Published:Updated:

`பழிதீர்த்துவிட்டார் அமித் ஷா!'- சிதம்பரம் கைது பின்னணியைச் சொல்லும் திருமாவளவன்

இ.கார்த்திகேயன்

``10 ஆண்டுகளுக்கு முன்பு அமித் ஷா கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தற்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thirumavalavan
thirumavalavan

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெறுவதற்காக சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை. அவர் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமித் ஷா கைது செய்யப்பட்டார். அச்சம்பவத்துக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பழித்தீர்ப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் சி.பி.ஐ, அமலாக்கத்துறையை ஏவி இந்த பழிவாங்கும் நடவடிக்கையை நடத்தியுள்ளார்கள். சிதம்பரம் ஓடி ஒளிந்துவிட்டார், தலைமறைவாகிவிட்டார் என திட்டமிட்டு மத்திய அரசு வதந்தியைப் பரப்பியது. ஆனால், அவர் ஏற்கெனவே சி.பி.ஐ தலைமை அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிதம்பரம்
கைது செய்யப்பட்ட சிதம்பரம்
ANI

ஐ.என்‌.எக்ஸ். மீடியா விவகாரத்தில் முன்ஜாமீன் பெறுவதற்காக அவசர வழக்காக எடுக்கக்கோரி சட்டபூர்வமாக மனுத்தாக்கல் செய்திருந்தார் அவர். ஆனால், அவரது வழக்கை விசாரிப்பதாகச் சொன்ன நீதிபதி நேற்று மாலை 4 மணிக்கு மேல் காணாமல் போய்விட்டார். இதிலிருந்து உச்ச நீதிமன்றத்தையும் இன்று உள்துறை அமைச்சகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது என்பதை உணர முடிகிறது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து முன்ஜாமீன் வழங்கி சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் நிச்சயமாக விசாரணைக்கு தானே முன்வந்து சிதம்பரம் ஒத்துழைப்பு அளித்திருப்பார்.

சிதம்பரம் வீட்டில்தான் உள்ளார் எனத் தெரிந்த பிறகு வீட்டை முற்றுகையிட்டாலே போதுமானது. எந்த நேரத்திலும் அவர் வெளியேற முடியாது. காத்திருந்து அவரைக் கைது செய்திருக்கலாம். ஆனால், வீட்டின் சுவர் ஏறிக் குதித்து அவரைக் கைது செய்வதற்கு என்ன அவசியம் வந்தது எனத் தெரியவில்லை. இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் இருக்கிறது என்பதற்கு ஆதாரங்களும் இல்லை. ஆகவே, அவர் அநாகரிகமான முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிதான். இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். பாஜ.க அரசு எந்த மரபுகளையும் பின்பற்றத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்திலும், தற்போது சிதம்பரம் கைது செய்யப்பட்ட அணுகுமுறையாக இருந்தாலும் எல்லாவற்றிலும் யதேச்சதிகாரப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. ஆனால், சிதம்பரம் கைதுசெய்யப்பட்டதற்கும் பா.ஜ.க.வுக்கும் எந்தத் தொடர்புமில்லை என மறுப்பு தெரிவிப்பதிருப்பது வேடிக்கையானது.

thirumavalavan
thirumavalavan

காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் இந்தக் கைது நடவடிக்கை. காங்கிரஸ் முன்னணி தலைவர்களுள் தொடர்ந்து மோடி அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தவர்களில் சிதம்பரமும் ஒருவர். குறிப்பாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளை, இந்தியப் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது என்பதை அவர் தொடர்ச்சியாக நாளேடுகளில், கட்டுரைகளில் வெளியிட்டார். மோடி அரசின் முகத்திரையைக் கிழித்து எறிந்தார். விஜய் மல்லையா மற்றும் இன்னும் பல கிரிமினல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு அவர்களைத் தேடுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காதவர்கள், கைது செய்ய எந்த முனைப்பும் காட்டாதவர்கள் சிதம்பரம் கைதில் மட்டும் இவ்வளவு அவசரம் காட்டியது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை'' என்று குற்றம்சாட்டினார்.