Published:Updated:

தேனி: கெடு முடிந்தும் பிடி கொடுக்காத சேர்மன்... தங்க தமிழ்ச்செல்வனுக்குச் சிக்கல்?!

சூர்யா பாலமுருகன்-ரேணுப்ரியா

``எவ்வித ரிஸ்க்கும் எடுக்காமல் கொடுக்கப்பட்ட 4 சீட்களில் 2-ல் வெற்றிபெற்றவர்களுக்கு சேர்மன் பதவி அளிப்பது நியாயமில்லை." - சூர்யா பாலமுருகன்-ரேணுப்ரியா தரப்பினர்.

தேனி: கெடு முடிந்தும் பிடி கொடுக்காத சேர்மன்... தங்க தமிழ்ச்செல்வனுக்குச் சிக்கல்?!

``எவ்வித ரிஸ்க்கும் எடுக்காமல் கொடுக்கப்பட்ட 4 சீட்களில் 2-ல் வெற்றிபெற்றவர்களுக்கு சேர்மன் பதவி அளிப்பது நியாயமில்லை." - சூர்யா பாலமுருகன்-ரேணுப்ரியா தரப்பினர்.

Published:Updated:
சூர்யா பாலமுருகன்-ரேணுப்ரியா

தேனி மாவட்டத்தில் தேனி - அல்லிநகரம் நகராட்சி உட்பட ஆறு நகராட்சி சேர்மன் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. இவற்றில் தேனி, அல்லிநகரம் நகராட்சி சேர்மன் பதவிக்கான போட்டி அதிகமாக இருந்தது. முன்னதாக தேனி நகராட்சி ஆண்களுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்த்து திமுக நகரப் பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் சேர்மன் பதவிக்கு போட்டியிடும் நோக்கில் வேலை செய்துவந்தார்.

சூர்யா பாலமுருகன் தேர்தலுக்கு முன்பாக ஆசிரியர் பணியிட மாறுதல் பெற்றுத்தர ஒருவரிடம் பணம் கேட்டது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானது. அதேவேளையில் வடபுதுபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த தனது மனைவி ரேணுப்ரியாவை ராஜினாமா செய்யவைத்து, நகராட்சியில் போட்டியிடுவதற்காக தேனி நகருக்குள் அவரின் வாக்கை மாற்றினார். இதிலும் முறைகேடு செய்திருப்பதாக புகார்கள் எழுந்தன. மேலும், நகராட்சி சேர்மன் பதவிக்காக உள்ளூர் திமுக-வினரும் மோதினர். இருப்பினும், சூர்யா பாலமுருகன் வைட்டமின் காரணங்களால் சீட்டைப் பெற்றாராம். சூர்யா பாலமுருகன் 20-வது வார்டிலும், ரேணுப்ரியா 10-வது வார்டிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

சூர்யா பாலமுருகன்-ரேணுப்ரியா
சூர்யா பாலமுருகன்-ரேணுப்ரியா

தேனி - அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகளில் திமுக 19, அதிமுக 7, காங்கிரஸ் 2, அமமுக 2, பாஜக 1, சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தன. இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தேனி - அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அக்கட்சி சார்பாக 22-வது வார்டு கவுன்சிலர் சற்குணம் நிறுத்தப்பட்டார்.

இதனால் அதிருப்தியடைந்த சூர்யா பாலமுருகன் தரப்பினர், சற்குணம் தரப்பினரிடம் நகராட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். 69 வயது நிரம்பிய காங்கிரஸ் கவுன்சிலர் சற்குணம் இதற்கு உடன்படவில்லை. தற்போது இந்திய மருத்துவக் கழகத்தின் மாநிலச் செயலாளராக உள்ள இவரின் மகன் டாக்டர் தியாகராஜன் செல்வாக்கைப் பயன்படுத்தி தலைவர் பதவிக்குப் போட்டியிட தயாராகினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரேணுப்ரியா
ரேணுப்ரியா

நகராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் காங்கிரஸ் கவுன்சிலர் சற்குணம் வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில், 10-வது வார்டு திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா பாலமுருகன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அதனால் மறைமுகத் தேர்தலைப் புறக்கணித்த காங்கிரஸ் கவுன்சிலர்கள், கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினர். மேலும் கூட்டணி தர்மத்தை மீறியதாக சாலைமறியலில் ஈடுபட்ட அவர்கள், கட்சி மேலிடத்தில் புகார் அளிப்பதாகக் கூறிவிட்டுச் சென்றனர்.

காங்கிரஸ் கட்சியினர் மறியல்
காங்கிரஸ் கட்சியினர் மறியல்

இதற்கிடையே மு.க.ஸ்டாலின் கட்சித் தலைமை அறிவித்த இடங்களில் கூட்டணிக் கட்சியினருக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கப்படுவார்கள் என உத்தரவிட்டிருந்தார்.

இதனையேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தனது கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றிருந்தவர்கள் ராஜினாமா செய்யத் தொடங்கினர்.

ஆனால் ஒருசில இடங்களில் மட்டும் திமுக-வினர் தங்கள் பதவியை விட்டுக்கொடுக்காமல் காலம்தாழ்த்திவருகின்றனர். அந்தவகையில், தேனி-அல்லிநகரம் நகராட்சியில் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்ட ரேணுப்ரியா ராஜினாமா செய்வாரா என எதிர்பார்க்கப்பட்டுவந்தது.

சற்குணம்
சற்குணம்

இது தொடர்பாக திமுக தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், சனிக்கிழமை காலை பி.சி.பட்டி அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தேனி நகராட்சி திமுக கவுன்சிலர் அனைவரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சூர்யா பாலமுருகன் தரப்பில், ``தேர்தலுக்கு முன்பாகவே தேனி நகராட்சி சேர்மன் பதவி கூட்டணிக் கட்சியினருக்குத்தான் என அறிவித்திருந்தால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்காது. சேர்மன் பதவிக்காகச் செலவு செய்துவிட்டோம். பிற திமுக வேட்பாளர்களுக்காகவும் செலவுசெய்து வெற்றி பெறவைத்துள்ளோம். இதற்காக ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவரை ராஜினாமா செய்யவைத்து போட்டியிட வைத்தோம். ஆனால், தற்போது எவ்வித ரிஸ்க்கும் எடுக்காமல், ஒட்டுக் கேட்கவும், பணம் செலவு செய்யாமலும் கொடுக்கப்பட்ட 4 சீட்களில் 2-ல் வெற்றி பெற்றவர்களுக்கு சேர்மன் பதவி அளிப்பது நியாயமில்லை. சேர்மன் பதவிக்கு அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளரை வழிமொழியக்கூட ஆட்கள் இல்லை. அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதனால்தான் ரேணுப்ரியா தாக்கல் செய்தார்.

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்


சேர்மன் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளரின் மகன் அதிமுக கரைவேட்டி கட்டிக்கொண்டு, தீவிர அதிமுக விசுவாசியாக வலம்வருபவர் என்பதை அனைவரும் அறிவர். எவ்வித செயல்பாடுகளில் ஈடுபடாத 69 வயது தாயாருக்கு சீட் பெற்றுக்கொடுத்து சேர்மன் ஆக்க முயல்கிறார். இது நடந்தால் அதிமுக-வின் வெற்றியாகத்தான் இது பார்க்கப்படும். இதை தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றனர்.

இதைக் கேட்டுக்கொண்ட தங்க தமிழ்ச்செல்வன், ``துணைத் தலைவர் பதவி அளிக்கிறேன். சேர்மன் பதவியை திங்கள்கிழமைக்குள் ராஜினாமா செய்துவிடுங்கள், இல்லையென்றால் எனக்கும் சிக்கல்” எனக் கூறிவிட்டுச் சென்றாராம்.

காங்கிரஸ் கவுன்சிலர்
காங்கிரஸ் கவுன்சிலர்

இதற்கிடையே திமுக கூட்டணிக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ் கட்சியினர் செய்தியாளர்களைச் சந்தித்து, ``கூட்டணி தர்மத்தைக் காக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை வரவேற்கிறோம். அந்த உத்தரவை விரைவில் நடைமுறைப்படுத்தும் வகையில் நகராட்சி சேர்மன் பதவியை விரைவில் ராஜினாமா செய்ய வேண்டும்” என்றனர்.

இதனால் திங்கள்கிழமை காலை 11 மணிக்கெல்லாம் ரேணுப்ரியா ராஜினாமா செய்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கெடு முடிந்த பிறகும் பிடி கொடுக்காமல் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சூர்யா பாலமுருகன் தரப்பினர் தெரிவித்தனர்.

இது குறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ''சூர்யா பாலமுருகன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் அனைவரையும் அழைத்து தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். சூர்யா பாலமுருகன் ராஜினாமா செய்வது தொடர்பாக முடிவெடுக்க இன்று காலை 10 மணி வரை டைம் கேட்டிருந்தார். முதல்வரின் உத்தரவுபடி முடிவெடுக்கவில்லையென்றால், கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism