Published:Updated:

தேனி: போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக-வினர்! - நடந்தது என்ன?

போராட்டம்
News
போராட்டம்

பிரதான சாலையில் வந்த பேருந்துகளை மறித்து பா.ஜ.க-வினர் மறியலில் ஈடுபட்டதால் கம்பம், பெரியகுளம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்துக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்காததாக பஞ்சாப் முதல்வர் மீது குற்றம்சாட்டி, அவரைக் கண்டித்து, தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க-வினர் நேற்றைய தினம் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் மற்றும் பஞ்சாப் முதல்வருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்கின் புகைப்படத்தை பா.ஜ.க-வினர் தீயிட்டு எரித்தனர்.‌ அதைத் தண்ணீர் ஊற்றி அணைத்த தேனி டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், ``போதும் போங்க, சும்மா சீன் போடாதீங்க..." எனக் கூறி விரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க-வினர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கம்பம் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.

சாலைமறியல்
சாலைமறியல்

பிரதான சாலையில் வந்த பேருந்துகளை மறித்து பா.ஜ.க-வினர் மறியலில் ஈடுபட்டதால் கம்பம், பெரியகுளம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க-வினரிடம் தேனி டி.எஸ்.பி பால் சுந்தர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து பா.ஜ.க மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அஜித் இளங்கோவிடம் விசாரித்தோம். ``காலை 11 மணிக்கு மாநிலத் தலைமையிடஇருந்து ஆர்ப்பாட்டம் நடத்தக் கோரி எங்களுக்கு உத்தரவு வந்தது. அதைத் தொடர்ந்து தேனி டவுன் இன்ஸ்பெக்டரிடம் அனுமதி கோரினோம். அவர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. நாடு முழுவதும் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தும்போது எங்களுக்கும் அனுமதி தர வேண்டும் எனக் கேட்டோம்; அனுமதி மறுத்தார். இதையடுத்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் பி.சி.பாண்டியன் தலைமையில் பழைய பஸ் ஸ்டாண்ட் நேரு சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

பஞ்சாப் முதல்வர் உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தினோம். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கலைந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது இன்ஸ்பெக்டர் எங்களைப் பார்த்து, `சும்மா சீன் போடாதீங்க போங்க!' என விரட்டினார். இது குறித்து எங்கள் மாவட்டத் தலைவர் கேட்டபோது, `ஆமா அப்படித்தான் சொன்னேன்' எனத் திமிராகப் பேசினார். இதனால் நாங்கள் கம்பம் ரோட்டை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தேனி டவுன் இன்ஸ்பெக்டர் கடந்த மூன்று மாதங்களாக பா.ஜ.க மற்றும் பரிவார் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களின் போது இவ்வாறு தொடர்ச்சியாகப் பிரச்னை செய்துவருகிறார். எனவே அவரைக் கண்டித்து ஜனவரி 11-ம் தேதி தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்" என்றார்.

இது குறித்து தேனி டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரிடம் கேட்டோம். ``பா.ஜ.க-வினருக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தோம். ஆனால் உருவப்படத்தை எரிக்க அனுமதியில்லை எனக் கூறியிருந்தோம். ஆனால், அனுமதியின்றி பஞ்சாப் மாநில முதல்வர் படத்தை எரித்தனர். ஆர்ப்பாட்டம் முடியும் தறுவாயில் அதையும் தடுக்க வேண்டாம் என விட்டுவிட்டோம். ஆனால் ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஒருவர் மதுபோதையில் எரிந்துகொண்டிருக்கும் தீயில் காலைக் கொண்டு மிதித்துக்கொண்டிருந்தார். அவரைத்தான், `சீன் போடாதீங்க போங்க!' என்றேன். இதற்கு அவர் அநாவசியமாகக் கூச்சலிட்டு பிரச்னை செய்து மறியலில் ஈடுபட்டார். என்னுடைய பணியை சரியாகச் செய்தேன். தவறாகவோ, யாரையும் புண்படுத்தும் நோக்கிலோ பேசவில்லை" என்றார்.