுவதாக எனது கவனத்திற்கு வந்திருக்கிறது. அவர்களைக் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நான் போலீஸில் புகார் செய்வேன். போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நான் மக்களைக் கூட்டி போராட்டம் நடத்தி மைதானத்தைப் பாதுகாப்பேன். என்னை மிரட்டலாம் என்றோ அல்லது என்னை விலைக்கு வாங்கிவிடலாம் என்றோ நினைத்தால் அது நடக்காது. இது அவர்களுக்கு கடைசி எச்சரிக்கையாகும். விளையாட்டு மைதானத்தில் விரல்களை வைத்தால்கூட அவர்களின் மணிக்கட்டை கையில் இருந்து வெட்டிவிடுவேன். தேவைப்பட்டால் முதல்வரிடம் சென்று எப்படி சிலர் கட்சியை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்று சொல்வேன்" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார். அவரது இந்த பேஸ்புக் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து பேஸ்புக் பேட்டிக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மீண்டும் பேஸ்புக்கில் ஒரு பேட்டியைக் கொடுத்திருக்கிறார். அதில், ``தான் சொன்ன வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், நாங்கள் ஆளும் கட்சி என்பதை புரிந்து கொண்டுள்ளதாகவும், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று புரிந்து கொண்டேன்" என்றும் தெரிவித்திருக்கிறார். முன்னாள் அமைச்சரான மதன் மித்ராவின் கருத்துக்கு அவரது கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ. பார்த்தா ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆனால், ``அடுத்தவர்களின் கையை வெட்டுவேன்" என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு