Published:Updated:

கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட தேனி ஊராட்சித் தலைவர்!- பழிவாங்கினாரா ஓ.பி.எஸ்?

அ.தி.மு.க மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்
News
அ.தி.மு.க மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்

ஒரு நாள் இரவில் எல்லாத்தையும் முடித்துவிட்டு, காலையில் சத்தமில்லாமல் சென்னை சென்றுவிட்டார் ஓ.பி.எஸ்.!

தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்கள், 10 ஊராட்சி ஒன்றிய வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தி.மு.க இரண்டு வார்டுகளையும், அ.தி.மு.க- எட்டு வார்டுகளையும் கைப்பற்றின. இதனால், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அ.தி.மு.க தக்கவைத்தது.

இந்நிலையில், அ.தி.மு.க சார்பில் 3-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஈஸ்வரிதான் மாவட்ட ஊராட்சித் தலைவர் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், 1-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ப்ரீத்தா ஊராட்சித் தலைவர் ஆகியுள்ளார்.

மாவட்ட ஊராட்சித் தலைவர் ப்ரீத்தா
மாவட்ட ஊராட்சித் தலைவர் ப்ரீத்தா

தேர்தல் நடப்பதற்கு முன்னரே, ஈஸ்வரிதான் அடுத்த மாவட்ட ஊராட்சித் தலைவர் என அழுத்தமாகக் கூறப்பட்டது. பெரியகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷ் மனைவிதான் ஈஸ்வரி, அன்னபிரகாஷ் அ.தி.மு.க விசுவாசி. குறிப்பாக தர்மயுத்த காலத்திற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் அதிக நெருக்கமாக இருக்கும் நபர்களில் ஒருவர். அதன் காரணமாகவே, தனது மனைவிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி கேட்டார் அன்னபிரகாஷ். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டு வாக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்கு கட்சிக்குள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த போதும், அதைக் கண்டுகொள்ளாமல், தேர்தல் வேலைகளைப் பார்க்க அறிவுறுத்தியுள்ளார் ஓ.பி.எஸ். இதை ஏற்று அன்னபிரகாஷ் மற்றும் அவரது தரப்பினர், நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் மறைமுகத் தேர்தலுக்கான வேலைகளையும் ஒன்றியக் கவுன்சிலர்களைக் கவனிப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அன்னபிரகாஷ் மற்றும் ஈஸ்வரி
அன்னபிரகாஷ் மற்றும் ஈஸ்வரி

இந்நிலையில், நேற்று இரவு தனது ஆதரவாளர்கள் உடனான சந்திப்பிற்குப் பின்னர், போடி சிலமரத்துப்பட்டியைச் சேர்ந்த 1வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ப்ரீத்தாதான் ஊராட்சித் தலைவர் என முடிவெடுத்து கட்சி நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்துமாறு கூறியிருக்கிறார் ஓ.பி.எஸ்.! இதனால், அதிர்ந்துபோய்விட்டது அன்னபிரகாஷ் தரப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், இன்று தேனி பெருந்திட்ட வளாகத்தில் நடந்த மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தலுக்கு வந்த ஈஸ்வரி, சிறிது நேரத்திலேயே எழுந்து சென்றுவிட்டார். பெரும்பான்மை காரணமாக ப்ரீத்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஏன் இந்தத் திடீர் மாற்றம் என ஓ.பி.எஸ்ஸின் நெருங்கிய சகாக்கள் சிலரிடம் விசாரித்தோம். ``ஈஸ்வரியை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ப்ரீத்தாவைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் என உறுதியாக எதையும் கூறிவிட முடியாது. ப்ரீத்தா கணவர் நடேசன், கட்சியின் மாவட்டப் பிரதிநிதிகளில் ஒருவராக இருக்கிறார். அவ்வளவுதான் ப்ரீத்தாவின் பின்புலம். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அன்னபிரகாஷ், தங்கதமிழ்ச்செல்வன் உடன் இருந்தார். அதாவது தினகரன் பக்கம் இருந்தார். தர்மயுத்தம் முடித்து எடப்பாடியுடன் ராசியானதும், ஓ.பி.எஸ் பக்கம் வந்துவிட்டார். இது ஒரு காரணமாக இருக்கலாம்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவி, பா.ஜ.க-வைச் சேர்ந்த ராஜபாண்டியனுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் பிரமலைக்கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஈஸ்வரியும் பிரமலைக் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தலைவர் மற்றும் துணைத்தலைவர் இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் விமர்சனம் எழும் என்பதால் கூட மாற்றியிருக்கலாம். மேலும், அன்னபிரகாஷிற்குப் பிடிக்காதவர்கள் சிலர் ஓ.பி.எஸ் காதில் ஏதாவது சொல்லியிருக்கலாம். ஆனால், கடைசி நாள் வரை ஈஸ்வரிதான் மாவட்ட ஊராட்சித் தலைவர் எனத் தேனி அ.தி.மு.க நினைத்துக்கொண்டிருந்தது. கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது ஈஸ்வரிக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே அதிர்ச்சிதான்.! ஒரு நாள் இரவில் எல்லாத்தையும் முடித்துவிட்டு, காலையில் சத்தமில்லாமல் சென்னை சென்றுவிட்டார் ஓ.பி.எஸ்.!” என்றனர்.