Published:Updated:

கண்ணில் கறுப்பு பேப்பர்!- தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலையின் கண்ணில் கறுப்பு பேப்பரை வைத்து கட்டியும், முகத்தில் சாணத்தைப் பூசியும் மர்ம நபர்கள் அவமதிப்பு செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை ( ம.அரவிந்த் )

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலையின் கண்ணில் கறுப்பு பேப்பரை வைத்து கட்டியும், முகத்தில் சாணத்தையும் பூசி மர்ம நபர்கள் திருவள்ளுவருக்கு அவமதிப்பு செய்துள்ளனர். இதைக்கண்டு கொதித்த பொதுமக்கள் உடனே மர்ம நபர்களைக் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி மெயின் சாலையில் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அருகே உள்ளது திருவள்ளுவர் சிலை. இந்தச் சிலை சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் இருந்துவருகிறது. இந்த நிலையில், இன்று மர்ம நபர்கள் திருவள்ளுவர் சிலையின் கண்ணை கறுப்பு பேப்பரை வைத்து கட்டியுள்ளனர். மேலும், முகத்தில் சாணத்தைப் பூசி அவமதிப்பு செய்துள்ளனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ``உலகமே மதிக்கும் திருவள்ளுவரை இதுபோன்ற அவமதிப்பு செய்த மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும்'' என ஆவேசமாகக் கூறினர். போலீஸார் கைது செய்வதாக உறுதி கூறினர்.

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை

மேலும், போலீஸாரே திருவள்ளுவர் சிலையின் கண்ணில் ஒட்டப்பட்டிருந்த கறுப்பு பேப்பரை எடுத்தனர். பின்னர் சிலையின் மீது பூசப்பட்டிருந்த சாணத்தை தண்ணீர் கொண்டு கழுவினர். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரிடம் பேசினோம். ``எங்க ஊரில் திருவள்ளுவர் சிலை 20 வருடமாக இருக்கு. இன்று காலை டீக்கடைக்கு டீ குடிக்கப் போன பொதுமக்கள் சிலர் திருவள்ளுவர் சிலைக்கு நடந்த அவமதிப்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுவரை அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மீது மட்டுமே நடத்தப்பட்ட இது போன்ற அவமதிப்பு தாக்குதல் செயல்கள் இப்போது உலகமே போற்றிக் கொண்டிருக்கக்கூடிய திருவள்ளுவர் சிலை மீதும் நடத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து கொதித்தனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை

எங்க ஊர் மக்கள் திருவள்ளுவரை பெரிதும் மதிக்கிறோம். திருவள்ளுவர் தினம் தவிர மற்ற நாள்களிலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இந்தச் செயலை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தச் செயல் எங்க ஊரைச் சேர்ந்த அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மற்ற சம்பவங்களைப் போல் இதை விட்டுவிடாமல் உடனே காவல் துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும். இனி இதுபோல் எங்கும் நடைபெறாத அளவுக்கு அவை இருக்க வேண்டும்'' என்றார்.