Published:Updated:

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு... சைலன்ட் மோடில் தேனி அ.தி.மு.க நிர்வாகிகள்!

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு
அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க-வினர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

`அ.தி.மு.க-வின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்?’ என்ற சர்ச்சை கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் விவாதிக்கப்பட்டுவந்தது. அ.தி.மு.க-வுக்குள் ஏற்பட்ட முதல்வர் வேட்பாளர் சர்ச்சை, தொண்டர்களிடம் எதிரொலிக்க ஆரம்பித்தது.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

கடந்த ஆகஸ்ட் மாதம், `தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஐயா ஓ.பி.எஸ்...’ என்ற வாசகத்தோடு, தேனி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து கட்சியின் செயற்குழுவிலும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகின.

தேனி: மூன்று நாள்கள், முக்கியச் சந்திப்புகள்! - ஓ.பி.எஸ் இன்று சென்னை பயணம்

இதற்கிடையில், கடந்த 2-ம் தேதி, தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் வந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பண்ணை வீட்டில் முகாமிட்டார். `தேனியில் அமர்ந்துகொண்டு தென்மாவட்ட கட்சி நிர்வாகிகளைத் தன் பக்கம் இழுக்கத் திட்டமிடுகிறார் ஓ.பி.எஸ்’ எனப் பேசப்பட்டது.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்

அதற்கு ஏற்றாற்போல, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ-க்கள், எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், நீதிபதி, பெரியபுள்ளான் ஆகியோர் பண்ணை வீட்டுக்கு வந்து ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றனர். கொங்கு மண்டலம் உட்பட பல இடங்களிலிருந்து கட்சி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ச்சியாகச் சந்தித்தனர்.

தேனி: குமாரை `கட்’ செய்த தேனி எம்.பி! - மத்திய அமைச்சர் பதவிக்குப் பெயர் மாற்றமா?

மூன்று நாள்கள் பெரியகுளத்தில் தங்கியிருந்த ஓ.பி.எஸ்., கடந்த 5-ம் தேதி சென்னை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, தேனி நாகலாபுரத்தில் நடந்த அரசு விழாவில் கலந்துகொள்ளச் சென்றபோது வழியில், `நிரந்தர முதல்வரே…’ என எழுதப்பட்ட 100 அடி பேனர் வைக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக ஓ.பி.எஸ் அறிவித்தார். இதன் மூலம் கடந்த சில மாதங்களாகவே நீடித்துவந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க கூட்டம் | ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
அ.தி.மு.க கூட்டம் | ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதுமுள்ள அவருடைய ஆதரவு நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆனால், தேனி மாவட்டத்தில் மட்டும் எந்தவித ஆரவாரம் இன்றி அ.தி.மு.க நிர்வாகிகள் அமைதியாகிவிட்டனர். ஆரம்பம் முதலே `ஓ.பி.எஸ்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும்’ என்று தங்களது விருப்பத்தை போஸ்டர்கள், பேனர்கள் என வெளிப்படுத்திவந்த நிலையில், தற்போதைய அறிவிப்பு அவர்களை அதிருப்தியடையச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன், ஓ.பி.எஸ் விரைவில் ஆலோசனையில் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு