Election bannerElection banner
Published:Updated:

தொல்.திருமாவளவன் வாழ்க்கை வரலாறு: அரசு ஊழியர் முழு நேர அரசியல்வாதியாக மாறிய கதை - முழுமையான தொகுப்பு

திருமாவளவன்
திருமாவளவன்

1983-ல் நடந்த ஈழத்தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு, தனது முதல் அரசியல் நடவடிக்கையைத் தொடங்கினார்.

பிறப்பும் பின்னணியும்:

அரியலூர் மாவட்டம், செந்துரை அருகிலுள்ள அங்கனூர் கிராமத்தில் ஆகஸ்ட் 17, 1962-ம் ஆண்டு ராமசாமி, பெரியம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் திருமாவளவன். இவர் சாதி, மத அடையாளமற்ற தமிழ்ப் பெயரிடலை வலியுறுத்தி, கட்சித் தொண்டர்களோடு சேர்த்து, தன் தந்தையின் பெயரையும் தொல்காப்பியன் என்று தமிழில் மாற்றி தொல்.திருமாவளவன் ஆனார்.

படிப்பும் பணியும்:

சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்தவர், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பி.யூ.சி., சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வேதியியல், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை குற்றவியல் பயின்றவர், 1988-ல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர் அரசு தடயவியல்துறையில் அறிவியல் உதவியாளராக 1999-ம் ஆண்டு வரை அரசுப் பணியாற்றினார்.

கடந்த 2019-ம் ஆண்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

திருமாவளவன்
திருமாவளவன்

அரசுப் பணியிலிருந்து அரசியல் பாதையில்:

அம்பேத்கரின் மனைவி சவீதா ஆரம்பித்த `பாரதீய தலித் பேந்தர்’ அமைப்பின் தமிழக அமைப்பாளரான மலைச்சாமியுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, 1982-ல் தன்னை அவ்வமைப்பில் இணைத்துக்கொண்டார்.

1983-ல் நடந்த ஈழத்தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு, தனது முதல் அரசியல் நடவடிக்கையைத் தொடங்கினார்.

1986-ம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழ்க் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் நேரில் சென்று கலந்துகொண்டார்.

1989-ம் ஆண்டு 'பாரதிய தலித் பேந்தர்ஸ்' அமைப்பின் தமிழக அமைப்பாளர் மலைச்சாமி மறைய, 1990-ல் அந்த அமைப்பின் மாநில அமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமாவளவன். அதன் பின்னர் அமைப்பின் பெயரை `இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்’ என மாற்றியதோடு, புதிய கொடியையும் அறிமுகப்படுத்தினார். மீண்டும் 1991-ம் ஆண்டு அமைப்பின் பெயரை `விடுதலைச் சிறுத்தைகள்’ என மாற்றினார்.

தொடக்கத்தில் தேர்தல் அரசியலை விமர்சித்தும், புறக்கணித்தும் வந்த திருமா, 1999-ம் ஆண்டு ஜி.கே.மூப்பனாரின் உந்துதலின் பெயரில் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை த.மா.கா கூட்டணியுடன் சேர்ந்து சந்தித்தார். அதற்காகத் தனது தடயவியல்துறை அரசுப் பணியை ராஜினாமா செய்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக…

1999-ல் நடந்த மக்களவைத்தேர்தலில் த.மா.கா-வுடன் கூட்டணி வைத்து, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் தனது முதல் தேர்தலிலேயே தோல்வியடைந்தாலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார்.

திருமாவளவன்
திருமாவளவன்

2004-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து, சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு 2.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும் தமிழக அரசியலில் தனக்கான கவனத்தைப் பெற்றார்.

2009-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், வெற்றிபெற்று முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார்.

2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் இணைந்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமா தோல்வியடைந்தார்.

2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற திருமா, சிதம்பரம் தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

சட்டமன்ற உறுப்பினராக…

2001-ல் நடந்த சட்டமன்ற த்தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்து மங்களூர் ( மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டு, கடலூரோடு இணைக்கப்பட்டது) தொகுதியில் போட்டியிட்ட திருமா, முதன்முறையாக வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.

2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

சாதனைகளும் விமர்சனங்களும்:

2002-ம் ஆண்டு திருமாவளவன் பல்வேறு தமிழ் அறிஞர்களை சந்தித்து புழக்கத்தில் இருக்கிற ``சம்ஸ்கிருத வடமொழிகளுக்குச் சரியான தமிழ்ப் பெயர்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில், சாதி மத அடையாளங்களற்ற தூய தமிழ்பெயர்களை திருமாவின் தந்தை உட்பட ஆயிரக்கணக்கான அவரது தொண்டர்களும் மாற்றி வைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு தமிழறிஞர்கள், உணர்வாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவராலும் பாராட்டப் பெற்றது.

திருமாவளவன்
திருமாவளவன்

தனது வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றத்துக்காக அர்பணித்துக்கொண்டதால் திருமாவளவன் திருமணம் செய்துகொள்ளவில்லை. அரசியல் கடந்து திரைத்துறையிலும், இலக்கியத்துறையிலும் காலடி பதித்த திருமா, `அன்புத்தோழி’, `கலகம்’, `மின்சாரம்’ போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். `அத்துமீறு’, `தமிழர்கள் இந்துக்களா?’, `இந்துத்துவத்தை வேரறுப்போம்’, `அமைப்பாய் திரள்வோம்’ முதலிய புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

2018-ம் ஆண்டு தனது பிறந்தநாளையொட்டி, அழிந்துவரும் தமிழ்நாட்டின் தேசிய மரமான பனைமரத்தை மீட்டெடுக்கும் பொருட்டு, தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தைத் தொடங்கிவைத்து செயல்படுத்தியது இவரது குறிப்பிடத்தக்க சாதனையாக இருந்துவருகிறது.

`சாதி அரசியல் செய்கிறார், அவருடைய கட்சியினர் கட்டப்பஞ்சாயத்து போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர், இந்து மதத்திற்கு எதிராக செயல்படுகிறார் திருமா...’ போன்றவை மாற்றுக்கட்சியினரால் இவர்மீது வைக்கப்படும் அடிப்படைக் குற்றச்சாட்டுகளாக இருக்கின்றன.

`ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுப்பவன்’ என்பதே விமர்சனங்களுக்கு திருமாவளவன் கொடுக்கும் பதிலாக இருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு