Election bannerElection banner
Published:Updated:

திருத்துறைப்பூண்டி அதிமுக வேட்பாளராக சுரேஷ்குமார்... ஆதங்கத்தில் சீனியர்கள்! - என்ன நடக்கிறது?

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்

வழக்கறிஞர் சுரேஷ்குமாரோட மகன் திமுக-வுல இளைஞரணி பொறுப்புல இருக்கார். அந்தக் கட்சியில் அவர் சீட் கேட்டிருந்தார். அப்பா சுரேஷ்குமார் அதிமுக-வுல சீட் கேட்டு எப்படியோ வாங்கிவிட்டார்.

திருத்துறைப்பூண்டி [தனி] தொகுதியின் அதிமுக வேட்பாளராக வழக்கறிஞர் சுரேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இது திருத்துறைப்பூண்டி தொகுதி மக்களிடம் ஆச்சர்யத்தையும், இப்பகுதி அதிமுக-வின் ஒரு தரப்பினரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இவர் அனைத்துத் தரப்பு மக்களிடமும் அன்பாக, எளிமையாக பழகக்கூடியவர். வழக்கறிஞர் என்பதால் இத்தொகுயில் பலருக்கும் இவர் அறிமுகமானவர். இதனால்தான் இவருக்கு சீட் வழங்கப்படுள்ளதாக மற்றொரு தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்துறைப்பூண்டி தொகுதியில் அதிமுக-வின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, 50-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று முடிந்த நிலையில் இங்கு யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என பல்வேறு கணிப்புகள் நிலவிவந்தன.

தற்போது இத்தொகுதியின் அதிமுக வேட்பாளராக வழக்கறிஞர் சுரேஷ்குமார் அறிவிக்கப்பட்டிருப்பது, இத்தொகுதி மக்கள் மற்றும் கட்சிக்காரர்களிடமும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் பாலதண்டாயுதம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் உமா மகேஷ்வரி, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் ரமேஷ்... இந்த மூன்று பேரில் யாருக்காவதுதான் சீட் கிடைக்கும் எனப் பேச்சு அடிபட்டுவந்தது. குறிப்பாக, பாலதண்டாயுதம் நீண்டகாலமாக கட்சியில் இருப்பவர். இவரின் தந்தை உத்திராபதி கம்யூனிஸ்ட் கட்சி எம்,எல்.ஏ-வாக இருந்தவர். அவர் அதிமுக-வுக்கு மாறியபோது, இவர்களது குடும்பம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது எனப் பழைய சம்பவம் ஒன்றை உருக்கமாக நினைவுகூர்கிறார்கள் தொகுதிவாசிகள்.

அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வேறு யாரும், அதிமுக-வுக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக, ஒரு வாகனத்தில் ஜெயலலிதா போன்ற வேடம் அணிந்த ஒருவரை அமரவைத்து அவரது காலில், உத்திராபதிபோல் வேடம் அணிந்த ஒருவர் விழுந்து வணங்குவதுபோல், திருத்துறைப்பூண்டி முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி ஊர்வலம் நடத்தியது. அதிமுக-வில் சேர்ந்ததற்காக உத்திராபதியின் ஒட்டுமொத்த குடும்பமுமே நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்தது. அந்தக் குடும்பத்திலிருந்து வந்து, கட்சிக்காக உழைத்த பாலதண்டாயுதத்துக்கு சீட் இல்லை.

2016 சட்டமன்ற தேர்தலின்போது உமா மகேஷ்வரி, நகர்மன்ற தலைவர். ஆனாலும்கூட அதை ராஜினாமா செய்துவிட்டு, அந்தத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனதால், அவர் கடனாளி ஆனார். தகவல் தொழில்நுட்ப பிரிவு ரமேஷும் கட்சியில் சீனியர்... அமைச்சர் காமராஜின் தீவிர விசுவாசி. ஆனாலும்கூட, நிறைய செலவு செய்வார் என்பதாலேயே வழக்கறிஞர் சுரேஷ்குமாருக்கு அதிமுக சீட் வழங்கியுள்ளது. பணம் இருக்குறவங்களுக்குத்தான் கட்சியில மரியாதை’’ என திருத்துறைப்பூண்டி அதிமுக-வில் ஒரு தரப்பினர் புலம்புகிறார்கள்.

அதிமுக
அதிமுக

இவர்கள் கடைசியாக சொன்ன ஒரு தகவல்தான் மிகப்பெரிய ஹைலைட். ‘``வழக்கறிஞர் சுரேஷ்குமாரோட மகன் திமுக-வுல இளைஞரணி பொறுப்புல இருக்கார். அந்தக் கட்சியில் அவர் சீட் கேட்டிருந்தார். அப்பா சுரேஷ்குமார் அதிமுக-வுல சீட் கேட்டு எப்படியோ வாங்கிவிட்டார். தன்னோட சொந்த மகனையே அதிமுக-வுக்கு இவரால் கொண்டு வர முடியலை. இல்லை, அங்க ஒருத்தர், இங்க ஒருத்தர் இருப்போம்னு பேசிவெச்சுக்கிட்டு இப்படி இருக்காங்களானு தெரியலை’ ’ என்கிறார்கள்.

ஆனால் வழக்கறிஞர் சுரேஷ்குமார் தரப்பினரோ, ‘``இன்னைய சூழல்ல திருத்துறைப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட இவர் ஒருத்தர்தான் பொருத்தமான நபர். இவரின் தந்தை ஓய்வுபெற்ற நீதிபதி. இவரின் தாய் ஆசிரியை. மனைவி இந்துசமய அறநிலையத்துறையில் இணை ஆணையராக உள்ளார். சுரேஷ்குமார் பரம்பரைப் பணக்காரர். இவரால்தான் எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்ய முடியும். இவர் வழக்கறிஞராக இருப்பதால், தொகுதி மக்களுக்கும் நல்ல அறிமுகம் உண்டு. அ.தி,மு.க-வைப் பொறுத்தவரை இது வாழ்வா சாவா என்ற போராட்ட தேர்தல். ஒரு தொகுதியைக்கூட இழக்க முடியாது. சுரேஷ்குமாரை வேட்பாளராக்கினால்தான் எல்லாவிதங்களிலும் ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம். அனைத்துத் தரப்பு மக்களிடமும் எளிமையாக, அன்பாகப் பழகக்கூடியவர். அதனால்தான் எல்லா கணக்கும் போட்டு, கட்சித் தலைமை இவரை வேட்பாளராக அறிவிச்சிருக்கு’’ என்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு