Published:Updated:

``அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை!” - அமைச்சர் கடம்பூர் ராஜு

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

``அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் எந்தவித விரிசலும் இல்லை. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும். அதிகமான கட்சிகளும் எங்கள் கூட்டணிக்கு வரும்” என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகளில் உட்கட்டமைப்பு திட்ட நிதி 2019-20-ன் கீழ் 10 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட நான்கைந்து அம்சங்களை வைத்து இந்தியாவிலேயே தமிழகத்துக்கு முதலிடம் என்ற விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது மத்திய அரசின் பிரதிநிதியாக இல்லாததால், தமிழகத்தை தீவிரவாதிகளின் கூடாரம் என்று கூறுகிறார் என நினைக்கிறேன். மத்திய அரசை ஆட்சி செய்யும் பா.ஜ.க-வில் அங்கம் வகித்து வரும் அவர், மத்திய அரசு விருது கொடுத்ததை தவறு என்கிறாரா? இல்லையென்றால் இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே நட்புறவு சந்திப்பு நடந்ததன் காரணமாகத் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று பாராட்டிய பிரதமரின் கூற்றைத் தவறு என்று கூறுகிறாரா என்பது தெரியவில்லை.

பெரியார் குறித்து தவறாகப் பேசவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். யார் எப்படிப் பேசினாலும் அதை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எடுத்துக்கொள்ளலாம். நான் பேசியது சரிதான் என்றால் விவாதமாக எடுத்துக் கொள்ளலாம். நான் அந்தக் காரணத்தில் பேசவில்லை. நான் பேசியதில் ஒரு பாதியைத்தான் புரிந்துகொண்டுள்ளனர் என ரஜினிகாந்த் கூறியுள்ளதால் இதை விவாதமாக எடுக்க வழியில்லை.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறுபான்மையினர் பாதிக்காத வகையில் அரசின் செயல்பாடு இருக்கும் எனச் சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளோம். சிறுபான்மையினர் ஒருவர்கூட பாதிக்க அ.தி.மு.க அரசு துணை போகாது என்ற உத்தரவாதத்தை வழங்கியுள்ளோம்.

அ.தி.மு.க - பா.ஜ.கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி தொடரும். மேலும், சில கட்சிகள் இணையும். 2021 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்” என்றார்.

பின் செல்ல