Published:Updated:

`ஹெச்.ராஜாவுக்கு எதிராக கலெக்டரிடம் முறையிட வந்த தேனி கல்லூரி!' -என்ன நடந்தது?

கலெக்டர் அலுவலகம் வந்த கல்லூரி நிர்வாகத்தினர்
கலெக்டர் அலுவலகம் வந்த கல்லூரி நிர்வாகத்தினர்

தேனி மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவைச் சந்தித்து, ஹெச்.ராஜா பேசியது குறித்து முறையிட்டனர் கல்லூரி நிர்வாகத்தினர்.

பா.ஜ.க பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள தேனி வந்திருந்த ஹெச்.ராஜா, தேனி கல்லூரி ஒன்றைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதற்குக் கண்டனம் தெரிவித்து, மாவட்ட கலெக்டரைச் சந்தித்து முறையிட்டது அக்கல்லூரி நிர்வாகம்.

நேற்று முன்தினம், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான ஆதரவு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தேனி வந்திருந்தார். முன்னதாக, கொடுவிலார்பட்டியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``உத்தமபாளையத்தில் இயங்கிவரும், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் முதல்வர் தர்வேஷ் முகைதீன், கல்லூரி மாணவர்களைத் தூண்டிவிட்டு, குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கலந்துகொள்ள வைக்கிறார். எனவே, அக்கல்லூரிக்கு அரசு வழங்கும் நிதி உதவியினை உடனே ரத்து செய்ய வேண்டும்” எனப் பேசினார்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

ஹெச்.ராஜாவின் பேச்சால், கருத்த ராவுத்தர் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 150 பேர், நேற்று மாலை, தேனி மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவைச் சந்தித்து, ஹெச்.ராஜா பேசியது குறித்து முறையிட்டனர்.

யாரோ குறித்துக்கொடுத்த துண்டுச் சீட்டைப் பார்த்து பாரம்பர்யமிக்க கல்லூரி மீது வீண்பழி சுமத்துவது ஒருவகையான வன்முறையே!
கல்லூரி முதல்வர் தர்வேஷ் முகைதீன்
`மீண்டும் ஆவின் தலைவராகிறாரா ஓ.ராஜா?!' - சர்ச்சையில் தேனி ஆவின்

இதுகுறித்து, நம்மிடம் பேசிய கல்லூரி முதல்வர் தர்வேஷ் முகைதீன், ``இக்கல்லூரி, கடந்த 65 ஆண்டுகளாகப் பின்தங்கிய கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மக்களின் உயர்கல்வியின் மேம்பாட்டுக்காக இயங்கிவருகிறது. தமிழகத்தில் சிறுபான்மைக் கல்வி நிறுவனத்தில், பெரும்பான்மை சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பயில்வது இக்கல்லூரியில்தான். இக்கல்லூரியின் நிறுவனர் ஹாஜி கருத்த ராவுத்தர், ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். மேலும், குன்றக்குடி அடிகளார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் போன்ற சமயச் சான்றோர்கள் உரையாற்றிய கல்லூரி இது. இவ்வளவு பெருமைகளை உடைய இக்கல்லூரியைப் பற்றி அறியாமல், ஹெச்.ராஜா பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
`விவசாயக் கடன்.. உச்சநீதிமன்ற வழக்கு; நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள்!’- புலம்பும் தேனி விவசாயிகள்

இதுவரை, கல்லூரி வளாகத்திலோ, வெளியிலோ குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறவில்லை. அதைக் கல்லூரி நிர்வாகமும் அனுமதிக்காது. இக்கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் கலந்துகொண்டதற்கான உத்தமபாளையம் காவல்துறையில் பதிவுகள் ஏதும் இல்லை. அப்படி இருக்கையில், யாரோ குறித்துக்கொடுத்த துண்டுச் சீட்டைப் பார்த்து பாரம்பர்யமிக்க கல்லூரி மீது வீண்பழி சுமத்துவது ஒருவகையான வன்முறையே” என்றார் கொதிப்புடன்.

இது தொடர்பாக, பா.ஜ.க மாவட்டத் தலைவர் வெங்கடேசனிடம் பேசிய போது, ``அக்கல்லூரி தரப்பில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்தேன். யார் அவரிடம் அக்கல்லூரி குறித்து தெரிவித்தார்கள் எனத் தெரியவில்லை. இது தொடர்பாக ஹெச்.ராஜாவிடம் நான் பேசுகிறேன்" என்றார்.

பின் செல்ல