Election bannerElection banner
Published:Updated:

கணவரின் ஆட்டோவில் சென்று வாக்கு சேகரிப்பு - எளிமையால் ஈர்க்கும் திருப்பரங்குன்றம் சிபிஎம் வேட்பாளர்

ஆட்டோவில்...
ஆட்டோவில்...

திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் ஆட்டோவில் சென்று பரப்புரையில் ஈடுபட்டுவருவது மக்களை ஈர்த்திருக்கிறது.

``அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கார் இல்லையாம்... ஆனால், என்னிடம் ஆட்டோ இருக்கிறது..." என்று திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் டச்சிங்காகப் பேசியிருப்பது அப்பகுதி மக்களைக் கவர்ந்துள்ளது.

எஸ்.கே.பொன்னுத்தாய்-சு.வெங்கடேசன்
எஸ்.கே.பொன்னுத்தாய்-சு.வெங்கடேசன்

திமுக கூட்டணியில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இங்கு அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சிபிஎம்-மில் எஸ்.கே.பொன்னுத்தாய் போட்டியிடுகிறார்.

பொன்னுத்தாயியின் கணவர் ஆட்டோ ஓட்டுநர். மிகவும் எளிமையான குடும்பப் பின்னணிகொண்டவர். ஆட்டோவுக்கு பெட்ரோல் போடுவதே அவர் தேர்தல் பரப்புரைக்குச் செய்யும் பெரிய செலவு. எளிமையான பின்னணிகொண்டவர் என்பது ஒருபுறம் இருந்தாலும், மக்கள் சேவையில் தொகுதி மக்கள் மனதில் வலுவான தடம்பதித்தவர். ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகப் பொறுப்புவகிக்கும் பொன்னுத்தாய், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராகவும் சாதிய தீண்டாமைக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி மதுரை மக்களின் நன்மதிப்பைப் பெற்றாவர். அந்த அடிப்படையில் அவரை சிபிஎம்., வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

மக்களிடம் வாக்கு கேட்கிறார்
மக்களிடம் வாக்கு கேட்கிறார்

திருப்பரங்குன்றம் கோயில் அருகில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ``மதுரை எம்.பி-யாக தோழர் பி.மோகன் இருந்தபோதுதான் திருப்பரங்குன்றம் பகுதி வளர்ச்சிக்காக கேந்திரியா வித்யாலயா பள்ளியையும், வடபழஞ்சியில் தொழில்நுட்பப் பூங்காவையும் கொண்டு வந்தார்.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் அதிமுக அரசு, தொழில்நுட்பப் பூங்காவுக்கு ஒரு நிறுவனத்தைக்கூட கொண்டு வரவில்லை. அதுபோல் இத்தொகுதியில் தென் மாவட்ட மக்களுக்கு நன்மை பயக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணியும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

தன் ஆட்டோவில்
தன் ஆட்டோவில்

அதுபோல் தென் மாவட்ட தொழில்துறை வளர்ச்சி அடைவதற்கு முக்கியமான விமான நிலைய விரிவாக்கப் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்கள் செயல்பட திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு இத்தொகுதி மக்கள் பொன்னுத்தாயை ஆதரிக்க வேண்டும். அதிமுக ஆட்சியை சூரசம்ஹாரம் செய்வதற்காக முருகனின் முதல் படைவீடான இங்கிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறோம்" என்றார்.

வேட்பாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் பேசும்போது, ``நீண்ட காலத்துக்குப் பிறகு திருப்பரங்குன்றம் தொகுதியில் பெண் வேட்பாளர் போட்டியிட கட்சி அனுமதித்துள்ளது. மக்களோடு மக்களாகப் பழகும் எனக்கு இங்குள்ள மக்களின் அனைத்து பிரச்னைகளும் தெரியும்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கார் இல்லை என்று தன் வேட்பு மனுவில் குறிப்பிட்டிருக்கிறாராம். ஆனால், என்னிடம் ஆட்டோ இருக்கிறது. என் கணவர் ஆட்டோ டிரைவர். அதனால், எளிய மக்களின் கஷ்டங்கள் எனக்குத் தெரியும். மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடிவரும் எனக்கு மக்கள் வாக்களிப்பார்கள்" என உற்சாகமாகப் பேசும் பொன்னுத்தாய், ``ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆனாலும் இதே ஆட்டோவுலதான் போவேன்’’ என்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு