Published:Updated:

`துணிச்சலான முறைகேடு?!' - டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் ஆளும்கட்சியை சாடும் திருமாவளவன்

திருமாவளவன்
திருமாவளவன்

``ஆளும்கட்சியினரின் தலையீடு இல்லாமல் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் இவ்வளவு துணிச்சலாக முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை” தூத்துக்குடியில் எம்.பி., திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மத்திய பா.ஜ.க அரசு மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. குடியுரிமைச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது எனப் பொருள் இல்லை.

திருமாவளவன்
திருமாவளவன்

ஒட்டுமொத்த தேசத்துக்கே எதிரானதுதான். குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் மதச்சார்பின்மை என்கிற மகத்தான கோட்பாட்டை அழிக்கும் வகையில் மோடி அரசு திருத்தச்சட்டம் அமைந்துள்ளது. இந்தச் சட்டத்தை திரும்பப்பெறும் வரையில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து போராடுவோம்.

பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் அடையாளங்களை சிதைப்பது, சிலைகளை உடைப்பது, அவமதிப்பது போன்ற நடவடிக்கைகள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சங்பரிவார் அமைப்புகளின் தூண்டுதலால் இத்தகைய செயல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் பி.ஜே.பி கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உள்ளன.

திருமாவளவன்
திருமாவளவன்

குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள கலியப்பேட்டையில் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதில், ஒருவர் பா.ம.க-வை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. `கூடா நட்பு' எத்தகைய குற்றச் செயல்களையும் செய்வதற்கு இட்டுச் செல்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

அதேபோல, நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பெரியாரை பேசியதன் பின்னணியில் சங்பரிவார் அமைப்புகள் இருப்பதாகச் சந்தேகப்படுகிறோம். பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயலை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. தமிழகத்தில் மதத்தின் பெயரால் வன்முறைகளைத் தூண்டி தங்களுடைய அரசை இடையிடையே நிலைநாட்ட வேண்டும் என ஆளும்கட்சியினர் விரும்புகிறார்கள்.

திருமாவளவன்
திருமாவளவன்

ஆளும்கட்சியினரின் தலையீடு இல்லாமல் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் இவ்வளவு துணிச்சலாக முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை டி.என்.பி.எஸ்.சி தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதி விசாரணை நடத்திட முதல்வர் உத்தரவிட வேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு