Election bannerElection banner
Published:Updated:

``தி.மு.க தொண்டரைச் சிறைக்கு அனுப்பிய எ.வ.வேலு?''– ரணகள திருவண்ணாமலை தி.மு.க

எ.வ.வேலு, கம்பன்
எ.வ.வேலு, கம்பன்

`ஃபேஸ்புக்கில் விமர்சனம் செய்தார் என்பதற்காக தன் கட்சி தொண்டனையே பாரபட்சம் பார்க்காமல் சிறைக்கு அனுப்பிவிட்டார் எ.வ.வேலு’ என்று ஆதங்கத்தோடு புகார் வாசிக்கின்றனர் திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க.வினர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் கீழ் கொடுங்காலூர் அடுத்த வெங்கோடு கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க தொண்டர் செல்வக்குமார் என்பவர், ஃபேஸ்புக்கில் எ.வ.வேலுவைப் பற்றி விமர்சனம் செய்தார் என்று அதே தி.மு.கவைச் சேர்ந்த கலைஞர் பாஸ்கர் என்பவர் புகார் கொடுக்க, செல்வக்குமாரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. இந்த அதிரடி கைதுக்குப் பின்புலத்திலிருந்து முழுக்க முழுக்க செயல்பட்டது எ.வ.வேலுதான் என்கிறனர் விவரமறிந்த தி.மு.க வினர்.

செல்வக்குமார்
செல்வக்குமார்

இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். “செல்வக்குமார் தி.மு.கவின் தீவிர தொண்டன். 30 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்சியில் இருக்கிறார். தற்போது அனக்காவூர் ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளராக உள்ளார். இவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், தி.மு.கவின் வளர்ச்சிகள் பற்றிய பதிவுகள் செய்வது வழக்கம். அதேபோன்று, கட்சிக்கு எதிராக யாராவது செயல்பட்டால், அதையும் தனது பக்கத்தில் விமர்சனம் செய்வார். இந்த நிலையில், கடந்த வாரம் செல்வக்குமார் போட்ட பதிவு ஒன்றில், ‘கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கும்போது தன் மகனுக்காக தன்னுடைய மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றுத்தர, ஒன்றியச் செயலாளர்களிடம் ரகசியமாகக் கையெழுத்து வாங்கப்படுவது ஏன் எதற்கு என்றும், அ.தி.மு.க வில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருக்க நீங்கள் மறைமுக உறவில் இல்லாமலா மெடிக்கல் காலேஜ் நடத்திட அனுமதி உடனே கிடைக்கிறது’ என்றும், பதிவு போட்டிருந்தார். இதனைப் பார்த்த சிலர் அப்படியே எ.வ.வேலுவிடம், ‘உங்களைப் பற்றித்தான் பதிவு போட்டிருக்கிறான் ஐயா’ என்று போட்டுக்கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி அன்று செய்யாரைச் சேர்ந்த கலைஞர் பாஸ்கர் என்பவர், செல்வக்குமார் மீது பொய்யான புகார் ஒன்றைக் கொடுத்தார். முதலில் புகாரை ஏற்க மறுத்த செய்யாறு காவல்துறை அதன்பிறகு புகாரை ஏற்றுக்கொண்டு செல்வக்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்தக் கைதுக்கு முக்கிய காரணமே எ.வ.வேலுதான். அவர் பின்புலத்திலிருந்து காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து கைது செய்ய வைத்துவிட்டார். ஒரு சின்ன விஷயத்துக்காகக் கட்சியில் செல்வாக்கில் உள்ள மாவட்டச் செயலாளரே இப்படிச் செய்யலாமா?” என்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், “ஊரடங்கு நிலையில், எ.வ.வேலுவின் மகன் கம்பனுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வாங்குவதற்கு ஒன்றியச் செயலாளர்களிடம் ரகசியமாகக் கையொப்பம் வாங்கியது உண்மைதான். அது சீனியர் நிர்வாகிகளுக்குத் தெரியவே அதைத் தடுத்து நிறுத்தியுள்ளனர் அவர்கள். கொரோனா ஊரடங்கு முடிவிற்குப் பிறகு எ.வ.வேலு கட்சியின் உயர் பதவிக்குச் செல்ல இருப்பதால், தற்போது இருக்கும் மாவட்டச் செயலாளர் பதவியைத் தன் மகனுக்கு வாங்கிக் கொடுக்க இந்தக் கையெழுத்து வாங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தி.மு.க வினர் தனக்குக் கீழ்தான் இருக்கவேண்டும் என நினைத்து சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார் எ.வ.வேலு” என்றனர் ஆதங்கத்துடன்.

அதிகாரிகளை மிரட்டும் விஐபி கூட்டணி... ஆர்டர்களை வாங்கும் பினாமி கம்பெனி! கழுகார் அப்டேட்ஸ்

இதுகுறித்து ஜாமீனில் வெளியே வந்த செல்வக்குமாரிடம் பேசினோம். “24-ம் தேதி அன்று என்வீட்டிற்கு வந்த கீழ் கொடுங்காலூர் எஸ்.ஐ ஒருவர் உன்னை டி.எஸ்.பி. அழைத்துவரச் சொன்னார். 'நீ ஃபேஸ்புக்கில் எதோ பதிவு போட்டியாமே?' என்று கூறி என்னை அழைத்துச் சென்றார். வந்தவாசி டி.எஸ்.பி அலுவலகம் சென்றதும், அங்கிருந்து செய்யாறு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். மீண்டும் அங்கிருந்து பொன்னூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, காவல் நிலையம் மேலே உள்ள ஒரு அறையில் வைத்து என் துணியை எல்லாம் கழட்டிவிட்டு லத்தியால், உள்ளங்காலிலும் கைகளிலும் கடுமையாக அடித்தார்கள். இவற்றை எல்லாம் செய்தது செய்யாறு டி.எஸ்.பியும் வந்தவாசி டி.எஸ்,பியும்தான். அதன்பின்பு வந்தவாசி மாஜிஸ்திரேடுவிடம் அழைத்துச் சென்றார்கள். அவரிடம் நடந்தவற்றை சொன்னேன்.

அதன்பிறகு, என்மீது புகார் கொடுத்த பாஸ்கருடைய நண்பர் சுந்தருடைய காரிலேயே ஏற்றிக்கொண்டு 70 கி.மீ தொலைவில் உள்ள திருவண்ணாமலை ஜெயிலில் கொண்டுபோய் அடைத்துவிட்டார்கள். 28-ம் தேதி அன்றுதான் ஜாமீனில் வெளியே வந்தேன். இந்தச் சம்பவங்களுக்கு முழுக் காரணம். எ.வ.வேலுதான். அவர் தூண்டுதலின் பேரில்தான் என்னை போலீஸ் கைது செய்தது. இந்த விவகாரத்தைத் தலைவர் ஸ்டாலின் வரை கொண்டுசெல்வேன். கழகத்தில் உள்ளவர்கள் சிலர் தவறான முறையில் சென்றால் அதனை நான் சுட்டிக் காட்டுவேன். அது கழகம் கொடுத்த உரிமை” என்றார்.

செல்வகுமார் மீது புகார் அளித்த பாஸ்கரனிடம் பேசினோம். “செல்வகுமார் கழகத்தின் முன்னோடிகளை அவதூறாகவும் மரியாதை குறைவாகவும் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவந்தார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வாங்கியுள்ளதாகத் தவறான தகவலை ஃபேஸ்புக்கில் பரப்பினார். அவர் மருத்துவக் கல்லூரி தொடங்க அப்படி எதுவும் அனுமதி பெறவில்லை. இதே போன்று பல மூத்த நிர்வாகிகள் பற்றியும் அவதூறுகள் பரப்பினார். இது தொடர்பாக ஏற்கெனவே நான் அவரிடம் இதுபோன்று செய்யாதே என்றேன். ஆனால் அவர் கேட்கவில்லை. மீண்டும் கடந்த 20-ம் தேதி அன்று சொன்னேன் அப்போது அவர் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டலும் விடுத்தார். அதன்பின்பு நான் போலீஸில் புகார் செய்தேன். இது பற்றி எதுவும் எ.வ.வேலு அவர்களுக்குத் தெரியாது” என்றார்.

கம்பன்
கம்பன்

இதுகுறித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவுமான எ.வ.வேலுவிடம் பேசினோம். “என் மகன் கம்பனை மாவட்டச் செயலாளராக ஆக்குவதற்கு யாரிடமும் கையெழுத்து வாங்கவில்லை. நான் மாவட்டச் செயலாளராக இருக்கின்றபோது எப்படி நானே இன்னொருவருக்குக் கையெழுத்து வாங்குவேன். மாவட்டச் செயலாளர் பதவி என்பது தலைமை கொடுக்கும் பதவி. அதில் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அது தவறான செய்தி. அதேபோன்று, செல்வக்குமாரும், கலைஞர் பாஸ்கரும் யார் என்பதே எனக்குத் தெரியாது. அவங்க வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவங்க என்பதே இந்த விவகாரத்திற்குப் பிறகுதான் எனக்கே தெரியும். இவர்கள் இருவருக்கும் இடையிலான கோஷ்டி மோதலில் என்னுடைய பெயரைப் பயன்படுத்தியிருக்கிறான் கலைஞர் பாஸ்கர். நான் யாரையும் கைது செய்யத் தூண்டவில்லை. என் தகுதிக்கு இதெல்லாம் நான் செய்வேனா?” என்றார் தன் பாணியில்.

கட்சிக்குள் கோஷ்டி பூசல் என்பது எப்போதும் நடக்கக் கூடிய ஒன்று. அப்படி நடக்கும் போது, விவகாரம் பெரிதானால் தலைமை அதனைத்தடுத்து நிறுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து அவரவர் அதிகாரத்தைக் கையில் எடுத்து அடிமட்டத் தொண்டனை அலைகழித்தால் கட்சியின் வளர்ச்சி கேள்விக்குறிதான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு