Published:Updated:

திருவாரூர்: தொடரும் அவல நிலை; கதறும் மக்கள் - மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் எப்போது வரும்?

சித்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையம்

``மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுறதுக்கு, இப்ப இருக்குற இடம் போதுமானதாக இல்லை. அதனால ஏ.கே.எஸ்.விஜயன் தன்னோட சொந்த நிலத்தையே தானாமாகக் கொடுத்திருக்கார். ” - எம்.எல்.ஏ மாரிமுத்து

திருவாரூர்: தொடரும் அவல நிலை; கதறும் மக்கள் - மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் எப்போது வரும்?

``மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுறதுக்கு, இப்ப இருக்குற இடம் போதுமானதாக இல்லை. அதனால ஏ.கே.எஸ்.விஜயன் தன்னோட சொந்த நிலத்தையே தானாமாகக் கொடுத்திருக்கார். ” - எம்.எல்.ஏ மாரிமுத்து

Published:Updated:
சித்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையம்

கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களின், மிகவும் முக்கியமான அன்றாட அடிப்படைத் தேவையாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் திகழ்கின்றன. குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களது அவசர மருத்துவ உதவிக்கு, நீண்ட தூரம் பயணித்து, நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை இருப்பதால், ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான் இவர்களின் உயிர் காப்பான் ஆகத் திகழ்கின்றன.

ஆனால், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதற்குரிய தரத்துடன் இல்லையென்றாலோ, முறையாகச் செயல்படவில்லை என்றாலோ அப்பகுதி மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்படும். திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள சித்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவலநிலை இப்பகுதி மக்களை மிகுந்த வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கிவருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே இந்த நிலை தொடர்வதாக இப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையம்
ஆரம்ப சுகாதார நிலையம்

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் மிகவும் பழைமையான அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டுவருகிறது. கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது, 1973-ம் ஆண்டு இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கப்பட்டு, நீண்டகாலமாக இப்பகுதி மக்களுக்குப் பயனளித்து வந்திருக்கிறது. இங்கு மகப்பேறு, மருந்தகம், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகள் செயல்பட்டுவருகின்றன. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்துதான் சித்தமல்லி, சிறுகளத்தூர், மண்ணுக்கும் உண்டான், தேவதானம், பாலையூர், கெழுவத்தூர், திருவிடைமருதூர், பெருகவாழ்ந்தான் உள்ளிட்ட இன்னும் ஏராளமான கிராம மக்கள் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறப்பாகச் செயல்பட்டுவந்த இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருப்பது இப்பகுதி மக்களின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இது குறித்து நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தோடு பேசிய சித்தமல்லி கிராம மக்கள் சிலர், ``இங்க இரண்டு டாக்டர்கள் இருக்கணும். ஆனா ஒருத்தர்தான் இருக்கார். காலிப் பணியிடம் நிரப்பப்படாமலே இருக்கு. டாக்டர் இல்லாததுனால மக்கள் ரொம்பவே அவதிப்படுறாங்க. செவிலியர்களும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. மருந்து, மாத்திரைகளும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கிறதில்லை. இங்க எப்பவும் நோயாளிகள் கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். கட்டடமும் ரொம்ப மோசமான நிலையில இருக்கு. இது ரொம்ப பழைமையான கட்டடம். மழையிலயும் வெயில்லயும் சிதிலமடைஞ்சி கிடக்கு. எப்ப வேணும்னாலும், எது வேணும்னாலும் நடக்கலாம். இந்தக் கட்டடம் ரொம்ப சிதிலமடைஞ்சி கிடக்குதேனு ஊர் மக்கள் ஏற்கெனவே நொந்து கிடந்த நேரத்துல, கஜா புயல்ல இதோட காம்பவுண்ட் சுவரும், முன்பக்கக் கதவும் இடிஞ்சுபோயிடுச்சு. ஆனா, இன்னைய வரைக்கும் சீரமைக்கப்படாமலே கிடக்கு.

ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் எம்.பி
ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் எம்.பி

இந்த ஆரம்ப சுகாதார நிலையம் முறையாகச் செயல்படாததாலயும், தரம் உயர்த்தப்படாததாலயும், இந்தப் பகுதி மக்கள் அவசரகால மேல் சிகிச்சைக்கு இங்கேருருந்து 30 கிலோமீட்டர் தூரத்துல இருக்குற மன்னார்குடி அரசு மருத்துவமனைக்குத்தான் போகவேண்டியதாயிருக்கு. மழைகாலத்துல நிலைமை ரொம்ப மோசமாயிருக்கு. `புதுசா கட்டடம் கட்டி, போதுமான எண்ணிக்கையில் படுக்கை வசதியோட, மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக இதை உருவாக்கணும்’னு இந்தப் பகுதி மக்கள் கோரிக்கைவெச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா அரசியல் காழ்ப்புணர்ச்சியால எங்களோட கோரிக்கை நிறைவேத்தப்படாமலே இருக்கு.

இது தி.மு.க முன்னாள் எம்.பி-யும், இப்ப தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் இருக்கக்கூடிய ஏ.கே.எஸ்.விஜயனோட சொந்த ஊர். புதுக் கட்டடம் கட்டி, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக இதைத் தரம் உயர்த்த அவரும் பல முறை முயற்சி பண்ணிப் பார்த்துட்டாரு. பத்து வருஷம் அ.தி.மு.க ஆட்சி இருந்ததுனால, புறக்கணிக்கப்பட்டே கிடந்துச்சு. அதுமட்டுமில்லாம, எங்க ஊர் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குள் இருக்கு. முன்னாடி தி.மு.க-வைச் சேர்ந்த ஆடலரசன் எம்.எல்.ஏ-வாக இருந்தார். அதனாலயும் அ.தி.மு.க ஆட்சியில இதுக்கு விடிவுகாலம் பொறக்காமலே இருந்துச்சு. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நாங்க நிம்மதி அடைஞ்சோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனா இப்பவும் இதுக்கு விடிவுகாலம் பிறக்கலை. இது ஏ.கே.எஸ்.விஜயனோட சொந்த ஊர்ங்கறதுனாலயே, எங்க ஊர் ஆரம்ப சுகாதார நிலையப் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிங்க தயங்குறாங்க. இப்ப திருத்துறைப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ-வாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாரிமுத்து இருக்கார். அவருக்கு நல்ல பேர் கிடைச்சுடக் கூடாதுங்கறதுனாலயே, சில தி,மு.க புள்ளிகள் இதுக்கு முட்டுக்கட்டை போட்டுக்கிட்டு இருக்கிறதா சொல்றாங்க. முதல்வரோட சொந்த மாவட்டத்துலயே இப்படி ஒரு மோசமான அவலநிலையில எங்க ஊர் ஆரம்ப சுகாதார நிலையம் கிடக்கு. இதை நினைச்சாத்தான் மனசுக்கு ரொம்ப ஆதங்கமாக இருக்கு’’ என்கிறார்கள், இப்பகுதி மக்கள்.

மாரிமுத்து  எம்.எல்.ஏ
மாரிமுத்து எம்.எல்.ஏ

திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவிடம் நாம் பேசியபோது, ``மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுறதுக்கு, இப்ப இருக்குற இடம் போதுமானதாக இல்லை. இதனால் ஏ.கே.எஸ்.விஜயன் தன்னோட சொந்த நிலத்தையே தானாமாகக் கொடுத்திருக்கார். உடனடியாக, அங்கே மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுறதுக்கு நடவடிக்கை எடுக்கணும்னு நானும் தொடர்ச்சியா வலியுறுத்திக்கிட்டு இருக்கேன். தமிழ்நாடு அரசு இதுக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கு. மழைக்காலம் தொடங்கிட்டா, மக்கள் ரொம்பவே கஷ்டப்படுவாங்கங்கறதுனால, அதுக்குள்ள இதுக்கு தீர்வு காணணும்னு அதிகாரிகளை விரைவுப்படுத்திக்கிட்டே இருக்கேன். இந்தப் பிரச்னைக்கு மிக விரைவுல விடிவுகாலம் பொறந்துடும்’’ என நம்பிக்கை தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism