அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

தேவர் ஜெயந்தி தங்கக் கவச அரசியல்... மல்லுக்கட்டும் எடப்பாடி - ஓ.பி.எஸ்!

தேவர் ஜெயந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
தேவர் ஜெயந்தி

ஓ.பி.எஸ் பொருளாளராக இருந்த காலத்தில், தங்கக் கவசத்தை அவர் பெற்றுக் கொடுத்தார். ஆனால், தற்போது கட்சி பொதுக்குழு முடிவின்படி அவர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுவிட்டார்.

‘முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி அன்று தங்கக் கவசத்தைப் பெறும் உரிமை யாருக்கு?’ என்பதை முன்வைத்து மறுபடியும் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினர் மல்லுக்கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்!

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா நடைபெறும். அப்போது அ.தி.மு.க சார்பில் தேவர் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் அணிவிப்பது வழக்கம். மதுரை அண்ணா நகர், பேங்க் ஆஃப் இந்தியா லாக்கரில் இருக்கும் இந்தத் தங்கக் கவசத்தை, ஜயந்தியின்போது அ.தி.மு.க பொருளாளர், பசும்பொன் தேவர் நினைவிடக் காப்பாளர் ஆகியோர் எடுத்து தேவர் சிலைக்கு அணிவிப்பார்கள். விழா முடிந்ததும் அது மீண்டும் வங்கி லாக்கரிலேயே வைக்கப்பட்டுவிடும்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் என இரு அணிகளாக அ.தி.மு.க பிளவுபட்டிருக்கும் இந்தச் சூழலில், தங்கக் கவசத்தை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இரு அணியினரும் வங்கிக்குக் கடிதம் கொடுத்திருக்கின்றனர். இதுதான் பிரச்னைக்குக் காரணம்.

தேவர் ஜெயந்தி தங்கக் கவச அரசியல்... மல்லுக்கட்டும் எடப்பாடி - ஓ.பி.எஸ்!

இது குறித்துப் பேசுகிற முன்னாள் எம்.பி-யும், ஓ.பி.எஸ் அணியின் மதுரை மாநகரச் செயலாளருமான கோபாலகிருஷ்ணன், “கட்சி குறித்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே, வழக்கம்போல ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு, தங்கக் கவசத்தைப் பெறுவதற்கான கோப்புகளை வங்கி அதிகாரியிடம் வழங்கினோம். எதிர்த் தரப்பிலிருந்தும் கடிதம் வந்ததாகவும், இரண்டையும் பரிசீலித்து முடிவு எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்றார்.

இதையடுத்து இ.பி.எஸ் அணி தரப்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம். “ஓ.பி.எஸ் பொருளாளராக இருந்த காலத்தில், தங்கக் கவசத்தை அவர் பெற்றுக் கொடுத்தார். ஆனால், தற்போது கட்சி பொதுக்குழு முடிவின்படி அவர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுவிட்டார். தற்போதைய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்தான். எனவே, கவசத்தை எங்களிடம்தான் ஒப்படைப்பார்கள். ஆனால், ஏதாவது பிரச்னை செய்ய வேண்டும் என்பதற்காகவே தனிநபரான ஓ.பி.எஸ் இதில் உரிமை கொண்டாடிவருகிறார். அவர்கள் எண்ணம் பலிக்காது” என்றார்.

இது குறித்து அரசுத் தரப்பில் விசாரித்தபோது, “இரண்டு தரப்புமே இப்படி வில்லங்கம் பண்ணினால், அரசு அதிகாரிகளே தங்கக் கவசத்தைப் பெற்று ஒப்படைப்பார்கள். கடந்த 2017-ல் டி.டி.வி-க்கும், ஓ.பி.எஸ்-ஸுக்கும் இடையே பிரச்னை வந்தபோது ராமநாதபுரம், மதுரை மாவட்ட கலெக்டர்களிடம் கவசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போதும் அதே நடைமுறையைப் பின்பற்ற வாய்ப்பு இருக்கிறது’’ என்றனர்.