Published:Updated:

`காஷ்மீர் - லடாக் துணைநிலை ஆளுநர்கள் நியமனம்' - மோடி வியூகத்தின் பின்னணி!

மோடி
மோடி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு, நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர்களின் பெயர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன. எதற்காக இவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.. இதிலுள்ள அரசியலென்ன?

காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு கிரிஷ் சந்திர முர்முவும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ராதாகிருஷ்ண மாத்தூரும் துணை நிலை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொறுப்புகளில் பி.ஜே.பி. முக்கியஸ்தர்கள் நியமிக்கப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் கருதின. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அதிகாரவட்டத்திலிருந்து ஆளுநர்களைத் தேர்வு செய்துள்ளார் மோடி. இதன் பின்னணி அரசியல் சுவாரஸ்யமானது.

கிரிஷ் சந்திர முர்மு, ஆர்.கே.மாத்தூர்
கிரிஷ் சந்திர முர்மு, ஆர்.கே.மாத்தூர்

காஷ்மீர் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஷ் சந்திர முர்மு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். குஜராத் கேடர் 1985 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், அம்மாநிலத்தின் முதல்வராக மோடி பணியாற்றிய போது, முதல்வரின் முதன்மைச் செயலாளராகப் பணிபுரிந்தவர். மத்திய நிதித்துறை சேவைகள் பிரிவில் கூடுதல் செயலாளராக இவர் பணிபுரிந்த போதுதான் பொதுத்துறை வங்கிகளுக்கு 2.1 ட்ரில்லியன் டாலர்கள் முதலீடுகள் வந்தன. பல வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டதன் பின்னணியிலும் இவரது செயல்திட்டம்தான் பிரதானம். மோடி, அமித் ஷாவின் நம்பிக்கையைப் பெற்றவரான முர்மு, காஷ்மீர் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில், ஜார்க்கண்ட் தேர்தல் அரசியலும் இருப்பதாகக் கூறுகிறது பி.ஜே.பி. வட்டாரம்.

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. ரகுபர் தாஸ் தலைமையிலான பி.ஜே.பி அரசு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள சகல வித்தைகளையும் களமிறக்குகிறது. இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள `சந்தால்’ பழங்குடியின மக்களின் வாக்குகளைக் குறிவைத்துதான், அப்பழங்குடியினத்தைச் சேர்ந்த கிரிஷ் சந்திர முர்முவுக்கு ஆளுநர் அந்தஸ்து அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பி.ஜே.பி.யின் தேர்தல் பிரசாரத்தில், இந்த நியமனத்தை மேற்கோள் காட்டி `சந்தால்’ குடியின மக்களின் வாக்குகளை வளைக்கவும் திட்டமுள்ளதாம்.

மோடியுடன் சீன அதிபர் ஜின்பிங்
மோடியுடன் சீன அதிபர் ஜின்பிங்

லடாக் துணைநிலை அளுநராக ஆர்.கே.மாத்தூர் நியமனமானதன் பின்னணியில் சீன வெளியுறவுக் கொள்கைதான் பேசப்படுகிறது. திரிபுரா கேடர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், மத்தியப் பாதுகாப்புத்துறை செயலாளராகவும் பணிபுரிந்த அனுபவமுள்ளவர். 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றியவர்.

குட்பை டு காஷ்மீர்: கவர்னர் ஆலோசகர்கள் விஜயகுமார், ஸ்கந்தன் திடீர் ராஜினாமா?

லடாக்கின் ஒரு பகுதியை அக்சாய் சின் என்கிற பெயரில் சீனா உரிமை கொண்டாடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத் தான், ஆர்.கே.மாத்தூரின் பெயரை ஆளுநர் பதவிக்கு மோடியே டிக் செய்ததாகக் கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் தேர்தல், சீனாவுடனான எல்லை மோதல் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை மோடி வீழ்த்திவிட்டதாகப் புளகாங்கிதம் அடைகிறது பி.ஜே.பி வட்டாரம்.

`மோடி அரசின் நாடகத்தில் பங்கேற்க விருப்பமில்லை!’ - காஷ்மீர் பயணத்தை மறுத்த ஐரோப்பிய எம்.பி

காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததில் பல அரசியல் காரணங்கள் இருந்தாலும், தனது ஐந்தாண்டு ஆட்சி முடிவதற்குள், காஷ்மீர், லடாக் பகுதிகளில் அதிகளவு முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சிப் பாதைக்குள் கொண்டு செல்லவேண்டும் என்பது மோடியின் திட்டம் என்கிறார்கள். இத்திட்டத்தை கிரிஷ் சந்திர முர்முவும், ஆர்.கே.மாத்தூரும் செயல்படுத்துவார்களா என்பது வரும்காலங்களில் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு