Published:Updated:

`சமூக வலைதளங்களை விட்டு வெளியேற நினைக்கிறேன்!' - மோடியின் `சர்ப்ரைஸ்' ட்வீட்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( PMO India )

சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுவது குறித்து சிந்தித்து வருவதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அரசியல்வாதிகளில் பிரதமர் மோடி முக்கியமானவர். இந்தநிலையில், சமூக வலைதளங்களை விட்டு அவர் வெளியேற முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்து தான் ஏற்கெனவே சிந்தித்துப் பார்த்ததாகவும் ட்விட்டரில் அவர் பதிவிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் மோடி, ``வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவது குறித்து சிந்தித்தேன்'' என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், அதுதொடர்பாக முடிவெடுத்தால் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் மோடி. என்ன காரணம் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

பிரதமர் மோடி ட்வீட் செய்த அரை மணி நேரத்துக்குள்ளாகவே ரிப்ளைகள் குவியத் தொடங்கிவிட்டன. முதல் அரை மணிநேரத்துக்குள்ளாகவே 13,000-த்துக்கும் மேற்பட்ட ரிப்ளைகள், 9,000-த்துக்கும் மேற்பட்ட ரீ-ட்வீட்கள் செய்யப்பட்டன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சமூக வலைதளங்களில் உலக அளவில் அதிகம்பேரால் பின்தொடரப்படும் பிரபலங்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கும் பிரதமர் மோடியின் இந்த ட்வீட், நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ட்விட்டரில் அவரை, 5.33 கோடி பேரும், ஃபேஸ்புக்கில் 4.4 கோடி பேரும் இன்ஸ்டாகிராமில் 3.52 கோடி பேரும் பின்தொடருகின்றனர். அதேபோல், அவரது யூடியூப் பக்கத்தைப் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 45 லட்சமாகும்.

`பிரதமர் மோடி குடியுரிமையை நிரூபிக்கத் தேவையில்லை!' - ஆர்.டி.ஐ-யில் பதிலளித்த பிரதமர் அலுவலகம்

கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவர் ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட், ட்விட்டர் நிறுவனத்தால், `இந்தியாவின் கோல்டன் ட்வீட் - 2019' என்று வர்ணிக்கப்பட்டது. 2019ல் அதிக ரீ-ட்வீட் மற்றும் லைக் செய்யப்பட்ட ட்வீட்டாக அதை அங்கீகரித்தது ட்விட்டர். 2019ம் ஆண்டு மே 23ல் பதிவிடப்பட்ட அந்த ட்வீட்டில் ,``ஒன்றாக நாம் வளர்வோம். ஒன்றாக பிரகாசிப்போம். அனைவருக்குமான இந்தியாவை நாம் ஒன்றிணைந்து கட்டமைப்போம். இந்தியா மீண்டும் ஒருமுறை வென்றிருக்கிறது! #VijayiBharat'' என்று மோடி குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் பிரதமர் மோடியின் ட்வீட் குறித்து காங்கிரஸின் ராகுல் காந்தி, ``சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதற்குப் பதிலாக, வெறுப்பைக் கைவிடுங்கள்'' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு