Published:Updated:

குடிசை வீடு; தேர்தல் செலவுக்கு ரூ.3,000; பழைய டூ வீலர் - இவரும் ஒரு பிரதான கட்சியின் வேட்பாளர்தான்!

மாரிமுத்து வாழும் குடிசை வீடு
மாரிமுத்து வாழும் குடிசை வீடு

எங்க குடும்பத்துக்குனு முக்கால் ஏக்கருக்கு குறைவாத்தான் வயல் இருக்கு. அதுல வரக்கூடிய வருமானத்தை மட்டும்வெச்சு குடும்பத்தை ஓட்ட முடியாது. மனைவியும் அம்மாவும் விவசாய வேலைகளுக்குப் போறாங்க. என்னோட கட்சிக்காரங்களும், ஊர்மக்களும் தங்களால முடிஞ்ச பொருளாதார உதவிகளை செய்றாங்க.

தேர்தலில் போட்டியிட முதல் தகுதியாக, செலவு செய்யப் பணம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிப்போன சமகாலத்தில், 3,000 ரூபாயை வைத்துக்கொண்டு வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார் மாரிமுத்து. திருத்துறைப்பூண்டி தொகுதியில் தி.மு.க தலைமையிலான கூட்டணி சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் மாரிமுத்துதான் அந்த எளிமையான வேட்பாளர்.

மாரிமுத்துவின் வீடு
மாரிமுத்துவின் வீடு

மாரிமுத்துவுக்குச் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி அருகே காடுவாக்குடி. அங்கு சென்று மாரிமுத்துவின் வீடு எங்கிருக்கிறது என்று கேட்டால், ஒரு சிறிய குடிசையை நமக்குக் காட்டுகிறார்கள் ஊர் மக்கள். அந்த குடிசை வீட்டில்தான் மாரிமுத்து, அவரின் தாய் தங்கம்மாள், மனைவி ஜெயசுதா, மகள் தென்றல், மகன் ஜெயவர்மன் ஆகியோருடன் வசித்துவருகிறார்.

தொகுதிக்குள் ஒரு பழைய டூ வீலரில் வலம்வரும் மாரிமுத்துவிடம் பேசினோம். ``என் அப்பா ஒரு விவசாய கூலித் தொழிலாளி. இப்ப அவர் உயிரோட இல்லை. நான் விவசாயக் கூலி வேலைக்குப் போய்த்தான் பி.காம் வரைக்கும் படிச்சேன். இப்ப என்கிட்ட ஒரு டூ வீலர் இருக்கு. என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி அதுவும் கிடையாது. இப்ப எங்க குடும்பத்துக்குனு முக்கால் ஏக்கருக்கு குறைவாத்தான் வயல் இருக்கு. அதுல வரக்கூடிய வருமானத்தை மட்டும்வெச்சு குடும்பத்தை ஓட்ட முடியாது. என்னோட மனைவியும் அம்மாவும் விவசாய வேலைகளுக்குப் போறாங்க. என்னோட கட்சிக்காரங்களும், ஊர்மக்களும் தங்களால் முடிஞ்ச பொருளாதார உதவிகளை செய்றாங்க.

இந்தத் தேர்தலில், வேட்பாளராகப் போட்டியிடுறதால, எனக்குனு தனிப்பட்டு பெருசா எந்தச் செலவும் கிடையாது. நோட்டீஸ் அடிக்குறது, மக்களைச் சந்திக்குறதுக்கான செலவுகள் மட்டும்தான். அதையும் எங்க கட்சி பார்த்துக்குது. இந்தக் குடிசை வீடு, 33,000 ரூபாய் விலை மதிப்புள்ள வயல், மூணு பவுன் நகை, வங்கிக் கணக்கில் வைத்துள்ள 58,000 ரூபா, தேர்தல் செலவுக்காக நான் கையிலவெச்சிருக்குற 3,000 ரூபாய் ரொக்கம். இதுதான் என்னோட சொத்து மதிப்பு. தேர்தல் ஆணையத்துல இந்த விவரங்களைத்தான் தாக்கல் செஞ்சிருக்கேன்’’ என மிகவும் யதார்த்தமாகவும் எளிமையாகவும் வார்த்தைகளை உதிர்க்கிறார் மாரிமுத்து.

கணவரின் ஆட்டோவில் சென்று வாக்கு சேகரிப்பு - எளிமையால் ஈர்க்கும் திருப்பரங்குன்றம் சிபிஎம் வேட்பாளர்

மாரிமுத்துவின் போராட்ட குணம், சேவை மனப்பான்மை குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட ஊர்மக்கள் ``கஜா புயல் அடிச்சபோது மாரிமுத்துவோட வீடு முழுசா சேதமடைஞ்சு போச்சு. அரசாங்கமும் சென்னையில இருக்குற தன்னார்வத் தொண்டு நிறுவனமும் சேர்ந்து, முதற்கட்டமா 18 குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர ஏற்பாடு செஞ்சாங்க. இதே ஊர்ல ஒரு மாற்றுத்திறனாளி இருக்கார். அவரோட வீடும் பாதிக்கப்பட்டிருந்துச்சு. ஆனா வீடு கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் லிஸ்ட்ல அவரோட பேர் இல்லை. அவருக்கு ஏமாற்றமாகப் போயிடுமேன்னு கவலைப்பட்டு, தனக்கு கிடைச்ச வாய்ப்பை, அவருக்கு விட்டுக்கொடுத்துட்டாரு மாரிமுத்து’’ என்றார்கள்.

குடிசை வாயிலில் அமைதியாக அமர்ந்திருக்கும் மாரிமுத்துவின் தாய் தங்கம்மாள், தற்போது பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம். கட்சிப் பணி மற்றும் ஊர் பொதுக்காரியங்கள் தொடர்பாக, தனது மகனைப் பலரும் பார்க்க வருவது இயல்பானது. ஆனால் கடந்த சில நாள்களாக, தனது மகன் மாரிமுத்து, மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறார். காலையில் வெளியில் சென்றால் நள்ளிரவில்தான் வீடு திரும்புகிறார். இதற்கான காரணத்தை தங்கம்மாவால் புரிந்துகொள்ள முடியவில்லையாம். ``நான் தேர்தல்ல போட்டியிடுற விஷயத்தை, எவ்வளவோ எடுத்துச் சொல்லி புரியவைக்கப் பார்த்தேன். எங்கம்மாவுக்கு எதுவும் புரியலை. எங்கம்மாவுக்கு வெளியுலகம் எதுவும் தெரியாது. வீடு, வீடு விட்டா விவசாய வேலை. அவ்வளவுதான் அவங்களுக்குத் தெரியும்’’ எனச் சொல்லும் மாரிமுத்துவின் எளிமையான வாழ்க்கைப் பயணம் நம்மை நெகிழவைக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு