Published:Updated:

`அரசு வேலை.. பணம் கொடுப்பவர்களுக்கே பதவி?'- ஊழல் சர்ச்சையில் திருவாரூர் ரஜினி மக்கள் மன்றச் செயலாளர்

தாயுமானவன்
தாயுமானவன்

`இவர் யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கிக்கொண்டு பதவி கொடுத்து இருக்கிறார் என்பதற்கு என்னிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளன.'

ரஜினி மக்கள் மன்ற திருவாரூர் மாவட்டச் செயலாளர் தாயுமானவன், மன்ற விதிகளை மீறி அரசு பதவியில் இருப்பதாகவும், பணம் கொடுப்பவர்களுக்கே மன்றத்தின் மாவட்டப் பதவிகள் வழங்குவதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

செல்வா
செல்வா

திருவாரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளராக இருப்பவர் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தாயுமானவன். இவர் ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பில் இருந்தபோதே ஆளும் கட்சி பிரமுகர்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

தற்போது ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் பதவியில் இருக்கிறார். இவர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி தலைமைக்குப் புகார் அனுப்பினால் ராகவேந்திரா மண்டபத்தில் பணிபுரியும் ஒருவர் மூலம் அப்புகார் கடிதம் திரும்ப இவருக்கே வந்து விடுவதும், புகார் எழுதியவர்களை உடனடியாகப் பதவி நீக்கம் செய்து விடுவதும் நடைபெறுவதாகக் கூறுகிறார்கள்.

இதுபற்றி ரஜினி மக்கள் மன்ற திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர் செல்வாவிடம் பேசினோம். ``தலைவர் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அறிவித்தபோதே, `அரசு பணிகளில் உள்ளவர்கள் மன்றப் பொறுப்புகளில் இருக்கக் கூடாது' என்று உத்தரவிட்டார். அதன்படி 4 மாவட்டச் செயலாளர்கள் தாங்கள் வகித்து வந்த பதவிகளிலிருந்து விலகி விட்டார்கள்.

ஆனால் தாயுமானவன் இன்றுவரை மன்னார்குடி அருகே உள்ள கூப்பாச்சிக்கோட்டை கிராமத்தில் அஞ்சலக ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இதுவே முதல் தவறு. அடுத்ததாக மாவட்டத்திலுள்ள 15 மன்றப் பதவிகளில் ``பணம் தருபவர்களுக்குப் பதவி தரப்படும்" என்ற முன்னுரிமையில் இதுவரை 4 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுத்திருக்கிறார்.

தாயுமானவன்
தாயுமானவன்

மீதம் 11 பதவிகளை நிரப்பாமல் பணபேரம் பேசி வருகிறார். இவர் பதவி கொடுத்த கந்தசாமி இந்த மாவட்டத்தை விட்டு வெளியேறி அடுத்த மாவட்டத்தில் வசிப்பவர்.

அதுபோல் வர்த்தக அணி இணைச் செயலர் பொறுப்பு வகிக்கும் அலெக்ஸ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூரில் தொழில் செய்து வசித்து வருகிறார். உள்ளூரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மன்றதுக்காக உழைத்தவர்களை ஓரம்கட்டிவிட்டு பணக்காரர்களுக்குப் பதவி தருவதை கொள்கையாக வைத்துள்ளார். இவர் யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கிக்கொண்டு பதவி கொடுத்து இருக்கிறார் என்பதற்கு என்னிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

இதுபற்றி விரிவாக தலைமைக்குப் புகார் கடிதம் அனுப்பினால் ராகவேந்திரா மண்டபத்தில் பணிபுரியும் வீரா சம்பத் என்பவர் மூலமாக தலைமைக்குச் செல்லவிடாமல் தடுத்து, இவருக்கே கடிதம் திரும்ப வந்துவிடுகிறது. புகார் எழுதிய சிலரையும் இவர் பதவி நீக்கம் செய்திருக்கிறார்.

கஜா புயலின் போது நிவாரண உதவிகள் செய்ய வந்த ஒருவருக்கு நான் உதவினேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னைத் தற்காலிக நீக்கம் செய்திருக்கிறார். ஊழலை எதிர்த்தும், நேர்மையான நிர்வாகத்தைத் தருவேன் என்றும் கூறும் தலைவரின் எண்ணங்களுக்கு நேர்மாறாக இவர் செயல்பட்டு வருகிறார்"என்று முடித்தார்.

ரஜினி மக்கள் மன்றம்
ரஜினி மக்கள் மன்றம்

இதுபற்றி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் தாயுமானவனிடம் விளக்கம் கேட்டோம். ``நான் மத்திய அரசின் அஞ்சல்துறையில் பகுதிநேர ஊழியராகத்தான் பணியாற்றுகிறேன். முழு நேர ஊழியர் அல்ல. நான் பதவி கொடுத்திருக்கும் கந்தசாமி கும்பகோணத்தில் பணிபுரிகிறார் அவ்வளவுதான். ஆனால் அவரது பூர்வீகம் திருத்துறைப்பூண்டி. அதுபோல் வர்த்தக அணி பொறுப்பிலிருக்கும் அலெக்ஸ் திருப்பூரில் பணிபுரிகிறார். ஆனால் அவர் சொந்த ஊர் எங்கள் மாவட்டம்தான். மற்றபடி என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு