Published:Updated:

`சாதித்துவிடலாம்னு செயல்படுறாங்க; மோசமான விளைவை ஏற்படுத்தும்!'-எச்சரிக்கும் கனிமொழி

இ.கார்த்திகேயன்
ப.கதிரவன்

``தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. படுகொலைச் சம்பவங்களும், ஆணவக் கொலைகளும் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கும் என்பதை நாம் எப்படிச் சொல்ல முடியும்” என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

கனிமொழி
கனிமொழி

நெல்லையில் சமீபத்தில் தி.மு.க மகளிரணி நிர்வாகியும் முன்னாள் மேயருமான உமாமகேஸ்வரி, அவரின் கணவர் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் உட்பட 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

விமான நிலையத்தில் கனிமொழி
விமான நிலையத்தில் கனிமொழி

இச்சம்பவத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலில் தி.மு.க செயற்குழு உறுப்பினர் கருணாகரன் படுகொலை செய்யப்பட்டார். இவ்விரு சம்பவங்களில் உயிரிழந்த நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவரும் சட்ட மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளை கவனத்தில் கொள்ளாமலும், நிலைக்குழுவுக்கு அனுப்பாமலும் நிறைவேற்றப்படுவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகள் இதைக் கண்டித்த பிறகும், எந்தவித கருத்துக் கேட்கும் கூட்டத்தையும் நடத்தாமல் தனது பெரும்பான்மையான பலத்தைக் கொண்டு சாதித்துவிட வேண்டும் எனச் செயல்படுகிறார்கள்.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர்ப் பிரச்னை குறித்து தொடர்ந்து சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தி.மு.க கேள்வி எழுப்பி வருகிறது. அமைச்சர்களும் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று சொல்கிறார்களே தவிர இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த ஆட்சியில் தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. படுகொலைச் சம்பவங்களும், ஆணவக் கொலைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையைக் காணமுடிகிறது. இந்த நிலையில், சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கும் என்பதை நாம் எப்படிச் சொல்ல முடியும்” என்றார்.